ஞாயிறு, 18 நவம்பர், 2012

ஆற்றுப்படை நூல்களில் புறத்திணைக் கூறுகள்


ஆற்றுப்படை நூல்களில் புறத்திணைக் கூறுகள்

 பா.குப்புசாமி
உதவிப்பேராசிரியர், தமிழ்ப்பிரிவு ,
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,
சிதம்பரம்.

          ற்றுப்படை நூல்கள் புறத்திணையைச் சார்ந்தது என்பது அனைவரும் அறிந்தது. வறுமையில் வாடும் கலைஞர்கள் மன்னர்களைப் புகழ்ந்து பரிசில் பெற்று தம் வாழ்வை மேம்படுத்திக் கொள்வர்.  அவ்வாறு அவர்கள் புகழ்ந்து பாடும் பாடல்கள் வீரம், கொடை முதலான புறத்திணை சார்ந்தவைகளாக அமைந்திருக்கும்.  அப்படி அவர்கள் பாடிய பாடல்களில் தொல்காப்பியர் குறிப்பிடும் புறத்திணை இலக்கணங்கள் அமைந்துள்ளதைக் காணமுடிகிறது.  அப்படி அமைந்த பாடல்கள் சிலவற்றை இங்கு காணலாம். தொல்காப்பியர் வகுத்துள்ள  புறத்திணை ஏழனுள் பாடாண்திணை என்பது முழுக்க முழுக்க ஆற்றுப்படையோடு பொருந்தும் திணையாகும்.  எனவே அதை விடுத்து பிற திணைகளை ஆற்றுப்படை நூல்கள் எவ்வாறு கையாண்டுள்ளன என்பன பற்றி இனி காணலாம்.

குடிநிலை

          வெட்சித் திணையில் வரும் குடிநிலை என்னும் துறை அரசனது குடிச்சிறப்பைப் போற்றும் துறையாகும்.  இத்துறையில் மன்னனது பரம்பரை அவர்களது வீரம் கொடை முதலிய சிறப்புகள் அனைத்தும் தொகுத்துத்தரப்படும் இத்தகு குடிநிலையைத் தொல்காப்பியர்,

          ‘‘மறங்கடைக் கூட்டிய குடிநிலை’’            (தொல் – பொருள். 62)
என்று குறிப்பிடுகின்றார். தொல்காப்பியரது இந்த இலக்கணத்திற்கு ஏற்ப சிறுபாணாற்றுப்படையில் வரும் ஒருபாடல் நல்லியக்கோடனது குடிப்பெருமையைப் பற்றிப் பேசுகிறது அப்பாடலடிகள் வருமாறு,

          ‘‘நன்மா இலங்கை மன்ன ருள்ளும்
          மறுவின்றி விளங்கிய வடுவில் வாய்வாள்
          உறுபுலித் துப்பின் ஓவியர் பெருமகன்’’
(சிறுபாணாற்றுப்படை. 121-123)

இதேபோன்று பெரும்பாணாற்றுப்படையில் ஒருபாடல் தொண்டைமான் இளந்திரையனது குடிப்பெருமையைப் போற்றுகின்றது.  அப்பாடல் வருமாறு,

          ‘‘முந்நீர் வண்ணன் பிறங்கடை அந்நீர்த்
திரைதரு மரபின் உரவோ னும்பல்’’ 
                (பெரும்பாணாற்றுப்படை. 30-31)
இளந்திரையனது குடிப்பெருமையைக் கூறிய இப்பாடலைப் போன்று பெரும்பாணாற்றுப்படையில் வேறொரு இடத்திலும் இளந்திரையனது  குடிப்பெருமை சுட்டப்பெற்றுள்ளன.  அப்பாடலடிகள் வருமாறு,

‘‘யான தாக்கினும் அரவுமேற் செலினும்
நீனிற விசும்பின் வல்லேறு சிலைப்பினும்
சூன்மகன் மாறா மறம்பூண் வாழ்க்கை
வலிக்கூட் டுணவின் வாட்குடிப் பிறந்த’’  
                               (பெரும்பாணாற்றுப்படை. 34-37)
மேலே சுட்டப்பட்ட பாடல்கள் மன்னனது குடிப்பெருமையைப் பற்றிப் பாடப்பட்ட குடிநிலை என்னும் துறைக்குரிய பாடல்களாகும். மன்னர்களைப் புகழ்வதோடு  இப்படி முன்னோர்களைப் புகழ்வதாலும் மன்னர் மனம் மகிழ்வடையும் என்பதை கலைஞர்கள் அறிந்திருந்தனர். எனவே பரிசில் பெற வரும் புலவர்கள் அரசனது முன்னோர் வரலாறுகளை அறிந்து வைத்துக் கொண்டு செல்வர்.

