சனி, 19 ஜனவரி, 2013

டாக்டர் பீட்டர் பெர்சிவல்: அறிமுகம்

டாக்டர் பீட்டர் பெர்சிவல் 
Dr. Peter Percivel (24.7.1803 - 11.07.1882)
---------------------------------------------------------------      
ஜெ.இராதாகிருஷ்ணன்,
முனைவர்பட்ட ஆய்வாளர்,
சென்னைப் பல்கலைக்கழகம்,
சென்னை 5.

டாக்டர் பீட்டர் பெர்சிவல். 


               மிழியல் வரலாற்றில் எந்த ஒரு மூலையில் நின்று பேசினாலும் தொல்காப்பியத்திலிருந்து தொடங்க முடிவது போல, மறுமலர்ச்சித் தமிழியல் வரலாற்றின் எந்தவொரு பகுதியும் ஐரோப்பியர் வருகை, 19ஆம் நூற்றாண்டு  அச்சு ஊடகம் என்பதாகவே தொடங்குகின்றது.
              வணிகத்திற்காகவும் மதம் பரப்புதலுக்காகவும் வந்த ஐரோப்பியர் அவர்களுக்காகச் செய்த ஒவ்வொன்றும் மொழியிலும், சமூகத் தளத்திலும் நவீன வெளிகளை விரித்துள்ளன
              அந்த வகையில், ஒரு பாதிரியாராக யாழ்ப்பாணத்தில் தன் வாழ்க்கையைத் தொடங்கி; கல்வியாளராகவும், சமூகவியலாளராகவும், அரசு ஊழியராகவும் லண்டன், கல்கத்தா, சென்னை ஆகிய இடங்களில் தொடர்ந்து; இதழாளராகவும், மொழியியலாளராகவும், ஆய்வாளராகவும் வாழ்ந்து; தமிழகத்திலேயே தனது வாழ்வின் இறுதி நாட்களை முடித்துக் கொண்ட முக்கியமான ஆளுமை டாக்டர் பீட்டர் பெர்சிவல்.
              19ஆம் நூற்றாண்டு ஐரோப்பிய தமிழறிஞர்கள் பற்றிய உரையாடல் ஒவ்வொன்றும் பல தளங்களில் விரியும் சாத்தியப்பாடுகளை உள்ளடக்கி நிற்க, தமிழ்ப் புலத்தில் டாக்டர் பீட்டர் பெர்சிவலின் அழுத்தமான பதிவுகள் பற்றிய அறிமுக உரையாடலாக இக்கட்டுரை அமைகின்றது.

 

சமயப் பணியாளராக...

                தமிழகம் என்பது ஈழத்தமிழகத்தையும் உள்ளடக்கியதாகக் கருதப்பட்ட 18ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்திலிருந்து தொடங்குகிறது பீட்டர் பெர்சிவலின் வரலாறு.
                1804 முதல் 1818 வரையிலான காலகட்டத்தில் இலங்கையில் லண்டன் மிஷன், சி.எம்.எஸ். மிஷன், அமெரிக்க மிஷினரிகள் எனப் பல்வேறு கிருத்துவ மிஷனரிகளும்  கால்பதிக்கின்றன. அமெரிக்க மிஷனரிகளில் ஒன்றான வெஸ்லியன் மெத்தடிஸ்ட் மிஷன் 1914இல் யாழ்ப்பாணத்தில் நிலைகொள்கிறது. அதை நிர்வகித்து மதம் பரப்புவதற்காகவே 1926இல் வந்து சேர்க்கிறார் பெர்சிவல்.
        23 வயது இளைஞராக வருகை தந்த பீட்டர் பெர்சிவல் மூன்றாண்டுகளில் நன்கு தமிழ் கற்று, சமயச் சொற்பொழிவுகள் - பிரச்சாரத் துண்டறிக்கைகள் தயாரித்தல் என மிஷனரியின் தலைமைப் பதவிக்கு வருகிறார்.
        இவரது சமயப் பிரச்சாரத் துண்டறிக்கைகள் தமிழகம் வரையிலும் பரப்பப்பட்டுள்ளன. இவரது துண்டறிக்கையின் மூலமாகவே முதன்முதலில் கிருத்துவை அறிந்தேன் என எச்..கிருட்டிணப்பிள்ளை பின்னாளில் குறிப்பிடும் அளவு (முனைவர் வீ.ஞானசிகாமணி, 1978 .28) இவரது சமயப் பரப்புரையும் துண்டறிக்கைகளும் பிரபலமடைந்துள்ளன.
        இதன் பயனாகவே 1840இல் நான்காம் விவிலியத்தின் திருத்திய மொழிபெயர்ப்புப் பணிக்கான குழுத்தலைவர் பொறுப்பு இவரைத் தேடி வருகின்றது. தமது பள்ளியில் பயின்ற மாணவரான ஆறுமுக நாவலர் உதவியுடன் 1848இல் பெர்சிவல் இப்பணியை நிறைவுசெய்கிறார். இம்மொழிபெயர்ப்பைச் சரிபார்ப்பதற்றகாக ஆறுமுகநாவலரை அழைத்துக்கொண்டு பெர்சிவல் சென்னை வருவதும், இதற்கு முன்பே 1829 முதல் 1832 வரை மூன்றாண்டுகள் கல்கத்தா  சென்றதும் பெர்சிவல் வாழ்விலும் தமிழியல் சூழலிலும் மிக முக்கியமான திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளன.


