திங்கள், 30 ஜூன், 2014

தமிழர் நிமித்தமும் உளப்பகுபாய்வும்

தமிழர் நிமித்தங்களில் ‘பல்லி சொல் கேட்டல்’ :
 ஃப்ராய்டிய உளப்பகுப்பாய்வு விளக்கம்
=========================================================
சி. சிவராஜ்,
முனைவர்பட்ட ஆய்வாளர்,
சுப்பிரமணிய பாரதியார் தமிழியற்புலம்,
புதுவைப் பல்கலைக்கழகம்,
புதுச்சேரி.





தொன்மையான நம்பிக்கைகள், சடங்குகள், வழக்காறுகள், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றைத் தன்னகத்தே கொண்டு பண்பாடுகளாலும், நம்பிக்கைகளாலும் கட்டமைக்கப்பட்ட சமூகத்தைக் கொண்டதாகத் தமிழர் வாழ்வை இனங்காணலாம்.

மனித இன வரலாற்றில் வேட்டைச் சமூகம், இனக்குழுச் சமூகம், வேளாண் சமூகம் எனப் பலவாறாகப் பரிணாம வளர்ச்சி பெற்று வந்தாலும், நம்பிக்கைகளாலும், நம்பிக்கை சார்ந்த எச்சங்களாலும் மக்கள் வாழ்வு பின்னப்பட்டு வந்துள்ளமை அனைவரும் அறிந்த ஒன்றே.

இந்நம்பிக்கைகளில் முக்கிய இடம்பிடிப்பவை நிமித்தங்கள் ஆகும். ஒரு குறிப்பிட்ட செயலைச் செய்வதற்கு முன்னரோ அல்லது செயலைச் செய்து முடித்தப்பின்னர் அச்செயலுக்கான பயனை எதிர்பார்த்துக் காத்திருக்கும்போதோ நிமித்தக் குறியீடுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. குறிப்பிட்ட செயலுக்கான நன்மை தீமை குறித்த மக்களின் எண்ணங்களே நிமித்தக் குறியீடுகளாக வெளிப்படுகின்றன.

·        பூனை குறுக்கே செல்லுதல்
·        விதவைப் பெண்ணைக் காணுதல்
·        பசு மாடு கன்றுடன் செல்வதைக் காணுதல்
·        விறகுக் கட்டை எதிரே வருவதைக் காணுதல்
·        குறி கேட்டல்
·        கனவு காணுதல்
·        விலங்குகள் எழுப்பும் ஒலிக் குறிப்புகள்
·        பல்லி சொல் கேட்டல்
போன்ற நிமித்தங்கள் காலங்காலமாக மக்களிடையே நிலவிவரும் நிமித்தங்களாகும். இவை மட்டுமின்றி, சூழல் அடிப்படையில் வாயிற்படியில் கால் தடுக்குதல், உத்தரத்தில் தலை இடித்துக் கொள்ளுதல் முதலிய நிமித்தங்களும் தமிழர் பண்பாட்டில் காணப்படுகின்றன. இதனைத்  ‘தீயச் சகுனம்’ என்ற சொல்லாலும் குறிப்பிடுவர்.

          இந்நிமித்தங்களின் வாயிலாக, மன அமைதியையும், மனக் குமுறலையும் உண்டாக்கி, அதன்வழி மன நிறைவைத் தேடுபவர்களாக மனிதர்கள் உள்ளனர்.
          தமிழர் நிமித்தங்களில் மிகவும் குறிப்பிடத்தக்கது ’பல்லி சொல் கேட்டல்’ என்பதாகும்.
           “மனிதர்களால் பார்க்கப்படும் சகுணங்களில் மிக முக்கியமானது பல்லி சகுனம் ஆகும். பல்லி சகுனம் என்பது சொல் பலன், விழும் பலன் என இரண்டு வகைப்படும்.”        ( சு. சக்திவேல், நாட்டுப்புறவியல் ஆய்வு, ப. 215 )
          இரண்டு வகையான பல்லி சகுனத்தில் ஒலிக்குறிப்பை அடிப்படையாகக் கொண்ட சொல் பலனாகிய ’பல்லி சொல் கேட்டல்’ என்னும் நிமித்தம் பற்றி இக்கட்டுரை விவரிக்கின்றது.

