ஞாயிறு, 4 மார்ச், 2012

புதுக்கவிதையில் பேச்சு மொழி



தமிழ்ப் புதுக்கவிதைகளின் பேச்சு மொழியும் 
அவற்றின் தனித்தப் போக்குகளும்
செந்தில் பாலாவின் கவிதைகளை முன் வைத்து...  )

இல்லோடு சிவா 
இளமுனைவர் பட்ட ஆய்வாளர்/ சுப்பிரமணிய பாரதியார் 
தமிழியற்புலம்,புதுவைப் பல்கலைக்கழகம்,
புதுச்சோரி - 14.


உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் என்னும் நவீன வாழ்க்கையின் நெருக்கடிகளுக்குள் மனிதன் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அதிகம்.   இந்நிலையில் வாழ்க்கையின் எதார்த்தங்களையும், புதிர்களையும், அடக்கு  முறைகளையும், மன உணர்வுகளையும் வெளிப்படுத்துவதாக, படைப்புகள் கருக்கொள்கின்றன.

இத்தகைய சூழலில் வாழ்வின் எல்லாவற்றையும் பூடகமாகவோ அல்லது  நேரிடையாகவே பட்டெனச் சொல்லிவிடும் கருவியாக புதுக்கவிதை உள்ளது.  புதுக்கவிதைகளின் போக்குகளில் பாரதி முதற்கொண்டு பின்வந்த பலரும் பல்வேறு பாடுபொருள்களையும், வடிவங்களையும் கையாண்டுள்ளனர்.  அவ்வகையில் தமிழ்ப் புதுக்கவிதைகளின் போக்குகளில் பேச்சு மொழியிலான கவிதைகள் தனித்த கூறாக இருப்பதை அறிய முடிகிறது.  அதனடிப்படையில் பேச்சுமொழிக் கவிதைகளின் தேவைக்கான காரணமும், அவற்றின் தனித்தப் போக்குகள் செந்தில்பாலாவின் கவிதைகளில் வெளிப்படும் விதத்தையும் எடுத்துக் காட்டுவதாக இக்கட்டுரை அமைகிறது.  பொதுவான எழுத்து மொழியிலிருந்து பேச்சு மொழியிலான படைப்புகள் ஏன் வெளிவரத் தொடங்கினஎன்பது இங்கு சிந்தித்தற்குரியது.

நகரத்தில் இருந்து புறக்கணிக்கப்பட்ட கிராம வாழ்வியலும், மேட்டுக்குடியினரால் புறந்தள்ளப்பட்டவர்களாக தலித்துகளும், ஆணாதிக்கத்தால் கொடுமைகளுக்குள்ளாகும் பெண்களும் ஒடுக்கப்பட்டவர்களாகவே உள்ளனர்.காலம் காலமாக இத்தகைய அவலம் தொடர்ந்து கொண்டிருக்கிற நிலையில் இவர்களுக்கு  பொதுவான எழுத்து மொழி எந்தப் போர்க்குரலையும் எழுப்பாமல்; அப்படியே எழுப்பினாலும் அது மேட்டிமைத் தனத்தையே காட்டுவதாக உள்ளது.

இதிலிருந்து இவர்களின் வாழ்க்கையை பதிவு செய்யும் ஒரே கருவியாக பேச்சு மொழி  அமைகிறது.  இதனையே தங்களின் விடுதலையின் போர்க்குரலாகவும் ஒடுக்கப்பட்டவர்கள் முன்னெடுத்தனர்.
மனிதப் பண்பாட்டின் ஆரம்பத்தில் சொல்லாடல்என்பது செயல்பாடாக விளங்கியது;  இச்சொல்லாடல் எழுத்து மொழியாக மாற்றம் அடையும் போது தனிநபர்வாதம்’  முளைக்கிறது;  கூடவே நிலவுடைமைச் சமூகத்தில் அதிகாரத்திற்கான ஒரு கருவியாக மாறுகிறது1  (பூக்கோ - இந்தியன் லிட்ரச்சர்- எண்: 163)என்று  பூக்கோ எனும் அறிஞனின்  கூற்றனாலும்,
ஒடுக்கப்பட்ட மக்களின் துயரங்களையும், போராட்டக் குரலையும் பேச்சுமொழியிலான கவிதைகளில் காண முடியும்2 எனும் அன்பாதவன் கூற்றினாலும் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

ஒடுக்கப்படும் மக்களின் மன உணர்வோட்டங்களை,  இயல்பாக எந்த சொல் அலங்காரமும் இல்லாது கவிஞன் தன் வாழ்வனுபவத்தின் வாயிலாக தனக்கு கைவரப்பெற்ற மொழியில் படைக்கிறான்.  இதனையே மார்க்ஸிய அறிஞர் கோவை ஞானியும்,பேச்சு மொழியில் இருந்து கூட கவிதை தனக்கான மொழியை படைத்துக் கொள்கிறது என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள்3எனக் கூறுகிறார்.