பைபிள் மொழிபெயர்ப்பு...

         தமிழில் தம்பிரான் வணக்கம் (1577) கிறிசித்தியானி வணக்கம் (1579) என்பனவாகச் சிறுசிறு மொழிபெயர்ப்புகள் வந்தபோதும், முழுமையான தொடக்க மூல மொழிபெயர்ப்புகளாகக் கீழ்க்கண்டவர்கள் செய்தவற்றைக் குறிப்பிட முடியும்.
        1.   சீகன் பால்கு (1863 - 1719) - 1714இல்
        2.   பெப்ரீஷயஸ் (1711 -1796) - 1773இல்
        3.   கிரேனியஸ் (1790 - 1838) - 1833இல்
        அரைநூற்றாண்டுகளுக்கும் மேலாகப் பெப்ரீஷியஸின் வேதாகம மொழிபெயர்ப்பே பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட சூழலிலும், புதிய காலச் சூழலுக்கு ஏற்ப எளிமைப்படுத்த வேண்டியும் பல்வேறு திருச்சபையினர்களும் (மிஷனரிகள்) ஏற்றுக்கொள்ளும்படியான ஒருமித்தப் பதிப்பு உருவாக்கும் பொருட்டும் பெர்சிவல் தலைமையில் நான்காம் பைபிள் திருத்திய மொழிபெயர்ப்புக் குழு 1840இல் அமைக்கப்பட்டது. இக்குழுவில்,
        1.   எபிரேய புலமையாளர் சாமுவேல் ஹச்சிங்ஸ் (Samuel Hutchings)

        2.   வேதப் புலமையாளர் எச்.ஆர்.ஹசிங்ஸ்டன் (H.R.Horly sington)

        3.   அகராதி புலமையாளர் வின்சுலோ (winslow)
ஆகியோர் இருந்தனர். தமிழறிவுக்காக ஆறுமுகநாவலரைச் சேர்த்துக்கொண்டு இக்குழு மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட்டது.
        1846 க்குப் பிறகு பெர்சிவல் தமது முழுநேரத்தையும் செலவிட்டு ஆறுமுக நாவலரின் உதவியுடன் பைபிள் மொழிபெயர்ப்பை 1848இல் செய்து முடித்தார்.
                சீகன்பால்கு மொழிபெயர்ப்பை வீரமாமுனிவர் எதிர்த்தார், பின்னாளில் தோன்றிய பவர் மொழிபெயர்ப்பை வேதநாயகசாஸ்திரி எதிர்த்தார். இந்த வரலாற்றின் மையமாகப் பெர்சிவல் மொழிபெயர்ப்பைச் சென்னை வேதாகமச் சங்கம் எதிர்த்தது. தஞ்சை, திருநெல்வேலி மதகுருமார்களும் குறைகூறினர். அவர்கள் கூறியவற்றில் முக்கியமானவை,
        1.  மொழிபெயர்ப்பு மூலநூலைப் பெரிதும் தழுவவில்லை.
        2.  யாழ்ப்பாணத் தமிழ் வேறு, தமிழகத் தமிழ் வேறு. இது யாழ்ப்பாணத் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
        3.  ’வருவேன் என்ற எதிர்கால வினைச் சொற்கள் ’வருகிறேன்’ என்ற நிகழ்கால வினைச்சொற்களாக குறிக்கப்பட்டுள்ளன.
        4. இம்மொழிபெயர்ப்பில் வடசொல் மிகுதியாக உள்ளது.

வ.எ
பெப்ரீஷயஸ் பெயர்ப்பு
பெர்சிவல் பெயர்ப்பு
1
பொருத்தம்
சங்கற்பம்
2
பலிபீடம்
வேதரிகை
3
காணிக்கை
நிவேதனம்

          இந்தக் குற்றச்சாட்டுகளின் மீதான விரிவான உரையாடல்கள் நிகழ்த்தப்பட்டன.
        குறிப்பாக - பைபிளில் இடம்பெறும் இறைவனைக் குறிக்கும் சொல்லைச் சீகன் பால்கு சருவேசுவரன்’ எனவும், பெப்ரிஷியஸ் பராபரன்எனவும், மொழிபெயர்க்க, பெர்சிவல் தேவன்’ என மொழிபெயர்த்திருக்கிறார். தேவன் என்பது இருபால் பொதுச்சொல். அது தேவர்கள்’ எனப் பன்மையையும் குறிக்கும். அது ஓரிறைக் கோட்பாட்டுக்கு உகந்த சொல் அன்று. மேலும் இந்தியத் தொன்மங்களில் ’தேவர்கள் என்பது உபகடவுளர்களாவர். எனவே, இச்சொல் பொருத்தமற்றது எனவும், இது சைவசமயப் பற்றாளரான ஆறுமுகநாவலரால் வன்ம நோக்கோடு கிறித்துவ வேதத்தில் புகுத்தப்பட்டது எனவும் வாதிடப்பட்டது. பெர்சிவல் பதிப்புக்குப் பிறகும் வந்த பல்வேறு பதிப்புகளிலும் - அவரின் தேவன்’ என்ற சொல்லாட்சியே, சர்வேசுவரன், பராபரன் என 150 ஆண்டுகளுக்கும் மேலாக வழங்கி வந்த பெயர்களை மாற்றி நிலைத்துவிட்டது.
       வடமொழிச்சொற்கள் மிகுதி என்ற வாதமே தமிழகக் கிருத்துவ அமைப்புகளில் வைக்கப்பட்ட நிலைத்த குற்றச்சாட்டாக இருந்தது. இதுவே, வடமொழி, தமிழ்மொழி எனப் பிரித்துப்பார்க்கும் பல்வேறு ஆய்வுகளுக்குத் தொடக்கமாக அமைந்தது. தனித்தமிழ் இயக்கத் தோற்றத்திற்கு முன்னோடியாக அமைந்தது என்கிறார் சரோஜினி பாக்கியமுத்து. (விவிலியமும் தமிழும் 1990 .168)
        மேற்படி குற்றச்சாட்டுகளை அடிப்படையாகக் கொண்டு, பெர்சிவலின் மொழிபெயர்ப்பைச் சோதனை பதிப்பாகக் கொண்டு, புதிதாக ஒருமித்தப் பதிப்பாக, பவர் திருத்தப்பதிப்பு (1871 இல்) கொண்டுவரப்பட்டது. அதற்கும் பெர்சிவல் பதிப்பிற்கும் வடச்சொல் கையாளுகையில் பெரிய வேறுபாடு இல்லை.


