திங்கள், 12 மே, 2014

சிறுவாலை: தொலைந்த வரலாறும் உயிர்தப்பிய ஓவியமும்

அதியனின் அழைப்பு
=============================

ஜோலார்பேட்டை நிகழ்ச்சியின் நடுவே அதியனின் அழைப்பு வந்தது. நீண்ட நாளுக்கு பிறகான அமைப்பு. உடனே பேசினேன்.

- தோழர் கீழ்வாலையைப் போல ஓவியம் எங்க ஊரிலும் இருக்கு தோழர் -

மகிழ்ச்சியில் வெளியே ஓடினேன்.

- நாளையே வருகிறேன். நீங்க எங்கேயும் போயிடாதிங்க- என்றேன்

நானும் நண்பர் செல்வன், செந்தில்பாலா, தோழர் ரவி எல்லோருமாய் திங்கள் மதியம் அங்கே போய்சேருவது வரையில் அவருக்கு நம்பிக்கையே இல்லை போல... இடையிடையே பேசிக்கொண்டே இருந்தார்.

தோழி ஆதிரை, சேகுவேரா திலிபன், முகிலன் புடைசூழ விருந்தே படைத்துவிட்டார் அதியன்.

அவற்றையெல்லாம்விட அவர் அழைத்துச்சென்ற அந்த அடுக்காம்பாறை, இரயிலு கல்லி, ஆட்டாம் பாறை, சொலக்கல்லி எனப் பல்வேறு பேருவைத்து செல்லமாக அவ்வூர் மக்களால் அழைக்கப்படும் குன்றுகளைக் காட்டியதுதான் உச்சம்.

துக்கமும் மகிழ்ச்சியும் கலந்த ஒரு வரலாறு அது!







சிறுவாலை: தொலைந்த வரலாறும் உயிர்தப்பிய ஓவியமும்
=============================================================

தொல்லியல் தடங்கள் நிறைந்த விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் ஒரு கண்டுபிடிப்பு. தொல் பழங்கால ஓவியங்கள் முதலான அரிய வரலாற்றைத் தேக்கிவைத்துள்ள பூமியாக அறியப்படவேண்டிய பூமி விழுப்புரம் மாவட்டம், அனந்தபுரம், அன்னியூரை அடுத்த சிறுவாலை.

கீழ்வாலை, செத்தவரை முதலான இடங்களில் கிடைத்துள்ள கி.மு 3000 க்கும் முந்தையதாக கணிக்கத்தக்க தொல்பழங்கால ஓவியங்கள் தற்போது சிறுவாலையிலும் கிடைத்துள்ளது.

ஊருக்கு கிழக்கே இயற்கையாக அமைந்த பல்வேறு குகைதளங்களைக்கொண்ட சிறு சிறு குன்றுகள் பல அமைந்துள்ளன.
அவை ஒவ்வொன்றையும் அவ்வூர்மக்கள் ஒவ்வொரு பெயரிட்டு ஒவ்வொரு பாறையிலும் பல்வேறு நாட்டார்தெய்வ வழிபாடுகளை நடத்தி இதுவரை காத்துவந்துள்ளனர்.

அவை பல்லாயிரம் ஆண்டுகள் வரலாற்றின் தடங்களைச் சுமந்து உயிர்வாழ்வதை அறியாத மக்கள் அண்மைக்காலமாய் ஆளாளுக்கு பங்குபோட்டு பிரித்து வெடிவைத்து சல்லிகளாக்கியுள்ளனர்.

இந்த குன்றுக்கொலை சேதாரங்களுக்கு மத்தியில்தான் தற்செயலாக அதியன் அதைக் கவனித்துள்ளார்.

வெடிவைத்து தகர்க்கப்பட்டு குத்துயிரும் கொலையுயிருமாய் இருக்கும் இரயில்பெட்டி பாறை எனப்படும் குன்றின் ஒருபகுதியில்தான் ஒன்றரை மீட்டர் நீலமும், 50 செண்டிமீட்டர் அகலமும் கொண்ட அந்த தொல்பழங்கால ஓவியம் கண்டறியப்பட்டுள்ளது.