இத்தகைய நிலையிலேயே ஒடுக்கப்பட்டோருக்கான தனித்த இலக்கிய மொழியாக பேச்சுமொழி நாட்டுப்புறப்பாடல் தொடங்கி தமிழ் இலக்கியப் பரப்பில் தொடர்ந்து இருந்து வந்துள்ளது.  அது தமிழ்ப் புதுக்கவிதையிலும் சாத்தியமாயிற்று எனலாம்.

தமிழ்ப் புதுக்கவிதையின் தொடக்கத்தில் இருந்து இன்று வரை மக்கள் பேசும் மொழியைக்  கவிதையின் இடையிடையே பயன்படுத்தி பல கவிதைகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன.  இத்தன்மையிலிருந்து 1980-களுக்கு பிறகு கவிதையினை முழுக்கவே பேச்சு மொழியில் எழுதுகிற முறை தோன்றி தனித்தப் பாணியாக மாறியது.அவ்வகையில் 1988-ல் வெளியான சனங்களின் கதைஎன்ற பழமலயின் கவிதைத் தொகுப்பு பேச்சுமொழி மற்றும் உரைநடையிலான புதுக்கவிதை பாணியை அறிமுகப்படுத்தியது.  இன்று வரை எழுதி வருகிற அவருடைய தனித்த பாணியை  பேச்சுமொழியிலான கவிதைகளின் தொடக்கம் எனலாம். 

இதனை,
கவிதையிலும் சரி,  கவிதையை பின் குறிப்புகளுடன் பதிப்பித்த முறையிலும் சரி,  ஒரு புதிய சொல்லல் முறையைத் தொடங்கி புதிய பாணியை உருவாக்கியவர் பழமலய் என்பது இன்று இலக்கிய வரலாற்று உண்மையாகியிருக்கிறது.4என க.பஞ்சாங்கம் குறிப்பிடுவதிலிருந்தும் அறியலாம்.

பழமலய் மக்கள் மொழியும், கவிதை மொழியும் ஒன்றே எனக் கண்டவர்.  இக்கவிதை பாணி தொண்ணூறுகளில் பேரலையாய் பரவிய தலித் இலக்கியத்திற்கும் வித்திட்டது எனலாம்.  இதன் விளைவாக பலர் தங்களது ஊரையும், உறவையும், நினைத்துப் பார்த்து அவற்றிலுள்ள கவிக்கூறுகளைப் படைப்பாக்கினர்.  அடக்கு  முறைகளுக்கு எதிரான கலகக்குரலாக தலித்திய கவிதைகளும் பல வெளிப்பட்டன.  இத்தகைய நிலையிலேயே செந்தில் பாலாவின் கவிதைகளும் அமைகின்றன.  இவர் கிராமிய மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியல் பதிவுகளை தன்னுடைய கவிதையாக்கியுள்ளார்.

செந்தில்பாலா

இவர் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டத்திலுள்ள நெகனூர்-புதூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்.  ஓவியம், கவிதை, குறும்படம் என்ற மூன்றிலும் தனது நவீன முகத்தைப் பதித்து வருகிறார்.நடவு, கல்வெட்டு பேசுகிறது, சிறகு, அணி, வடக்குவாசல், தூறல், ஆயுத எழுத்து, உழைப்பவர்ஆயுதம், நறுமுகைஎன பல சிற்றிதழ்களில் எழுதி வருபவர்.  இவருடைய கவிதைகள் கதைகள் தீர்ந்த போது அம்மா சொன்ன கதைகள்என்ற தலைப்பில் செஞ்சி நறுமுகை வெளியீடாக 2007-ல் வந்துள்ளது.  இத்தொகுப்பானது செஞ்சி வட்டாரத்திலுள்ள கிராம மக்களின் வாழ்க்கையையும், அவர்களினூடே பின்னிப் பிணைந்துள்ள மண்சார்ந்த பேச்சு மொழியினையும் வெளிப்படுத்துவதாக இருக்கிறது.  இதுவே இதன் தனித்தப் போக்காகவும் உள்ளது.  இதனை இத்தொகுப்பின் தலைப்பு, வழக்காறு, உறவுச் சிக்கல்கள், கதைக்கூறுகள், கிராமியப் பெண்களின் நிலைப்பாடுகள், கல்விமுறை, சாதிய ஒடுக்குமுறை என்பனவற்றைக் கொண்டு அறியலாம். 