 ªð£¼œ
ªð˜Cõ™ ªðò˜Š¹
ðõ˜ðFй
ªñ£ˆî ªê£Ÿèœ
  15,716
15,575
îI›„ ªê£Ÿèœ
  11,971
12,719
êñvA¼î„ ªê£Ÿèœ
  2,994
 2,856

மொழிபெயர்ப்பாளராக 

        பைபிள், மொழிபெயர்ப்பு, பழமொழிகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தமை மட்டுமின்றி பெர்சிவல், பழமொழியைப் போல அமைந்த நீதி இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
        குறிப்பாக ஔவையாரின் நீதி பாடல்கள் மீது மிகுந்த மதிப்பு கொண்டிருந்தார். அவை சுருக்கத்திலும் அழகிலும் இணையற்றவை எனக் குறிப்பிடுகின்றார். (பெர்சிவல், 1843, முகவுரை). அவற்றையும், சாதி சமத்துவம் முதலான நீதிகளைப் பேசக்கூடிய கபிலத் தேவர் அகவலையும் பெர்சிவல் ஆங்கிகலத்தில் மொழிபெயர்த்ததாக  அறிய  முடிகிறது.   

ஞாயிறு, 18 நவம்பர், 2012

ஆற்றுப்படை நூல்களில் புறத்திணைக் கூறுகள்


ஆற்றுப்படை நூல்களில் புறத்திணைக் கூறுகள்

 பா.குப்புசாமி
உதவிப்பேராசிரியர், தமிழ்ப்பிரிவு ,
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,
சிதம்பரம்.

          ற்றுப்படை நூல்கள் புறத்திணையைச் சார்ந்தது என்பது அனைவரும் அறிந்தது. வறுமையில் வாடும் கலைஞர்கள் மன்னர்களைப் புகழ்ந்து பரிசில் பெற்று தம் வாழ்வை மேம்படுத்திக் கொள்வர்.  அவ்வாறு அவர்கள் புகழ்ந்து பாடும் பாடல்கள் வீரம், கொடை முதலான புறத்திணை சார்ந்தவைகளாக அமைந்திருக்கும்.  அப்படி அவர்கள் பாடிய பாடல்களில் தொல்காப்பியர் குறிப்பிடும் புறத்திணை இலக்கணங்கள் அமைந்துள்ளதைக் காணமுடிகிறது.  அப்படி அமைந்த பாடல்கள் சிலவற்றை இங்கு காணலாம். தொல்காப்பியர் வகுத்துள்ள  புறத்திணை ஏழனுள் பாடாண்திணை என்பது முழுக்க முழுக்க ஆற்றுப்படையோடு பொருந்தும் திணையாகும்.  எனவே அதை விடுத்து பிற திணைகளை ஆற்றுப்படை நூல்கள் எவ்வாறு கையாண்டுள்ளன என்பன பற்றி இனி காணலாம்.

குடிநிலை

          வெட்சித் திணையில் வரும் குடிநிலை என்னும் துறை அரசனது குடிச்சிறப்பைப் போற்றும் துறையாகும்.  இத்துறையில் மன்னனது பரம்பரை அவர்களது வீரம் கொடை முதலிய சிறப்புகள் அனைத்தும் தொகுத்துத்தரப்படும் இத்தகு குடிநிலையைத் தொல்காப்பியர்,

          ‘‘மறங்கடைக் கூட்டிய குடிநிலை’’            (தொல் – பொருள். 62)
என்று குறிப்பிடுகின்றார். தொல்காப்பியரது இந்த இலக்கணத்திற்கு ஏற்ப சிறுபாணாற்றுப்படையில் வரும் ஒருபாடல் நல்லியக்கோடனது குடிப்பெருமையைப் பற்றிப் பேசுகிறது அப்பாடலடிகள் வருமாறு,

          ‘‘நன்மா இலங்கை மன்ன ருள்ளும்
          மறுவின்றி விளங்கிய வடுவில் வாய்வாள்
          உறுபுலித் துப்பின் ஓவியர் பெருமகன்’’
(சிறுபாணாற்றுப்படை. 121-123)

இதேபோன்று பெரும்பாணாற்றுப்படையில் ஒருபாடல் தொண்டைமான் இளந்திரையனது குடிப்பெருமையைப் போற்றுகின்றது.  அப்பாடல் வருமாறு,