          மக்கள், தங்களுடைய மனக்கருத்து ஈடேறத் துணைபுரியும் ஓர் அருள்வாக்காகவும், தங்களுடைய வாழ்க்கை குறித்த பாதுகாப்புணர்வின் எச்சரிக்கையாகவும் பல்லி சொல் கேட்டலை நம்புகின்றனர். இந்நிமித்தத்தை ஃப்ராய்டிய உளப்பகுப்பாய்வு அணுகுமுறைக்கு உட்படுத்துவதன் மூலம் புதிய விளக்கத்தைப் பெற முடியும். அந்த வகையில், ‘பல்லி சொல் கேட்டல்’ என்னும் நிமித்தத்தினை ஃப்ராய்டிய உளப்பகுப்பாய்வுக் கண்ணோட்டத்தில் விளக்க முற்படுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

          நிமித்தக் குறியீடாகப் ‘பல்லி சொல் கேட்டல்’ என்னும் நம்பிக்கை இருந்து வருகிறது. பல்லி சொல் கேட்டல் என்னும் நிமித்தம் பழந்தமிழ் இலக்கியங்களிலேயே காணப்படுகின்றன. நாட்டுப்புற மக்களிடையே இன்றைக்கும் இந்நிமித்தம் பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

          வீட்டில் பல்லி ஒலி எழுப்புவதைத் தமக்கு ஏற்படப் போகும் நன்மை தீமைக்கான குறியீடே என மக்கள் நம்புகின்றனர். குடும்பத்தைப் பாதுகாக்கும் குலதெய்வம் அல்லது வீட்டில் வாழ்ந்து மறைந்த முன்னோர்கள் கூறும் எச்சரிக்கையாகவும் இந்நிமித்தம் கருதப்படுகிறது. ஃப்ராய்டிய உளப்பகுப்பாய்வு நோக்கில் ஆராயும்போது, நனவிலி மன அமுக்கம் பெற்ற இடிப்பஸ் உணர்ச்சி இந்நிமித்தக் குறியீட்டின் பின்னால் மறைந்திருப்பதை அறிய முடியும்.

          தங்களுடைய வாழ்விடத்தில் (வீட்டில்) சுவற்றில் பல்லி எழுப்பும் ஒலிக் குறிப்பை உற்றுநோக்குபவர்களாகப் பெண்களே உள்ளனர். அதிலும் குறிப்பாக, விதவைப் பெண்களும், வயது முதிர்ந்த பெண்களும் இந்நிமித்தத்தினை உற்று நோக்குபவர்களாக உள்ளனர். ஏனெனில், இவர்கள் கணவனைப் பிரிந்து அல்லது கணவனுடன் உறவு கிடைக்கப் பெறாமல் தனிமையில் இருக்க வேண்டிய சூழல் உள்ளது. தனிமையில் தங்களுக்குத் துணையில்லாத நேரத்தில் துணையாகப் பல்லியும், பல்லியின் ஒலிக்குறிப்பும் அமைகிறது. அவர்கள், அதன் ஒலிக்குறிப்பை உணர்ந்து குழந்தைகளையும், வீட்டில் உள்ளவர்களையும் எச்சரிக்கையாகவோ, மகிழ்ச்சியாகவோ இருக்கச் சொல்லி அறிவுறுத்துகின்றனர்.

          தான் விரும்பிய நபர் தன்னை விட்டுப் பிரிந்து சென்ற காலத்தில் அவருடைய பதிலியாகப் பல்லியின் ஒலி அர்த்தம் கொள்கிறது. தனிமையில் இருக்கும் ஒருவருக்குத் துணையாகப் பல்லியும், பல்லியின் ஒலிக்குறிப்பும் அமைகிறது. எனவே, பல்லி என்பது ஒருவகை பூச்சி இனம் என்பதையும் தாண்டி, தான் விரும்பும் அல்லது தான் பிரிந்திருக்கும் துணையின் பதிலியாகக் கருதுகின்றனர். அவ்வாறு, பல்லியும், பல்லியின் ஒலிக்குறிப்பும் அவர்களின் துணையாக அமையக் காரணம், அவர்களின் மனத்தில் அமுக்கம் பெற்றுள்ள இடிப்பஸ் உணர்ச்சியே ஆகும். இங்கு, இன்னொரு செய்தியைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். ஃப்ராய்டிய நோக்கில் அனைத்துவகையான பூச்சி இனங்களும் ஆண் குறியீடாகவே பொருள்கொள்ளப்படுகிறது. அவ்வகையில், தனிமையில் வாழும் பெண்களின் மனத்தில் ஆண் துணையாகவே பல்லி நிலை பெற்றுள்ளது.