தலைப்பு :  (கதைகள் தீர்ந்தபோது அம்மா சொன்ன கதைகள்)
பொதுவாக கிராமங்களில் கதை சொல்லும் மரபு இருந்து வருகிறது.  அதில் ராசா கதைகள், விலங்கு ககைள்பேய் கதைகள், அதிசய கதைகள் என பல கதைகள் சொல்லப்படுவதுண்டு.  இவை அடிக்கடி சொல்லப்பட்ட கதைகளாகிற போது கதைகள் தீர்ந்து போகின்றன.  புதியதாய் கதை கேட்டு அடம் பிடிக்கிற குழந்தைக்கு தாய் தன் துயரங்களையே கதையாக்கி சொல்வதையே இத்தலைப்பு உணர்த்துகிறது.  இதனை,
பாட்டி கதைகளை விட
அம்மா சொன்ன கதைகள் அதிகம்
கதைகள் தீர்ந்த போது சொன்ன கதைகள்
அவளுடையதாய் இருந்தன
…………………………………..
…………………………………..
பாட்டி கதைகளை விட
அம்மா சொன்ன கதைகள் அதிகம்5 - ப.18
என்ற தலைப்பு தேர்விற்கான இக்கவிதையிலிருந்து அறியலாம்.

வழக்காறு :
ஒவ்வொரு வட்டாரமும் ஒரு வழக்காற்றினைக் கொண்டுள்ளது.  வழக்காறு என்பது மக்களின் தொழில், சடங்குகள், நம்பிக்கைகள், வழிபாடுகள், கலைகள் ஆகியவற்றின் வாயிலாக வெளிப்படுகிற சொற்கூறு6 என ஆ. சிவசுப்பிரமணியன் கூறுகிற அடிப்படையில் செஞ்சி வட்டார வழக்காற்றுச் சொற்களாக,
செரங்கா   - கையளவு (சிறிதளவு),
பலுக்கி    - தண்ணீரை பரவலாக விசுறுதல் அல்லது அடித்தல்,
வெசாலம்  - தெருவை அடைத்தபடி ஓடுதல் போன்றவையும்,

வேளாண்மை சார்ந்த வழக்கு சொற்களாக,கல்லாங்குத்து, துண்டு, மென, கெனத்து மோடு,  வாபூட்டு, கல்லாஞ்சரடு, மோழி போன்றவையும்,
மரப்பெயர்களாக, காட்டுவா, இளப்பம், பூவரசம், நொனா, வாழ, தேக்கு, ஆகியவற்றையும் பதிவு செய்கிறார்.  இவற்றின் வழி கிராம வாழ்வியலை உணரமுடிகிறது.

உறவுச் சிக்கல் :
கிராமங்கள் உறவுகளால் இணைந்தவை, குடும்பகளே கிராமங்களின் உயிர்களாக உள்ளவை.  தந்தை - மகன்,  தாய் - மகள்,  கணவன் - மனைவி, மாமன் - மைத்துனன்,  பங்காளிகள் என உறவுகள் ஒன்றோடென்று பின்னிப் பிணைந்தவை.  ஆயினும் அவர்களுக்குள் ஏற்படுகிற முரண்பாடுகளும் பல.  தந்தை - மகன் உறவு நிலை முரண்பாட்டை
அறுத்துக்க கூடாதுன்னு
புடுங்க முடியாத மல்லாட்டைய
சரவுசரவா தண்ணி பலுக்கி புடுங்கியும்
அறுத்துகினு போறத
கலகட்டால நோண்டி
பொறுக்கி எடுத்துட்டு
கடைசியா
புட்டுகூட எடுத்து
தப்பு மல்லாட்டையையும்
பொறுக்குற தாத்தா
அறுத்துகினு தனியே வந்த
அப்பாவ சேக்கவே இல்ல.7 - ப.30
என தங்கள் வாழ்வின் வேளாண்மை சார்ந்த பதிவுகளோடு உறவுப்பிரிவை இணைத்தே காட்டுகிறது.