          ‘‘முந்நீர் வண்ணன் பிறங்கடை அந்நீர்த்
திரைதரு மரபின் உரவோ னும்பல்’’ 
                (பெரும்பாணாற்றுப்படை. 30-31)
இளந்திரையனது குடிப்பெருமையைக் கூறிய இப்பாடலைப் போன்று பெரும்பாணாற்றுப்படையில் வேறொரு இடத்திலும் இளந்திரையனது  குடிப்பெருமை சுட்டப்பெற்றுள்ளன.  அப்பாடலடிகள் வருமாறு,

‘‘யான தாக்கினும் அரவுமேற் செலினும்
நீனிற விசும்பின் வல்லேறு சிலைப்பினும்
சூன்மகன் மாறா மறம்பூண் வாழ்க்கை
வலிக்கூட் டுணவின் வாட்குடிப் பிறந்த’’  
                               (பெரும்பாணாற்றுப்படை. 34-37)
மேலே சுட்டப்பட்ட பாடல்கள் மன்னனது குடிப்பெருமையைப் பற்றிப் பாடப்பட்ட குடிநிலை என்னும் துறைக்குரிய பாடல்களாகும். மன்னர்களைப் புகழ்வதோடு  இப்படி முன்னோர்களைப் புகழ்வதாலும் மன்னர் மனம் மகிழ்வடையும் என்பதை கலைஞர்கள் அறிந்திருந்தனர். எனவே பரிசில் பெற வரும் புலவர்கள் அரசனது முன்னோர் வரலாறுகளை அறிந்து வைத்துக் கொண்டு செல்வர்.

பூவைநிலை

          பாடப்படும் மன்னனை தெய்வத்தோடும் சூரியனோடும் ஒப்பிட்டுப்பாடுவது பூவை நிலையாகும். உலக மக்களால் மிக உயர்ந்தவர்களாக் கருதப்படுவோர் தேவர்கள். இதேபோன்று மிக உயர்ந்த பொருளாகக் கருதப்படுவது சூரியன் எனவே மன்னனைப் புகழ எண்ணும் புலவர்கள் அவனை தெய்வத்தோடும் சூரியனோடும் உவமையாக வைத்து பாடுகின்றனர்.  இதனைத் தொல்காப்பியர்,

          மாயோன் மேய மன்பெருஞ் சிறப்பில்
          தாவா விழுப்புகழ்ப் பூவைநிலை’’             (தொல் - பொருள். 63)
என்று குறிப்பிடுகின்றார்.  இந்த இலக்கணத்தோடு பொருந்திவரும் பொருணராற்றுப்படை பாடல் ஒன்று வருமாறு,

          ‘‘பவ்வ மீமிசைப் பகற்கதிர் பரப்பி
          வெவ்வெஞ் செல்வன் விசும்புபடர்ந் தாங்கு’’
          (பொருநராற்றுப்படை. 135-136)
இப்பாடல் கரிகால் வளவனை சூரியனோடு ஒப்பிட்டுப் பாடுவதாக அமைந்துள்ளது. உலகில் மிக உயர்ந்து மிக்க ஒளியினைப் பரப்பி வின்னில் படர்ந்திருப்பது போன்று கரிகால் வலவன் உலக மக்களை மேன்மையான இடத்திலிருந்து காக்கின்றன் என்னும்படி உவமையாகப் பாடப்படுகின்றது.

கொற்றவள்ளை

          தோற்ற மன்னன் வென்ற மன்னர்க்கு வரி செலுத்துவது அக்கால வழக்கு. வென்ற மன்னர் அப்பொருள்களைத் திரட்டி வறுமை என்று வருவோர்க்குக் கொடையாக அளிப்பான். பாட வரும் புலவர்களும் அத்தகு வறுமை நிலையில் இருப்பதால் அத்தகைய வரிப்பணத்தைப் பற்றி நினைவு கூர்வார்கள்.  இதனைத் தொல்காப்பியர் வஞ்சித் திணையில் கொற்றவள்ளை என்ற துறையில் பின்வருமாறு குறப்பிடுகின்றார்,

‘‘குன்றாச் சிறப்பின் கொற்ற வள்ளை’’               (தொல் - பொருள். 65)
இந்தத் துறையின் இலக்கணப்படி அமைந்த பொருநராற்றுப்படை பாடல் ஒன்று வருமாறு,
          ‘‘உயிர்ப்பிடம் பெறாஅ தூண்முனித் தொருநாள்
          செயிர்த்தெழு தெவ்வர் திறைதுறை போகிய
          செல்வ செறுமெந் தொல்பதிப் பெயர்ந்தென
          மெல்லெனக் கிளந்தன மாக வல்லே’’                       
 (பொருநராற்றுப்படை. 119-123)
இப்பாடல்மூலம் கரிகால் வளவனிடம் தோற்ற அரசர்கள் திறையாக பொருள்கள் பலவற்றைக் கொண்டுவந்து குவித்ததை அறியமுடிகிறது. இதன் மூலம் கரிகால் வலவன் பல நாடுகளுக்குச் சென்று பல மன்னர்களை வென்றுள்ளான் என்பது தெறிகிறது. குவிந்துள்ள திறைப்பொருள் தமக்கு சிறிது கிடைக்கும் என்ற எண்ணத்தில் பொருநர்கள் படியுள்ளதை இப்பாடல் தெளிவு படுத்துகிறது.