          நாட்டுப்புற மக்களிடம் வழக்கத்தில் உள்ள பல்லி சகுன நம்பிக்கை இதனை மேலும் உறுதி செய்வதாக உள்ளது. அவர்கள், இறந்துபோன தங்களுடைய முன்னோர்கள் பல்லியின் உருவத்தில் வந்து எச்சரிப்பதாகவும், தங்களுக்குத் துணையாக இருந்து வழிகாட்டுவதாகவும் கருதுகின்றனர். பெண்களே இவ்வொலிக் குறிப்பை அதிகம் கவனிப்பவர்களாகவும், முக்கியத்துவம் தருபவர்களாகவும் காணப்படுகின்றனர். இறந்துபோன கணவன் அல்லது தந்தை அல்லது மாமனார் குடும்பத்திற்குத் துணையாக இருந்து எச்சரிப்பதாகக் கருதுகின்றனர். எனவே, வெளிப்படையாக இந்நிமித்தக் குறியீட்டில் இடிப்பஸ் சிக்கல் இருப்பது தெளிவாகிறது.

“உளப்பகுப்பாய்வுக் கோட்பாடுகளில் ஒன்று இடிப்பஸ் சிக்கல். இது பெற்றோர்மீது பிள்ளை கொள்ளும் காமம் மற்றும் பகை உணர்ச்சிகளைக் குறிக்கும்”  (அரங்க. நலங்கிள்ளி, இலக்கியமும் உளப்பகுப்பாய்வும், ப. 116)
தகப்பன்மீது மகளோ, தாய்மீது மகனோ கொள்ளும் காமமே இடிப்பஸ் காமம் எனப்படுகிறது.   அதேபோன்று, தகப்பன்மீது மகனோ, தாய்மீது மகளோ கொள்ளும் பகை ‘இடிப்பஸ் பகை’ எனப்படுகிறது. இவை இரண்டும் சேர்ந்ததே இடிப்பஸ் சிக்கலாகும். அவ்வகையில், ஒவ்வொரு பெண்ணும் தன் தந்தைமீது கொள்ளும் காம விருப்பம் மனிதப் பண்பாட்டுச் சூழலில் அமுக்கப்படுவதால் அது மடைமாற்றமாகத் திருப்பப்பட்டு வேறொரு மாற்றுப் பதிலியின் மூலம் தன் மன ஆசையை நிறைவேற்றிக் கொள்ள முற்படுகிறது.

          ஒவ்வொரு பெண்ணுக்கும் தன் முதல் ஆசையான தந்தையை அடைவதில் உள்ள சிக்கல் நிறைவேறாத சூழலில் மற்ற துணைசார் பதிலியின் மீது விருப்பம் கொள்கிறது. அவ்வகையிலேயே இங்குப் பல்லியும், பல்லியின் ஒலிக்குறிப்பும் துணைசார் பதிலியாகக் கொள்ளப்பட்டு நிமித்தக் குறியீடாக மாறியுள்ளது.

          வீட்டில் உள்ள பெண்கள் தன் இறந்துபோன கணவனோ, இறந்துபோன தந்தை அல்லது மாமனாரோ, அந்த வீட்டின் குல தெய்வமோ பல்லி உருவில் வந்து எச்சரிப்பதாக அல்லது சகுனம் செய்வதாக நம்புகின்றனர். இதனை மேலும் விளக்கச் சங்க இலக்கியச் சான்றுகள் சிலவற்றையும் எடுத்துக் கொள்ளலாம்.