கதைக்கூறு :
கதைக்கூறு என்பது தனித்த இலக்கிய வடிவமாயினும், இப்பேச்சு மொழியிலான கவிதைகளிலும் கதைக் கூறுகள் இடம்பெறுகின்றன.  பழமலயின் முதல் தொகுப்பே சனங்களின் கதைஎன்பதாகவே உள்ளது.  அதில் பழமலயும் தன் மக்களின் கதைகளையே கவிதையாக்கியுள்ளார்.  செந்தில் பாலாவின் இக்கவிதைகளிலும் கதைக்கூறு இயல்பாக அமைந்துள்ளது.
கொல்லையில நடந்த வேறு ஒரு சண்டையில்
மண்ணை வாரி விட்டது பற்றி
இப்போது மறந்திருப்பார்
தாத்தா’………………… ப.7 என்றும்

முன்னே ஒரு செரங்கா
பின்னே ரெண்டு செரங்கா என
ஒரே பல்லாவில்
இருவரின் அரிசியும் பொங்க
படையலாகும் பொன்னியம்மன் கோயிலில்’…………… ப.8
என்றும் வாசகர்களுக்கு கதை சொல்லுகிற பாணியில் அமைத்து கவிஞர் கவிதைகளாக்குகிறார்.

ஊர் கதைகளைப் பேசுகிற கிராமவாசிகளைப் பற்றி குறிப்பிடுகையில்
பயிர மேயாதபடி
ஏர் மாட்டுக்கு
வா பூட்டு போட்டு
லதக்  புதக் கென்று
கலப்பசால் ஓட்டும்
இவர்கள் வாய்க்கு
ஒரு பூட்டும் போட்டுக் கொள்வதில்லை
ஊர் கதையை மேயாதபடி9 ப.45 என்பதனாலும் அறிய முடிகிறது.

பெண்களின் நிலைப்பாடு : 
கிராமங்களில் வாழக்கூடிய பெண்கள், ஆணாதிக்கச் சமூகத்தின் தொடரோட்டத்திலேயே வாழ்கிற அவலம் தொடர்ந்து கொண்டு தான் உள்ளது.  அவர்களை உயிர்களாக கூட மதிக்காத ஆண் மன நிலையை,
ஆனத்தூர் கருமான் வீட்டிற்கு
ஆள் அனுப்பி
குளம்பு தேய்ந்து
நொண்டின மாட்டுக்கு
லாடம் கட்டின அப்பாவுக்கு
தோன்றுவதே இல்லை’…………
அம்மாவுக்கு செருப்பு வாங்கி தரப.40 எனும் கவிதையும்,

பாட்டிகதைகளைவிட
அம்மா சொன்ன கதைகளே அதிகம் -ப.18
எனும் கவிதையும் கவிஞரின் மூலமாக யதார்த்தமாக பதிவாகின்றன.

சாதிய ஒடுக்குமுறை :
அநீதிகளை எதிர்ப்பது போராளியின் ஒரு குணமாக விளங்குகிறது.  தன்னைச் சுற்றி நடக்கும் கொடுமைகளுக்கு எதிராக கலகக்குரல் எழுப்புகிற படைப்பாளியும் ஒரு போராளியே.  இந்நிலையிலேயே தலித்திய படைப்பாளர்கள் பலரும் எழுதி வருகின்றனர்.  பேச்சு மொழிக் கவிதைகளில் வசை சொற்களும் வந்து அமையும்.  இவருடைய கவிதைகளில் வசை சொற்கள் இல்லையென்றாலும் ஒடுக்கப்பட்ட மக்களிடையே காணப்படுகிற அடிமைத்தன அடையாளத்தை பதிவு செய்கிறது.  அதனை, அம்மக்களின் இயல்பான பேச்சு மொழியைக் கொண்டு தனது கவிதைகளின் மூலம் ஆதிக்க சமூகத்தின் காதில் இடியோசையை எழுப்பியுள்ளார்.  அவற்றின் பதிவுகளாக,

நடப்பு, அறுப்பு, களவெட்டு
எந்த வேலையாக இருந்தாலும்
சின்ன கொழந்த வீட்டுல
இருந்துதான் தொடங்கும்
……………………………
வேலையில  இடையிடையே
தாகமெடுத்தவளெல்லாம்
தாளாய்போய் தண்ணீர் குடிப்பா
……………………………
சின்னக் கொழந்த கெழவி மட்டும
தொனைக்கு ஆள் கூப்பிடும்
சொம்புல மொண்டு
தூக்கி ஊத்தறதுக்கு’……….. ப.27
எனும் கவிதை தலித் மக்களிடையே அவர்களின் உழைப்பையும் கொண்டு, ஒதுக்கப்பட்டவர்களாக ஆக்கியுள்ள ஆதிக்க அரசியலை வெளிப்படுத்துகிறது.