குற்றுழிஞை

          தனது படை வலிமை குன்றிய நிலையில் வீரன் ஒருவன் தன் உயிர் தப்பினால் பொதும் என்று பின் வாங்கி ஓடாமல் இறந்தாலும் போராடி இறக்க வேண்டும் என்று  தான் ஒருவனாகவே நின்று பகைவருடன் மோதுவது குற்றுழிஞை ஆகும்.  இதனைத் தொல்காப்பியர் உழிஞைத் திணையில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்,

          ‘‘திறல்பட ஒருதான் மண்டிய குறுமையும்’’  (தொல் - பொருள். 68)
இதனைப் புறப்பொருள் வெண்பாமாலை அழிபடை தாங்கல் என்ற துறையில் குறிப்பிடுகிறது.  தொல்காப்பியரது இந்த இலக்கணப்படி சிறுபாணாற்றுப்படையில் வரும் ஒருபாடல் வருமாறு,

          ‘‘விரிகடல் வேலி வியலகம் விளங்க
          ஒருதான் தாங்கிய உரனுடை நோன்தாள்’’
          (சிறுபாணாற்றுப்படை. 114-115)
இப்பாடலில் நல்லியக் கோடனது படை வலிமை குறைய அவன் மட்டும் தனியனாக நின்று போராடி வென்ற செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது. பெரும்பாலும் போர் வீரர்கள் இவ்வாறு படப்படுவார்கள். இலக்கண எடுத்துக்காட்டுகளும் இவ்வாறே அமைந்துள்ளன. ஆனால் ஆற்றுப்படை நூல்களில் மன்னன் தனியாக நின்று போரிட்டதாகப் பாடப்பட்டுள்ளன.

 மண்ணு மங்கலம்

          மதில் மேல் நின்று போர்புரிந்து பகைவனது மணிமுடியைக் கைப்பற்றுவது மண்ணுமங்கலம் என்னும் துறையாகும். இதுவும் உழிஞைத் திணையில் வரும் துறையாகும் மதிலைக் கைப்பற்றுதலே இதன் முதன்மை நோக்கம். அப்படி கைப்பற்றியதன் அடையாளமாக பகை மன்னனது மணிமுடிகளைக் கொண்டு வருவார்கள். இதற்கு மண்ணு மங்கலம் என்று பெயர்.  இதனைத் தொல்காப்பியர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்,

          ‘‘இகல்மதில் குடுமி கொண்ட மண்ணு மங்கலம்’’
(தொல் - பொருள். 69)
தொல்காப்பியரது இந்த இலக்கணப்படி சிறுபாணாற்றுப்படையில் வரும் பாடல் வருமாறு,


          ‘‘விரல்வேல் மன்னர் மன்னெயில் முருக்கி
          நயவர் பாணர் புன்கண் தீர்த்தபின்
          வயவர் தந்த வான்கேழ் நிதியமொடு’’    
             (சிறுபாணாற்றுப்படை. 247-249)
இப்பாடலில் பகை அரசனின் நிலைபெற்ற மதில்களை அழித்த நல்லியக் கோடனது வீரம் போற்றப்படுகிறது. இதேபோன்று பெரும்பாணாற்றுப்படையில் வரும் பாடல் வருமாறு,

          ‘‘புலவர் பூண்கட னாற்றிப் பகைவர்
          கடிமதி லெறிந்து குடுமி கொள்ளும்
          வென்றி யல்லது வினையுடம் படினும்’’  
(பெரும்பாணாற்றுப்படை. 450 -452)
இப்பாடலில் தொண்டைமான் இளந்திரையன் பகை அரசனது மதிலை அழித்து அவனது முடிகளைக் கைப்பற்றிய செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படி மணிமுடிகளை சேர்ப்பது தனது வீரத்தின் அளவீடாகக் கருதப்பட்டது.

முடிவுரை

          இலக்கியம் கண்டு அதற்கு இலக்கணம் இயற்றுதல் என்பது வழக்கு. அதன்படி தொல்காப்பியர் தனக்கு முன்பு இருந்த இலக்கியங்களைக் கண்டு அதற்கேற்ப தனது இலக்கண நூலை இயற்றியுள்ளார்.  ஆனால் தொல்காப்பியருக்குப் பின்வந்த இலக்கியங்கள் தொல்காப்பியரது இலக்கணத்தைப் பின்பற்றியுள்ளன.  எனவே இலக்கியம், இலக்கணம் இரண்டுக்குமான பொருத்தப்பாடுகள் காலந்தோறும் இருந்து கொண்டுதான் இருக்கும். அதனை இவ்வாய்வு எடுத்துக் காட்டியது.

###

வெள்ளி, 21 செப்டம்பர், 2012

தனித்தமிழ் அறிஞர் த.சரவணத்தமிழன்





தனித்தமிழ் அறிஞர் த.சரவணத்தமிழன்



திருவாரூரில் இயற்றமிழ்ப் பயிற்றகம் என்ற அமைப்பினைத் தொடங்கி பல்வேறு புலவர்களையும், படைப்பாளிகளையும், உருவாக்கியவர்.

நல்ல தமிழோசை, இயற்றமிழ், அறிவுப் பாய்ச்சல் ஆகிய இதழ்களை  நடத்தியவர்.

இவரின் தமிணூல், தனித்தமிழ் நாவலரின் கனித்தமிழ்க் கட்டுரைகள், இருநூல் பிழிவு, பழமையிலே பூத்த புதுமை மலர், யாப்பு நூல் உள்ளிட்ட நூல்கள் குறிப்பிடத்தக்கன.