          சங்க இலக்கியப் பாடல்களிலும் “பல்லி சொல் கேட்டல்” பற்றிய குறிப்புகள் காணக் கிடைக்கின்றன. அகநானூற்றில் கல்லாடனார் பாடிய 9வது பாடலில் தலைவனின் வருகையை நினைந்து தலைவி ஏங்கும்போதெல்லாம் பக்கத்தில் பல்லி எழுப்பும் சொல்லைக் கேட்டுக் கருதி வாழ்த்தினாள் என்ற குறிப்பு கிடைக்கிறது. அகநானூற்றில் ஈழத்துப் பூதந்தேவனார் பாடிய 88வது பாடல் பிளவுபட்ட வாயையுடைய பல்லியானது நன்னிமித்தமாக ஒலித்ததை ஆராய வேண்டும் என்று கூறுகிறது.

          அகநானூற்றில் காவன் முல்லை பூதனார் பாடிய 151வது பாடலில் புல்லும், புதரும், கல்லும், முள்ளும் நிறைந்திருக்கும் காட்டுவழியில் செல்வோருக்கு உறுவது பற்றிக் கூறும் செவ்விய நாவைக் கொண்ட பல்லியின் சொல் என்ற குறிப்பு உள்ளது. நற்றிணையில் காப்பியஞ் சேந்தனார் பாடிய 246வது பாடலில் நெடிய சுவற்றில் உள்ள பல்லி நன்னிமித்தம் தெரிவிக்கும் என்ற குறிப்பு உள்ளது.

          கலித்தொகையில் பாலை பாடிய பெருங்கடுங்கோ பாடிய 11வது பாடல் தலைவன் வருகைக்கு ஏற்றவாறு பொருந்தி ஒலிக்கும் பல்லி என்று கூறப்பட்டுள்ளது.

          இச்சங்க இலக்கியச் சான்றுகள் அனைத்தும் தலைவனைப் பிரிந்து தனிமையில் வாழும் தலைவியின் ஏக்கமும், அந்த ஏக்கத்திற்கு ஆறுதலாகப் பல்லியின் ஒலிக்குறிப்பு அமைகிறது என்பதைப் புலப்படுத்துகிறது. இங்குப் பண்பாட்டுச் சூழலில் சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட துணையாகத் தலைவன் உள்ளான். அத்தலைவனும் தலைவியின் நனவிலி மன விருப்பத் தந்தையின் பதிலியே ஆவான். அச்சூழலில் பிரிந்து சென்ற தலைவனின் பிரிவை ஏற்காத தலைவியின் நனவிலி மனம் தலைவனின் நினைவை எழுப்பும், தலைவனுக்குத் தன் நினைப்பை எழுப்பும் சகுனமாகப் பல்லி கருதப்படுகிறது. அதற்குக் காரணம் தலைவனின் சார்பொருளாகப் பல்லி இடம்பெற்று அதன் ஒலிக்குறிப்பு மனநிறைவைத் தரும் சார்பொருள் மோகமாக உள்ளது. இச்சார்பொருள் மோகத்தை அகநானூற்றில் கல்லாடனார் பாடிய 9வது பாடல் சான்று மூலம் விளக்கலாம்.

          ”ஓங்கிய நலில் ஒருசிறை நிலைஇ
         பாங்கர்ப் பல்லி படுதொறும் பரவி
         கன்றுபுகு மாலை நின்றோள் எய்தி...”  (அகம் : 9)

          இப்பாடலில் சிறப்புற உயர்ந்த நல்ல வீட்டில் ஓரிடத்தில் நின்று தலைவனின் வருகையை நினைந்து நன்னிமித்தத்தைக் குறிக்கும்படியாகப் பக்கத்தில் பல்லி சொல்லும்போதெல்லாம் தலைவி போற்றி வாழ்த்தினாள் எனக் கூறப்பட்டுள்ளது.

          அப்பல்லியின் ஒலியைக் கேட்டவண்ணம் தலைவி வீட்டில் இருக்க தலைவனின் மனம் சென்றடைந்தது என்று பொருள் கூறப்படுகிறது.