பூவைநிலை

          பாடப்படும் மன்னனை தெய்வத்தோடும் சூரியனோடும் ஒப்பிட்டுப்பாடுவது பூவை நிலையாகும். உலக மக்களால் மிக உயர்ந்தவர்களாக் கருதப்படுவோர் தேவர்கள். இதேபோன்று மிக உயர்ந்த பொருளாகக் கருதப்படுவது சூரியன் எனவே மன்னனைப் புகழ எண்ணும் புலவர்கள் அவனை தெய்வத்தோடும் சூரியனோடும் உவமையாக வைத்து பாடுகின்றனர்.  இதனைத் தொல்காப்பியர்,

          மாயோன் மேய மன்பெருஞ் சிறப்பில்
          தாவா விழுப்புகழ்ப் பூவைநிலை’’             (தொல் - பொருள். 63)
என்று குறிப்பிடுகின்றார்.  இந்த இலக்கணத்தோடு பொருந்திவரும் பொருணராற்றுப்படை பாடல் ஒன்று வருமாறு,

          ‘‘பவ்வ மீமிசைப் பகற்கதிர் பரப்பி
          வெவ்வெஞ் செல்வன் விசும்புபடர்ந் தாங்கு’’
          (பொருநராற்றுப்படை. 135-136)
இப்பாடல் கரிகால் வளவனை சூரியனோடு ஒப்பிட்டுப் பாடுவதாக அமைந்துள்ளது. உலகில் மிக உயர்ந்து மிக்க ஒளியினைப் பரப்பி வின்னில் படர்ந்திருப்பது போன்று கரிகால் வலவன் உலக மக்களை மேன்மையான இடத்திலிருந்து காக்கின்றன் என்னும்படி உவமையாகப் பாடப்படுகின்றது.

கொற்றவள்ளை

          தோற்ற மன்னன் வென்ற மன்னர்க்கு வரி செலுத்துவது அக்கால வழக்கு. வென்ற மன்னர் அப்பொருள்களைத் திரட்டி வறுமை என்று வருவோர்க்குக் கொடையாக அளிப்பான். பாட வரும் புலவர்களும் அத்தகு வறுமை நிலையில் இருப்பதால் அத்தகைய வரிப்பணத்தைப் பற்றி நினைவு கூர்வார்கள்.  இதனைத் தொல்காப்பியர் வஞ்சித் திணையில் கொற்றவள்ளை என்ற துறையில் பின்வருமாறு குறப்பிடுகின்றார்,

‘‘குன்றாச் சிறப்பின் கொற்ற வள்ளை’’               (தொல் - பொருள். 65)
இந்தத் துறையின் இலக்கணப்படி அமைந்த பொருநராற்றுப்படை பாடல் ஒன்று வருமாறு,
          ‘‘உயிர்ப்பிடம் பெறாஅ தூண்முனித் தொருநாள்
          செயிர்த்தெழு தெவ்வர் திறைதுறை போகிய
          செல்வ செறுமெந் தொல்பதிப் பெயர்ந்தென
          மெல்லெனக் கிளந்தன மாக வல்லே’’                       
 (பொருநராற்றுப்படை. 119-123)
இப்பாடல்மூலம் கரிகால் வளவனிடம் தோற்ற அரசர்கள் திறையாக பொருள்கள் பலவற்றைக் கொண்டுவந்து குவித்ததை அறியமுடிகிறது. இதன் மூலம் கரிகால் வலவன் பல நாடுகளுக்குச் சென்று பல மன்னர்களை வென்றுள்ளான் என்பது தெறிகிறது. குவிந்துள்ள திறைப்பொருள் தமக்கு சிறிது கிடைக்கும் என்ற எண்ணத்தில் பொருநர்கள் படியுள்ளதை இப்பாடல் தெளிவு படுத்துகிறது.