இதில் தமிணூல் 20ஆம் நூற்றாண்டுக்கு ஏற்ப மரபான நூற்பா வடிவில் எழுத்து மற்றும் சொல்லிலக்கணம் பேசும் இலக்கண நூல்.

யாப்பு நூல் என்ற அவரது யாப்பிலக்கண நூல் திரைப்படப் பாடல்கள், புதுக்கவிதை ஆகியவற்றுக்கும் புதிய முறையில் இலக்கணம் கூறமுற்படும் சிறப்பிற்குரியது.

சொந்த ஊர் தஞ்சை மாவட்ட பாபநாசம் வட்டம், காந்தாவனம் கிராமம். (அடியார்க்குமங்களம்) இறுதி காலங்களில்  சென்னைத் தாம்பரம் அருகில் உள்ள கரிசங்கால் கிராமத்தில் பக்கவாதம் பாதித்த நிலையில் வாழ்ந்துவந்தார்.

தமிழாசிரியராக, தலைமையாசிரியராக பணி செய்து ஓய்வு பெற்றவர்.

செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டத்தில் தொகுப்பாசிரியராக சில காலமும், தமிழ்க்குடிமகன் அமைச்சராக இருந்தபோது தமிழ் வளர்ச்சித்துறை குழுவில் இலக்கணப்பிரிவில் சில காலமும் பொறுப்பு வகித்திருக்கிறார்.

தமிழ் வளர்ச்சித்துறை குழுவில் இலக்கணப்பிரிவில் சில காலமும் பொறுப்பு வகித்திருக்கிறார்.

கரந்தைத்  தமிழ்ச்  சங்கத்தில் புலவர் பட்டம் பெற்றவர்.

திருவாரூரில் திரு.வி.க.வுக்கு சிலை வைக்க காரணமாக இருந்தவர்.

மேற்படி சிறப்புக்குரிய த.சரவணத்தமிழன்  26.08.2012  அன்று  இரவு 8  மணி அளவில் சென்னைப் போரூரில் உள்ள இராமச்சந்திரா மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் இயற்கை எய்தினார். அவரது நினைவைப் போற்றி சென்னப் பல்கலைக் கழக தமிழ் இலக்கியத்துறை  12.09.2012  அன்று நினைவேந்தல் நிகழ்வை நடத்தியது. அதன் காணொளி பதிவைக் கீழே காணலாம்.


  













இவரைப் பற்றி மேலும்...


சனி, 7 ஜூலை, 2012

வெந்து முளைத்த விதைகள்:


வெந்து முளைத்த விதைகள்: சுப்ரபாரதிமணியன்
======================================
(நாவல் குமாரகேசனின் ‘ கோட்டை பொம்மக்கா”  சிறுகதைத்தொகுதி குறித்த மதிப்புரை)

 

                                                                    கொங்கு நாட்டு வட்டார மொழிப்பிரயோகமும், வாழ்க்கையும் கவனிக்கத்தகுந்த அளவில் நாவல்குமாரகேசனின் படைப்புகளில் சமீபத்தில் வெளிப்பட்டிருப்பதால் அவரைக் கூர்ந்து கவனித்து வந்தேன். பெயரில் இருந்த விசித்திரத்தன்மையும் கூட. நாவல் என்பது பழமா, ஊரா, பெண்ணா என்று குழப்பம் தந்தது. குமாரகேசன் என்ற பெயர் குமரேசனிலிருந்து ஏதோ மருவி யிருப்பது தெரிந்தது. அத்ற்கெல்லாம் விளக்கம் அவரின் நூலில் இருக்கிறது. அதை வெகு தாமதமாகவே தெரிந்து கொண்டேன். அவர் கொங்கு நாட்டு ஆசாமி . கேரளாவில் தொழில் செய்கிறார் என்பதும், கொங்கு வட்டாரப் பிரயோகம்  தவிர இவரின் படைப்புகளில் குழந்தைகள் உலகமும், பிராணிகளின் உலகமும், தொன்மங்களின் மறு வாசிப்பும் கவனிக்கத்தக்கது.


                                                            குமரகேசனின் குழந்தைகள் பிராணிகளை மிகவும் நேசிக்கிறார்கள். மனிதர்களைப் போலவே அவர்களுக்கும் பெயர் இட்டு அழைக்கிறார்கள். சகமனிதனாய் நட்த்துகிறார்கள். அதனால்தான் அவர்களைக் காயடித்து, பின் சாமிக்கு பலியிடும் போது வாழ்க்கையின் விளிம்பிற்கே சென்று விடுகிறார்கள். தன் பக்கத்து நியாயமும், எதிர்ப்பும் எப்படியோ காட்டி ஓய்ந்து விடும் போது சுக்கு நூறாக உடைந்து போகிறார்கள். எறும்புகளைக்கூட அழுத்தமாய் தள்ளி விடும் இயல்பில்லாமல் மெதுவாக ஊதித் தள்ளி விடுகிறார்கள். மதிய உணவிற்காக விறகைச் சேமிக்க விறகு வெட்டப்போய் பாம்பு தீண்டி துன்பத்திற்கு ஆளாகிறார்கள். பள்ளிக்கல்வி மறுக்கப்பட்ட சாதாரண குழந்தைகளை ஈரத்துடன் காட்டுகிறார். பிராணிகளுக்கும் ஆன்மா இருப்பது போல அவைகள் மகிழ்ச்சி கொள்வதாய் எழுதப்பட்டுக்கும் வரிகள் அற்புதமானவை. கொளிஞ்சி விற்று வருகிற காசில் மசாலா வடை வாங்கித்தின்கிற ஆசை போல இவர்களின் ஆசைகள் மலிந்து கிடக்கின்றன.

