ஞாயிறு, 26 பிப்ரவரி, 2012

கோடுகளைச் சேகரிப்பவன்
கோடுகளில் ஓடுவதில் அமைதி கிடைத்ததினால்
கோடுகள் சிலதைக் காட்டி மகிழ்வித்ததினால்
கோடுகளைக் கொண்டு அடைய முடிந்ததினால்

கோடுகள் உணர்த்த
கோடுகளில் உணர்த்த முடிந்ததினால்

கோடுகளால் அல்லது
கோடுகளோடு வாழவும் முடிந்ததினால்

கோடுகளும் கலை எனப்பட்டதினால்

எல்லா கோடுகளையும் சேகரித்துக்கொண்டிருக்கிறேன்.
#
செந்தில் பாலா

சனி, 18 பிப்ரவரி, 2012

செந்தில்பாலாவின் கவிதைகள் : 2பாதை

சிறு ஊசிகளாக் தெரிவது
கடபாறைகளாகின்றன.
துரும்பென வழியிலிருப்பது
வழிமறிக்கும் தூண்களாகின்றன
சிறு கற்களெல்லாம் பாறைகளாகின்றன

இடம் தெரியாமல் கிடக்கும் சிறுகல்லுக்கொன்றும்
எல்லாவற்றையும் மறைத்து நிற்கும்
பெரும் பாறைக்கொன்றுமாக 
விரிந்து கிடக்கும் கால்களுக்கிடையில்
நகராமலேயே நிற்கிறது
பாதை.
#


#

எனைக்குறித்து எந்த கவலையுமற்று
வந்து கொண்டிருக்கின்றன நெருக்கடிகள்

சுற்றியிருப்பவைகள்கூட எனைக்குறித்து
கவலைபடுவதாக இல்லை.

சுழன்று கொண்டிருக்கும் மின்விசிறியும் சரி
எரியும் குழல்விளக்கும் சரி
நிறுத்துனால் நின்றுவிடும் போலிருக்கிறது.
#

#

எந்த மரத்தினடியில்

இளைப்பாறினேனோ
அதே மரம்தான்
என்மேல் சரிந்து
தன் மரணத்தை அறைந்தது.
#
இன்றைய எனக்கான பகல்நேரம்
ஜன்னலில் எட்டிப்பார்த்தபடி
காத்திருப்பது க்ண்டு
தாழ்பாலுக்கு ஓய்வளித்து
கதவு திறக்க
வெப்பத்தின் வலி பொருக்காது
புரண்டு கொண்டிருந்தது
நேற்றைய குப்பைகள்.
#
#

எதையாவது எழுதாமல்

தூங்க முடிவதில்லை என்பதெல்லாம்
நிச்சயம் எனக்கு கிடையாது

இதையெல்லாம் எழுதியிருக்கலாமே
என்றபடியே தூங்கிக் கொண்டிருக்கிறேன்.
#செந்தில்பாலாவின் கவிதைகள்


கணக்கு

எல்லாவற்றிற்கும்
ஏன்
எல்லோருக்குள்ளும் கூட
ஒரு கணக்கு இருக்கிறது

மவுனத்துக்குள்ளும்
முணுமுணுப்புக்குள்ளும்
புலம்பலுக்குள்ளும்
ஏன்
வேடிக்கைப்பார்ப்போருக்குள்ளும் கூட
ஒருகணக்கு இருக்கிறது.

அவரவருக்குள்ளும் ஒரு கணக்கு
ஒடிக் கொண்டே இருக்கிறது

எல்லாவற்றிற்கும் கணக்கு பார்க்க முடியாது,
கூடாது
என்பதிலும் ஒரு கணக்கு இருக்கிறது

உள்ளுக்குள் ஒடிக் கொண்டிருக்கும் கணக்கிற்கும்
வெளியில் பேசும் கணக்கிற்கும்
சம்பந்தமே இருக்காது
ஆனால் இருக்கும்.

ஒரு கட்டத்தில் எல்லா கணக்குகளும்
பொய்த்துப் போகின்றன

அனாயாசமாக
கணக்கு 
அது ஒரு கணக்கை போட்டுவிட்டு
மிக இயல்பாக போய்கொண்டே இருக்கிறது.
#சேகரித்தல்

பிரமாண்டமாக நினைக்க வேண்டும்

என்பதற்காக என்னை நான் சேகரிக்கிறேன்.

இசை பித்தனாக்கிக் கொள்கிறேன்
ஓவியனாக காட்டிக் கொள்கிறேன்
தேர்ந்த பேச்சாளனைப் போல பேசி பழகுகிறேன்
எழுதுகிறேன்
என்னைப் பற்றிவரும் செய்தித்தாள் துணுக்குகளை
வெட்டிக்கொள்கிறேன்
வாய்ப்பு கிட்டுகையில்
பிரபலங்களுடன் புகைப்படங்களாகிறேன்
இதையெல்லாம் செய்து பிரமிப்பூட்டவேண்டுமென்று
எதையெதையேர் படிக்கிறேன்.

என்றாவது ஒரு நாள்
அவள் அம்மா சொல்லப்போகும்
அவதூறுகளை மறுத்துப் பேசும்
என் மகளுக்காகவேதான்
இன்றும்
என்னை நான் சேகரிக்கிறேன்.
#கவனம்

கேட்பாரற்று கிடப்பது பற்றி எழுதி
யாரிடமாவது படித்துக்காட்டும் பொருட்டு

கவிதை குறித்தும், 
கவிதை களம் குறித்தும்
பேசத் தொடங்கிவிடுகிறேன்

எதிரிலிருப்பவர்கள் கவனம் 
இங்கில்லை என்பதிலிருதுதான்
தெரிந்து கொள்கிறேன்
எனது கவிதையோடே
செத்துக் கொண்டிருக்கிறேன் என்று


#