          இங்குப் பல்லி என்பது சார்பொருள் மோகமாக இடம்பெற்றுள்ளது. காரணம், “வேட்கை பொருளாகிய  (நனவுநிலை தலைவன் அல்லது நனவிலி நிலை தந்தை) தமக்குக் கிடைக்காதபோது அவரின் உடைமைப் பொருள்களான உடை, பயன்படுத்திய பொருள், அணிகலன்கள் போன்றவற்றில் மையல் கொள்ளும் உளச் செயலே சார்பொருள் மோகம்”      ( தி.கு. ரவிச்சந்திரன், ஒரு ஃப்ராய்டியன் பார்வையில் தமிழ் நாட்டுப்புற வழக்காறுகள், ப. 94 ) என்று சொல்லப்படுகிறது.

          இங்குத் தலைவியின் ஏக்கத்திற்கு ஏற்றவாறு ஒலிக்குறிப்பைக் கொடுக்கும் பல்லியானது தலைவனின் பதிலியாகவே அமைகிறது. இங்குப் பல்லியானது தலைவியின் உடைமைப் பொருளாக வெளிப்படையாக இல்லை என்றாலும் கூட தலைவியின் மனத்தளவில் தலைவனின் நினைவை ஊட்டுவதாக அமைந்துள்ளது. ஏனைய சங்க இலக்கிய சான்றுகளையும் இவ்வடிப்படையிலேயே விளங்கிக் கொள்ளலாம்.

          அதேபோன்று, தாயை விரும்பும் மகனின் நனவிலி ஆசையே பல்லியினைத் தன் துணைசார் பதிலியாகக் கருதுகிறது. தன் தாய் தனக்கு வழிகாட்டுவதாகவும், தங்கள் குடும்பத்தின் பெண்குல தெய்வங்கள் பல்லி உருவில் வந்து எச்சரிப்பதாகவும், சகுனம் செய்வதாகவும் வயது முதிர்ந்த ஆண்கள் கருதுகின்றனர். எனவே, பல்லி என்பது ஆண், பெண் என்னும் இரு நிலையிலும் தாம் விரும்பும் பெற்றோரின் பதிலியாகவே உள்ளது.

          எனவே, ஒவ்வொரு மனிதனுக்கும் நனவிலி மனத்தில் அமுக்கம் பெற்ற இடிப்பஸ் சிக்கலே ‘பல்லி சொல் கேட்டல்’ சகுனமாக மாறியுள்ளது. மேலும், பல்லி சொல் கேட்டல் சகுனம் உயர்வழிப்படுத்தலான அருள்வாக்காகக் கருதப்படுகிறது.

          “அருள்வாக்கு மற்றும் ஆன்மீகம் சார்ந்த நம்பிக்கைகளில் முதலிடம் வகிப்பது பல்லி சொல் கேட்டல் என்பதாகும். இது இறைவனே நேரில் வந்து அருள்வாக்கு அளிப்பதாக நம்புகிறார்கள்”  ( முத்து ரத்தினம், திருத்தலங்களில் நோய் தீர்க்கும் பல்லிகள், இணையதளக் கட்டுரை )

          இப்பல்லி சொல் கேட்டல் என்பது தெய்வ சக்தி கொண்ட அருள் வாக்காக மக்கள் மனத்தில் நிலைத்துவிட்டதற்கான காரணத்தையும் விளக்க வேண்டிய தேவை உள்ளது.

          இது மக்களின் இடிப்பஸ் காம ஆசையான இச்சையுணர்ச்சி பண்பாட்டுச் சூழலில் மாறுவேடம் புனைந்து மோகித்தல் செயலிலிருந்து மோகமற்ற புனிதச் செயலாக மாறி உயர்வழிப்படுத்துதல் நிலையை அடைகிறது.

 “ உயர்வழிபாடு என்பது விரும்பத்தகாத ஓர் ஆசையை வேறுவிதத்தில் வழிமாற்றிவிட்டு உயர்வுபடுத்துதல். உதாரணமாக, மோக இச்சைக்காகத் துடிக்கும் சக்தியைக் கலை அல்லது பக்தியில் ஈடுபடுத்தி உயர்வழிப்படுத்துவதாகும்” (அரங்க. நலங்கிள்ளி, மேலது, ப, 102)
          அவ்வகையிலேயே பல்லி சொல் நிமித்தம் என்பது உயர்வழிப்படுத்தலாகத் தெய்வ அருள்வாக்காக மக்களால் எண்ணப்படுகிறது. அது குலதெய்வத்தின் கூற்றாகவும், முன்னோர்களின் எச்சரிக்கையாகவும் கருதப்படுகிறது.