                                                              அன்பும், மனித நேயமும் கிராம மக்களிடம்  வெகு சிறப்பாக வெளிப்படும் போது  இருக்கும் மனப்பகிர்தல்  விரிவாகச் சொல்லப்படுகிறது., அவர்களில் சிலர் ஏமாற்றுவர்களாக இருப்பது காட்டப்படுகிறது. ஏமாற்றுகிற கர்ப்பிணிப் பெண், சாமக்கோடாங்கியின் பின்னணியும் தெரிவதில்லை ஆனால் சங்கடப்படுத்துகிறது.மண்ணின் மனிதர்களான ஆதிவாசிகள் ஒவ்வொரு இடமாய் அலைக்கழிக்கப்படுகிற விசயமும் கூட. கடவுள்கள் கூட அவர்களைக் காப்பாற்றுவதில்லை. அவர்களே வெறுமனே கோபம் கொண்டு முகத்தைத்  திருப்பிக் கொள்கிறார்கள் . ஒரு பக்கம் சாயப்பட்டறைகள், இன்னொரு பக்கம் தோல் பதனிடும் தொழிற்சாலைகள். இவற்றுக்கிடையே இருந்து காலம் தள்ள முடியாத கடவுள்கள் தொலை தூரம் ஓடிப்போகிறார்கள். சாலை விஸ்தாரத்தில்  பிடறி தள்ளி ஓடிப்போகிறார்கள். நாத்திகத்திற்கு வலுசேர்க்கும் படிமங்கள்.இன்னொரு புறம் வரலாற்றை படிமமாக்குகிற  முயற்சியாக  கோட்டை பொம்மாக்கா போன்ற கதைகள் தென்படுகின்றன.  ஆடு மேய்க்கும் பெண் நரியையும் சகா போல் நேசிக்கிறாள். ஆனால் அந்த கர்ப்பிணிப் பெண்ணை நரி வயிற்றைக் கிழித்துப் போட்டு விடுகிறது.  மனிதர்களின் நம்பிக்கை துரோகங்கள் போல் பிராணிகளிடதிலும்  உள்ளது.பூர்வீக வீட்டில் கழுதைகளின் ஓலம் போல் சடங்குகளை  கிண்டல் செய்கிறவை புது வார்ப்புகள் ..கிராமங்கள் மாறாமல் இருக்கின்றன். வாகனங்களின் அபரிமிதமாக இயக்கம் அவர்கள் வாழ்க்கை ஓடிக் கொண்டிருப்பதைக் காட்டுகிறார்..கொங்கு மொழி வாயிலாக ஒரு கதை சொல்லியும், குழந்தை மனமும் சரியாக வெளிப்பட்டிருக்கிறது.இதில் வரும் சில கதைகளின் தர்க்க்குறைபாடுகளை இதன் முழு எதார்த்தமும், சொல்லும் மொழியும் மறைத்து விடுகிறது. கிராமிய வாழ்க்கையை இன்றைய வாழ்க்கையோடு இணைக்கும் கணிகள் இல்லாமல் இருக்கின்றன.

                                                               உலகம் விரிந்ததாய் எல்லோருக்குமான களமாய் இருக்கிறது. ஆனால் தங்களுக்கான வெளியும் இடமும் அற்றவர்களாய் போய் விடுகிற மனிதர்களை இவர் பெரும்பாலும் காட்டுகிறார். ஆடுமாடுகளை நேசிக்கும் சிறுவன்  அவனின் உலக்த்திலிருந்து துரத்தப்பட்டு கிணற்றில் விழ நேருகிறது, படிக்கப் போய் மதிய உணவு சமயலுக்காக  சிறுவர்கள் விறகுவெட்டிகளாகிறார்கள். மசால் வடை வாசனை பிடிக்க கொளுஞ்சி பிடுங்கப் போய் விடுகிறார்கள். தன் குடும்ப வாழ்க்கை மேம்பட வீட்டில் உள்ள பொருட்களையெல்லாம் இழக்கும் பெண்ணும் தாய் வீட்டுற்குத் துரத்தப்படுகிறாள்.ஆதிவாசிகள் தங்களின் பூர்வீக நிலத்தை விட்டு துரத்தப்படுகிறார்கள். வேறு மாநில தமிழர்கள் துரத்தப்படவும் பல காரணங்கள் அமைந்து விடுகின்றன. ..தங்களுக்கான வெளியை இழந்து போய் நிற்பவர்களாக இருக்கிறார்கள்.
 