குற்றுழிஞை

          தனது படை வலிமை குன்றிய நிலையில் வீரன் ஒருவன் தன் உயிர் தப்பினால் பொதும் என்று பின் வாங்கி ஓடாமல் இறந்தாலும் போராடி இறக்க வேண்டும் என்று  தான் ஒருவனாகவே நின்று பகைவருடன் மோதுவது குற்றுழிஞை ஆகும்.  இதனைத் தொல்காப்பியர் உழிஞைத் திணையில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்,

          ‘‘திறல்பட ஒருதான் மண்டிய குறுமையும்’’  (தொல் - பொருள். 68)
இதனைப் புறப்பொருள் வெண்பாமாலை அழிபடை தாங்கல் என்ற துறையில் குறிப்பிடுகிறது.  தொல்காப்பியரது இந்த இலக்கணப்படி சிறுபாணாற்றுப்படையில் வரும் ஒருபாடல் வருமாறு,

          ‘‘விரிகடல் வேலி வியலகம் விளங்க
          ஒருதான் தாங்கிய உரனுடை நோன்தாள்’’
          (சிறுபாணாற்றுப்படை. 114-115)
இப்பாடலில் நல்லியக் கோடனது படை வலிமை குறைய அவன் மட்டும் தனியனாக நின்று போராடி வென்ற செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது. பெரும்பாலும் போர் வீரர்கள் இவ்வாறு படப்படுவார்கள். இலக்கண எடுத்துக்காட்டுகளும் இவ்வாறே அமைந்துள்ளன. ஆனால் ஆற்றுப்படை நூல்களில் மன்னன் தனியாக நின்று போரிட்டதாகப் பாடப்பட்டுள்ளன.

 மண்ணு மங்கலம்

          மதில் மேல் நின்று போர்புரிந்து பகைவனது மணிமுடியைக் கைப்பற்றுவது மண்ணுமங்கலம் என்னும் துறையாகும். இதுவும் உழிஞைத் திணையில் வரும் துறையாகும் மதிலைக் கைப்பற்றுதலே இதன் முதன்மை நோக்கம். அப்படி கைப்பற்றியதன் அடையாளமாக பகை மன்னனது மணிமுடிகளைக் கொண்டு வருவார்கள். இதற்கு மண்ணு மங்கலம் என்று பெயர்.  இதனைத் தொல்காப்பியர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்,

          ‘‘இகல்மதில் குடுமி கொண்ட மண்ணு மங்கலம்’’
(தொல் - பொருள். 69)
தொல்காப்பியரது இந்த இலக்கணப்படி சிறுபாணாற்றுப்படையில் வரும் பாடல் வருமாறு,


          ‘‘விரல்வேல் மன்னர் மன்னெயில் முருக்கி
          நயவர் பாணர் புன்கண் தீர்த்தபின்
          வயவர் தந்த வான்கேழ் நிதியமொடு’’    
             (சிறுபாணாற்றுப்படை. 247-249)
இப்பாடலில் பகை அரசனின் நிலைபெற்ற மதில்களை அழித்த நல்லியக் கோடனது வீரம் போற்றப்படுகிறது. இதேபோன்று பெரும்பாணாற்றுப்படையில் வரும் பாடல் வருமாறு,

          ‘‘புலவர் பூண்கட னாற்றிப் பகைவர்
          கடிமதி லெறிந்து குடுமி கொள்ளும்
          வென்றி யல்லது வினையுடம் படினும்’’  
(பெரும்பாணாற்றுப்படை. 450 -452)
இப்பாடலில் தொண்டைமான் இளந்திரையன் பகை அரசனது மதிலை அழித்து அவனது முடிகளைக் கைப்பற்றிய செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படி மணிமுடிகளை சேர்ப்பது தனது வீரத்தின் அளவீடாகக் கருதப்பட்டது.

முடிவுரை

          இலக்கியம் கண்டு அதற்கு இலக்கணம் இயற்றுதல் என்பது வழக்கு. அதன்படி தொல்காப்பியர் தனக்கு முன்பு இருந்த இலக்கியங்களைக் கண்டு அதற்கேற்ப தனது இலக்கண நூலை இயற்றியுள்ளார்.  ஆனால் தொல்காப்பியருக்குப் பின்வந்த இலக்கியங்கள் தொல்காப்பியரது இலக்கணத்தைப் பின்பற்றியுள்ளன.  எனவே இலக்கியம், இலக்கணம் இரண்டுக்குமான பொருத்தப்பாடுகள் காலந்தோறும் இருந்து கொண்டுதான் இருக்கும். அதனை இவ்வாய்வு எடுத்துக் காட்டியது.

###