நான் கையில் கொண்டுபோன நீர்தூவலால் நீர் தெளித்து ஆய்வு செய்தோம். நண்பர் செல்வன், தோழர் ரவி, அதியன், செந்தில்பாலா என ஒவ்வொருவராய் ஓவியத்தைக் கண்டு தமது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டோம்.

மீண்டும் மீண்டும் சோதித்து இறுதியாக, உறுதிசெய்த முடிவு இதுதான்.
அது ஒரு இனக்குழு, வேட்டையாடியப்பின் உணவுகளைப் பாதீட்டுக்கு எடுத்துச்செல்வதைச் சொல்லும் ஓவியம்.

முதல்பகுதியில் தலைவி எனக் கருதத்தக்க வகையில் சடாமுடியுடன் பெரிய உருவம் காணப்படுகிறது, அவ்வுருவத்தைச் சூழ்ந்து ஐந்து சிறிய உருவங்கள் காணப்படுகின்றன. பின்பக்கம் உள்ள உருவங்கள் ஒருப்பக்கம் கையைப் பிணைத்துக்கொண்டு உள்ளன. ( சடங்கு அல்லது ஆட்டம் எனவும் கொள்ளலாம்,)

அடுத்து, இரண்டு சக்கரங்கள் காணப்படுகின்றன. (முதலில் உள்ள சக்கரம் முக்கால்வாசி மட்டுமே தெரிகிறது). அவைகள் இரண்டும் தனித் தனி வண்டிகள் போல உள்ளன. அவைகளின் மேல் உள்ள உருவம் அறியமுடியவில்லை, அவற்றின் முன்னால் உள்ள பகுதியில் ஏதேனும் விலங்குகள் வண்டியை இழுப்பதற்கான தடயமும் இல்லை.
ஒருவேளை, மேற்படி சொன்ன தலைவியின் பின்னால் உள்ள கைபிணைத்த மனித உருவங்கள் இழுத்துவருவதாக கொள்ளவும் இடம் உள்ளது.

அவ்வண்டிகளின் பின்னால் பெரியதும், சின்னதுமான இரு மனித உருவங்கள் காணப்படுகின்றன. அவை அவ்வண்டிகளின் பின்னால் காவல் காத்தபடி வருவதாகவோ, வண்டியை மேட்டுப் பகுதிகளில் பின்னிருந்தபடி தள்ளி விடுபவர்களாகவோ கொள்ளலாம்.

ஆக, தலைவி புடைசூழ வேட்டையாடியப்பின் வேட்டையாடிய பொருட்களை வண்டியில் வைத்து தம் இருப்பிடத்திற்கு இழுத்து செல்வதான ஓவியமாக இதனைக் கணிக்கமுடிகிறது.

இதையும் இதன் முக்கியத்துவத்தையும் விளக்கியயுடன் அவ்வூர் மக்கள் - இந்தமாரி படம் அந்த குன்னுல இருந்தது, இந்த குன்னுல நெரைய இருந்து - என புலம்ப ஆரம்பித்துவிட்டார்கள்.

- நீங்கமட்டும் பத்து வருசத்துக்கு முன்னாடி, ஏன் 5 வருசத்துக்கு முன்னாடி வந்து சொல்லியிருந்திங்கனா ஒருத்தன் மலைய வெடிச்சியிருக்கமாட்டான். எல்லாம் போயிடுச்சே! -

நமக்குள்ளும்தான் இந்த புலம்பல்... இன்னுமும் நாம சும்மா இருந்தா எல்லாம் போயிடும். இன்னும் நெரைய இருக்குது. இருக்கிறத்தையாவது காப்பாத்துவோம்.

தேடுங்க மக்களா..











செய்திகள் பரவியது
==========================

தினமணி நாளிதழில்  ( 08.05.2014 )



தி இந்து நாளிதழில் ( 08.05.2014 )



தின பூமி நாளிதழில் 09.05.2014 )



Deccan chronicle நாளிதழில்  09.05.2014 )