நெகனூர் கூத்து என்கிற தலைப்பில் எழுதியுள்ள கவிதையான
மகாபாரத கூத்து
பார்த்து சென்றவர்கள்
பிரமாதமென்றனர் கண்ணன் வேடம்
அற்புதமோ அற்புதம்
உபயக்காரர் வீடு போன போதுதான்
உடைந்தது குட்டு
சண்டை
பின் எல்லோரும் பாயில்
ஒருவன் மட்டும் தரையில் ப.19
இதில் இன்னும் கிராமங்களில் இருக்கிற மேட்டுக்குடி மக்களின் ஆதிக்கத் தனத்தையும் தலித் மக்களின்  பிரச்சினைகளையும் அறியலாம்.
ஒடுக்கப்பட்ட மக்களின் பேச்சு மொழிகளாக கவிஞர் பதிவு செய்கிற சொற்களினூடான கவிதை, ஒன்தா த, நில்லு த, நானும் வரன், இன்னாத கூப்ட கூப்ட போயிகினே கிற14 ப.62 என்று  தன் மக்களின் மொழியையே அப்படியே பதிவு செய்கிறார்.

அடிமை வாழ்வை, அடக்கு  முறைகளை, உயிருள்ள மனிதர்களாகவே மதிக்காத அதிகார பீடங்களை, மத  ஆளுமையை சட்டையைப் பிடித்து உலுக்கி தன்பக்க நியாயத்தை உணர்த்தும் வகையில் பொங்கி எழுகின்ற தலித்துகளின் குரல் பேச்சு மொழியாகத்தானே இருக்க முடியும்15 - ப.25
என்கிற அன்பாதவனின் கூற்றும் இங்கு பொருத்திப் பார்க்கத்தக்கது.

முடிவாக பேச்சு மொழியிலான கவிதைகளின் போக்குகள் மண்சார்ந்த பல்வேறு பதிவுகளாக அமைகிறது.  அதில் செந்தில் பாலாவின் கவிதைகள்  செஞ்சி வட்டார மக்களின் பேச்சு வழக்கினையும் அவர்களுடைய வேளாண்சார் மரபுகளையும் தெளிவாக படம் பிடித்து காட்டுகிறது.  அதைக் கவிதைகளில் நோக்குகையில் வழக்காறு, கதைக்கூறு, கிராம வாழ்வியல் பதிவு, வேளாண்  மரபு, உறவு முறை, பெண்களின் நிலைப்பாடுகள், சாதிய அடக்குமுறை போன்ற போக்குகளின் மூலம் அமைந்துள்ளதை தெளிவாக அறிய முடிகிறது.

அடிக்குறிப்பு :
1. க. பஞ்சாங்கம் கட்டுரைகள் (இன்றைய இரட்டை மொழி தமிழின் சிக்கல்).
2. அன்பாதவன் - தீ இனிது, நீர் இனிது.
3. அன்பாவன் - கவிதையின் திசைகள்.
4. ஆ. சிவசுப்பிரமணியன் கட்டுரைகள் - வழக்காறுகள்
5. அன்பாதவன் - தீ இனிது, நீர் இனிது.

துணை நூற்பட்டியல் :
1.  செந்தில் பாலாவின் - (கதைகள் தீர்ந்த போது அம்மா சொன்ன கதைகள்).
2.  பழமலய் கவிதைகள் - கவ்யா - சண்முக சுந்தரம்.
3.   தீ இனிது, நீர் இனிது -  அன்பாதவன்.
4.  கவிதையின் திசைகள் - அன்பாதவன்.
5  இருபதாம் நூற்றாண்டு தமிழ்க் கவிதை புதிய போக்குகளில் தோற்றம் வளர்ச்சி    - து. சீனிச்சாமி.
6.  ஒரு விமர்சகளின் பார்வையில் - க. பஞ்சாங்கம்.
7.  க. பஞ்சாங்கம் கட்டுரைகள் (நவீன வாசிப்பு கோட்பாடுகள்).