                                                                இவரின் பிரதேசம் பற்றி இவரே இப்படி சொல்கிறார்:” கொங்கு தேசத்தில் ஏகதேசமாக தென்கிழக்குப் பகுதிதான் நான் பிறந்த பூமி. விவசாயிகளில் இரண்டு ரகம் உண்டு. செழிப்பான ஆற்றுப் படுகைகளில் வ்யல்பரப்புகளுடன் வாழ்பவனும் விவசாயிதான். கள்ளிமரங்கூட பல்வற்றிக்கிடக்கு மேட்டாங்காடுகளில் காடுகரையுடன் காலந்தள்ளுபவனுன் விவசாயிதான். கண்ணுக்கெட்டும் தொலைவிற்கு குளமோ ஆறோ நீர் ஆதாரம் கொண்ட மலையோ தட்டுப்படாத பகுதிதான். ஆனி, ஆடியில் பனைமரம் கூட வாடி நிற்கும். பல பஞ்சத்திலும் சிறுகச்சிறுக உயர்ந்து வளர்ந்து சிறிதேனும் பசுமை கொண்டிருந்த பனை மரங்களும் குருத்து தொங்கி  காயந்து விழுந்தன. பனை மரங்கள் ஜீவமரணப் போராட்டதுடனே வழங்கிய பதனியும் நுங்கும் சேகாயும், பனம்பழமும், பனஞ்கிழங்கும் எமது மக்களின் பசியைப் போக்கியதை விட பட்டினியைப் பல நாட்கள் குறைத்தன. இது போக ஆடுமாடுகளுக்கு வேப்பிலையும், அரப்பிலையும், வேலாங்காயும் தழையும் வளர்ப்புத்தாயாக வழங்கிய  மரங்கள் கூட காலத்தின் கொடூரத்தால் எம்மை விட்டுப் பிரிந்தன. பலவற்றை வயிற்றுக்காகவே இழக்க வேண்டியிருந்த்து. கையை வெட்டி வித்துப் பிழைப்பது போலிருந்தது நிலைமை. கால ஓட்டத்தில் பஞ்சத்தின் கோரப்பிடியால் சோறு போட்ட ஆடு மாடுகளையும் காசிற்கு விறக் வேண்டியது வந்தது. ஒரே தலைமுறையில் முட்டிதூக்கிப் பஞ்சம், துவரைப் பஞ்சம், கோதுமைப்பஞ்சம் எனப் பல வறட்சியில் மக்கள் அலைக்கழிந்து போனார்கள். கூலிக்காரர்களும் பண்ணையக்காரர்களும் பிறந்த மண்ணை விட்டு பிழைப்புத்தேடி புலம் பெயர்ந்து புறப்பட வேண்டிய துர்நிலை ஏற்பட்டது. இளைய தலைமுறையினர்க்கு கல்வி கற்க வேண்டிய சமயத்தில் குடும்பத்ஹ்டைக் காப்பாற்ற புலம் பெயர்ந்து அடுத்த மண்ணிற்கு புறப்பட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. பிறந்த பூமியென்று புலம்பிக் கொண்டிருந்தால் இடுப்புக் கோவணம் கூட மிஞ்சாது என்றதோர் நெருக்கடி. இதையெல்லம் மீறி என்ன நடந்தாலும் பிறந்த மண்ணிலேயே சாவோம் என்று வாழ்ந்து காட்டியவர்களின் வாழ்க்கைதான் இத்தொகுப்பில் இடம் பெற்ற அனேக கதைகள்.”

                                                                          எழுதிச் செல்லும்,  சொல்லும் விதத்தில் நுணுக்கமானப் பார்வை. சிறுகதைகளின் முரண்  வலிந்து இல்லாததாய் இயங்கிறது. ஜாதியக் குழுக்களும், முரணும், சங்கடங்களும் ஒளிவு மறைவின்றி சொல்லப்பட்டிருக்கிறது. இளம் பிராயத்தில்  மனதில் ஆழப்பதிந்து போன சுவடுகள்.கொங்கு மொழி படைப்பிலக்கியத்தில் காணாமல் போய்க் கொண்டிருக்கும் சூழலில்  அதை நுணுக்கமாகவும் ஆழமாகவும் பயன்படுத்தும் லாவகம்.நாவல் குமரேசனிடமிருந்து  விரிவான நாவல் வடிவப்படைபடைப்புகளை எதிர்பார்க்க வைக்கிறது. கொங்கு கலாச்சார அம்சங்களில் ஆழமான ஈடுபாடு.மொழியின் லாகவம், மக்களை வாசிக்கிற அக்கறை இவையெல்லாம்  அந்நிய மாநிலத்தில், அந்நியப்பட்ட சூழலில் தன் வேர்களை அடையாளப்படுத்துகிற முயற்சியாக குமரகேசனின் எழுத்து வெளிப்பட்டிருக்கிறது. இது இவரின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பாகும்.

###


கோட்டை பொம்மக்கா -சிறுகதைத்தொகுதி- நாவல்குமாரகேசன் - வெளியீடு: அன்னை ராஜராஜேஸ்வரிர் பதிப்பகம், சென்னை 11- விலை:ரூ 80/  - பக்: 128.
------------------------------------------------------------------------------------------------------------
நாவல்குமாரகேசனின் தொடர்பு முகவரி:

நாவல் குமாரகேசன், நாவலூற்று, கோடாங்கிபட்டி (அஞ்சல்), வேடசந்தூர் (வழி), திண்டுக்கல் மாவட்டம் – 624 710.
NAVAL KUMARAGESAN, THIRUMALA BHAVAN, KOTHAMANGALAM, KOYILANDY (P.O.),  KOZHIKODE,  KERALA – 673 305.    CELL : 09846889258
( இக்கட்டுரை உயிர் எழுத்து - ஜூலை இதழில் வெளியாகியுள்ளது.) நன்றி! உயிர் எழுத்து.

இந்த நூல் வெளியீட்டுப் பதிவுகளைக் காண கீழே சொடுக்குங்கள்.
http://kurinjivattam.blog.com/2012/05/03/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D/