          மேலும், பல்லி ஒலி எழுப்பும்போது அந்நிமித்தக் குறியீட்டிற்கு ஏற்றாற்போல் மக்கள் தாங்களும் ஒலி எழுப்பும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர். அவ்வாறு, ஒலி எழுப்புதல் என்பதும் தங்களுக்கு வழிகாட்டும் இறைவனைப் போற்றி வாழ்த்துதலாகக் கூறப்படுகிறது. இவ்வாறு, போற்றி வாழ்த்தி வணங்குதல் என்பதும் உயர்வழிப்படுத்தலே ஆகும்.

          அதுமட்டுமின்றி, பெரும்பாலானோர் பல்லியின் ஒலிக்குறிப்பின்போது கிருஷ்ணரின் பெயரை (கிருஷ்டா, கிருஷ்டா) என்று ஒலிக்கின்றனர். இங்கு, கிருஷ்டா, கிருஷ்டா என்று ஒலி எழுப்புவதன் மூலம், கடவுளாகிய கண்ணன் தங்களுக்கு எச்சரிக்கை கொடுக்கிறார் என்றும், வழிகாட்டுகிறார் என்றும் நம்புகின்றனர். இங்கு, கிருஷ்டா, கிருஷ்டா என ஒலி எழுப்புதல் என்பது இச்சை உணர்ச்சி உயர்வழிப்படுத்தலுக்குச் சிறந்த சான்றாக உள்ளது. (இதேபோன்று, சைவர்கள் சிலர் ‘சிவ சிவ’ என்று உச்சரிப்பதும் இங்குச் சுட்டத்தக்கது.)

          தங்களுக்குப் பல்லியின் உருவில் ஒலிக்குறிப்பு கொடுத்துச் சகுனம் செய்வது கடவுளாகிய கிருஷ்ணன் என்னும் நம்பிக்கை, கண்ணன் மீது தீராத பற்றுடைய கோபியர்களின் (பெண்கள்) நம்பிக்கையிலிருந்து தொடர்ந்து வலுப்பெற்றிருக்கலாம் என்று கருத இடமுண்டு.

          ஆண்களும் கிருஷ்டா, கிருஷ்டா என்று ஒலிப்பது என்பது தங்கள் நனவிலியில் தாய் விருப்பு, தந்தை வெறுப்பு உள்ளதைப் போலவே தந்தைமீதான விருப்பமும், தாய்மீதான வெறுப்பும் சேர்ந்தே உள்ளது. அவ்வகையில், தந்தைமீதான விருப்பமாக ஆண்கள் இவ்வொலிக்குறிப்பைச் செய்யக் காரணமாக உள்ளது. இது மேலாய்வுக்கு உரியது.

          நிறைவாக, ’பல்லி சொல் கேட்டல்’ என்பது மக்களிடையே நன்னிமித்தக் குறியீடாக நிலைபெற்றதற்கும், காலங்காலமாக வழக்கத்தில் இருந்து வருவதற்கும் காரணம், மனித நனவிலி மனத்தில் அமுக்கம் பெற்ற இடிப்பஸ் உணர்ச்சிக் கோட்பாடே ஆகும். அதுவே, சமூகத்திற்கும், பண்பாட்டிற்கும் ஏற்றவகையில் உயர்வழிப்படுத்தப்பட்டுத் தெய்வ அருள்வாக்காகவும், சக்தி வாய்ந்த நிமித்தக் குறியீடாகவும் மாறியுள்ளதை அறிய முடிகிறது.

குறிப்பு: பல்லி சொல் கேட்டல் குறித்த செய்திகள் ஆய்வாளாரின் சொந்த ஊர்ப் பகுதியான செஞ்சி வட்டார மக்களிடமிருந்து சேகரிக்கப்பட்டன.


@@@
#####

(புதிய அகரத்தில் வெளியான கட்டுரையின் முழுவடிவம்)

கருத்துகள் இல்லை: