திங்கள், 3 மார்ச், 2014

கங்கு 2: 2014

சென்னைப் பல்கலைக் கழகம், இலக்கியத்துறையில் ஒவ்வொரு கல்வியாண்டிலும் தொல்லியல், வரலாற்று இடங்களுக்கு மாணவர்கள், ஆய்வாளர்கள் நேரடியாக சென்று அறியும் கங்கு என்ற நிகழ்வு நடைபெற்றுவருகிறது.

அந்தவகையில் இந்த ஆண்டின் இரண்டாம் கங்கு செஞ்சிப்பகுதியில் இரண்டு நாள் பயணத்தில் பத்து இடங்களுக்குச் செல்ல திட்டமிடப்பட்டது. (ஆனால் எட்டு இடங்கள்தான் பார்க்கமுடிந்தது). உடன், மயிலை சீனி.வேங்கடசாமியின் மருமகன் புலவர் ஆ.சண்முகம், கல்வெட்டறிஞர்கள் அனந்தபுரம் கிருஷ்ணமூர்த்தி, செஞ்சி லெனின் ஆகியோர் வந்திருந்திருந்தனர். 
அந்த பயணப்பதிவாக இது அமைகிறது.

தொல்பழங்கால ஓவியங்கள்: கீழ்வாலை
=================================

விழுப்புரம் - திருவண்ணாமலை சாலையில் கீழ்வாலை கிராமம் உள்ளது. இங்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மனிதர்கள் வரைந்த செங்காவி வண்ண குகை ஓவியங்கள் 80, 90களில் கண்டறியப்பட்டது.

இரத்தக்குடைக்கல் எனப்படும் சிறிய பாறை குகைத்தளங்களில் வரையப்பட்ட இவ்வோவியங்கள் எகிப்து, கிரேக்க, செவ்விந்திய தொல்பழங்கால ஓவியங்களோடு ஒப்புமை உடையது என பவுன்ராசு கருத்துரைத்துள்ளார். இவற்றின் காலத்தை கி.மு 500 - கி.மு 1000 என பி.எல்.சாமி வரையறுக்கிறார்.

இரா.மதிவேந்தன் போன்றவர்களால் சிந்துவெளி எழுத்துக்களோடு ஒப்பிட்டு பேசப்பெறும் இவ்வோவியங்களைச் சொற்களின் தொகுப்பு என்கிறார் கா.ராஜன்.

இங்கு விலங்கு முக மனித ஓவியங்கள் நிறைய கிடைத்துள்ளன. ஓர் ஓவியத்தில் குதிரையின் மீது ஒரு மனிதன்அமர்ந்திருக்க, அக்குதிரையின் கடிவாளத்தைப் பிடித்து ஒருவர் அழைத்துச்செல்வது போல அமைந்துள்ளது. இதனருகே மற்றுமோர் உருவமும்காணப்படுகிறது. இந்த மூன்று மனிதர்களது முகங்களும் விலங்கின்முகங்களாக அமைந்துள்ளன. விலங்கு போன்று வேடம் அணிந்து ஆடுதல் என்னும் வேட்டைச் சடங்குகளைப்பிரதிபலிக்கும் ஓவியங்களாக இவற்றைக்கருதலாம் என்கிறார் காந்திராஜன்.

படகு ஒன்றில் நான்கு மனிதர்கள் செல்வது போன்ற ஓவியம் காணப்படுகிறது. இதில் நான்கு மனிதர்களது முகங்களும் பறவை முகங்களாகவே காணப்படுகின்றன.
இவைகளில் காணப்படும் மனித உருவங்களில் ஓர் உருவம் மட்டும் பெரியதாக உள்ளது; அம்மனிதனின் நீண்ட தலைமுடி இரு பகுதிகளாகப்பிரிக்கப்பட்டுக் காணப்படுகிறது. இது அவ்வுருவத்திற்குரிய சிறப்பைச்சுட்டுவதாக அமைகிறது. அவ்வுருவத்தை அக்குழுவின் தலைவன் என்றோஅல்லது முன்னோரது நினைவுச் சின்னம் என்றோ கருதலாம்.

இவ் ஓவியங்கள் இரும்புக்கால ஓவியங்கள் எனவும், பெருங்கற்கால ஓவியங்கள் எனவும் தொல்லியல்துறை அறிஞர்களால் குறிப்பிடப்படுகிறது.

இங்கிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள உடையாநத்தம் அருகில் உள்ள விசிறிப்பாறை, ஆலம்பாடி பாறை ஓவியங்கள் ஆகியவை இந்திய தொல்லியல் துறை ஆய்வேடுகளில், இந்தியாவின் மிக முக்கியத்துவம் மிக்க தொல்லியல் இடங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன.


##

இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த கீழ்வாலை தொல்பழங்கால ஓவியங்களைப் பாதுகாக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த ஓவியர் சந்துரு அவர்களும் அவரது மாணவர்களும் 2000தில் இவ்வோவியங்களை படியெடுத்து வரைந்து கண்காட்சி அமைத்தனர். அவற்றின் சில ஓவியங்கள் சென்னைப் பல்கலைக் கழகம் - இலக்கியத்துறையால் பாதுகாக்கப்படுகின்றன.

##

இங்கிருந்து தொடங்கியது கங்கு 2: 2014. (21.02.2014)