டாக்டர் பீட்டர் பெர்சிவல் - 2
Dr. Peter Percivel (24.7.1803 - 11.07.1882)
Dr. Peter Percivel (24.7.1803 - 11.07.1882)
---------------------------------------------------------------
ஜெ.இராதாகிருஷ்ணன்,
முனைவர்பட்ட ஆய்வாளர்,
சென்னைப் பல்கலைக்கழகம்,
சென்னை 5
கல்வியாளராக...
கல்வியின் மூலம் மதம்பரப்புதலைக் கொள்கையாகக் கொண்டிருந்த
மெத்தடிஸ்டு சபையைச் சேர்ந்த பெர்சிவல் யாழ்ப்பாணத்தில் தமது காலத்தில் பல்வேறு பள்ளிகளைத்
தொடங்கினார். அவர் யாழ்ப்பாணத்தையும், அந்தச்
சபையையும் விட்டு 1851இல் விலகுவதுவரை 26க்கும் மேற்பட்ட பள்ளிகளைத் தோற்றுவித்தார்.
இடையில் நிகழ்ந்த (1829 -1931) கல்கத்தா பயணத்தின்போது அங்குச் சந்தித்த பிரிஸ்பைடீரியன் மிஷனைச் சார்ந்த
அலெக்சாண்டர் டவ் (DUFF) அவர்களால் கவரப்பட்டு, புதிய கல்விச் சிந்தனைகளைப் பெற்றார்.
மீண்டும் யாழ்ப்பாணம் திரும்பிய உடன் பெண்கள் பள்ளியினை
நிறுவினார். பருத்தித்துறை - மெத்தடிஸ்ட்
பெண்கள் பள்ளி, வேம்படி பெண்கள் உயர்நிலைப் பள்ளி, ஹார்லி கல்லூரி, மத்தியக் கல்லூரி முதலிய கல்வி நிறுவனங்களை
நிறுவினார்.
கல்வி மதப்பிரச்சாரத்திற்கு அப்பாற்பட்டது,
உயர்வானது எனக் கருதினார். இதனால் தமது சபையினருடன்
ஏற்பட்ட உராய்வில் 1851இல் அச்சபையுடனான உறவை முடித்துக்கொண்டு
இலண்டன் சென்றுவிட்டார். எனினும் இவர் யாழ்ப்பாணத்தில் செய்த
கல்விப்பணி - தலைமுறை கடந்து பயன் தந்தது. 19ஆம் நூற்றாண்டில் ஈழத்தமிழ்ச் சமூகத்தை இலக்கிய நிலையாலும், சமூக நிலையாலும் மேம்படுத்தியது. விடுதலைக்குப் பிந்தைய
சுதந்திர இலங்கையில் (1948) சிறுபான்மை தமிழ்ச்சமூகம் பெரும்பான்மையான
சிங்களவர்களைவிட விரிவான கல்வியறிவும், பல்வேறு அரசு உயர்பதவிகளில்
இருக்கவும் செய்தது. இந்நிலைப்பாட்டிற்கு, மேற்படி கிருத்துவ நிறுவனங்களின் பங்களிப்பும், டாக்டர்
பெர்சிவலின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது.
இதன்பிறகு லண்டனில் மூன்றாண்டுகள் கேண்டர்பரி
- புனித அகஸ்டின் கல்லூரியில் இந்திய மதங்கள் குறித்த கல்விப் புலத்தில்
ஆசிரியராகப் பணிபுரிந்தார். அது அவரைக் கல்வியாளராகவே தொடர வைத்தது.
அங்கு அவர் நடத்திய பாடங்களின் தொகுப்பாக ÔThe land of vedaÕ (வேதபூமி) எனும் நூல் வெளிவந்தது. அதுவே அவரை மீண்டும் இந்தியாவை நோக்கி வரவைத்தது.
1854இல் ஆங்களிகன் மிசனரி போதகராகத் தென்னிந்தியா
வந்தார். 1955இல் மதகுருவாகச் சென்னைப் பேராயரால் நியமிக்கப்படுகிறார்.
எனினும் அதில் அவரால் நீடிக்க முடியவில்லை.
1856இல் சென்னை மாநிலக் கல்லூரியின் கீழைதேய மொழியியல்
பாடப் பேராசிரியராகவும், பின்னர்ச் சென்னைப் பல்கலைக்கழகப் பதிவாளராகவும்
பணியாற்றுகின்றார். இடையில் 1860களில் பொதுக்கல்வி
இயக்குநரின் ஆணையின்படி பள்ளிப்பிள்ளைகளுக்கான அகராதிகள், பாடத்திட்டங்கள்
உருவாக்கும் பணியிலும் நியமிக்கப்பட்டுள்ளார். (கா.மீனாட்சிசுந்தரம்,2003,ப.89) இவ்வாறு
1870 வரையிலான இவரின் கல்விப்புலச் செயல்பாடுகளும் விருப்பமும் படிப்படியாக
மதநிறுவனங்களின் பிரச்சாரப் பிடியிலிருந்து இவரை விலக்கி வைத்தன.
ஆராய்ச்சியாளராக...
பெர்சிவல் யாழ்ப்பாணத்தில் தமிழ் கற்றுக்கொள்ளும்போதும்,
மதப் பிரச்சாரத்தின்போதும் தமிழர்களின் பேச்சின் ஊடே சரளமாக வரும் பழமொழிகள்
குறித்து ஆர்வம் கொண்டு திரட்டத்தொடங்கினார். மேலும்,
பழமொழி என்பது ஒரு சமூகத்தை அறிந்து கொள்ள உதவும் சுருக்கமான எடுத்துக்காட்டு
எனக் கருதினார். எனவேதான், இவர் தான் திரட்டிய
பழமொழிகளின் தொகுப்பிற்கு ’திருஷ்டாந்த
சங்கிரகம்’ எனப் பெயர்
சூட்டியுள்ளார். (திருஷ்டாந்தம் - எடுத்துக்காட்டு,
சங்கிரகம் - சுருக்கம்.) அவரே அவற்றுக்கு ஆங்கிலத்தில் விளக்கம் எழுதி முதலில் 1842இல் யாழ்ப்பாண, அமெரிக்கன் மிஷனரி பிரஸ் மூலம் வெளியிட்டார்.
பெர்சிவலின் தமிழ்ப் பழமொழி தொகுப்பு - முதற்பதிப்பு. |
பெர்சிவலின் தமிழ்ப் பழமொழி தொகுப்பு - முதற்பதிப்பு முகவுரை. |
பெர்சிவலின் தமிழ்ப் பழமொழி தொகுப்பு - முதற்பதிப்பு மாதிரி. |
பழமொழித் தொகுப்பு...
அக்காலத்தில்
ஐரோப்பியர் பலரும் ஒருசமூகத்தின் ஆன்மாவைக் கண்டடைய, புரிந்துகொள்ளப்
பழமொழி முதலான வாய்மொழி மரபுகள் உதவும் என
அவற்றை ஆவணமாகத் திரட்டினர். மேலும்,
புதிதாக வரும் ஐரோப்பியர்களுக்கு ஒரு மொழியைக் கற்றுக்கொள்வதில் இலக்கண
அறிவு, சொல்லறிவு மட்டும் போதுமானதாக இல்லை. மொழியில் பயன்படுத்தப்படும் மரபுத் தொடர்களான பழமொழிகள் போன்றவை உணர்த்தும்
பொருளும் சூழலும் அறிந்துகொள்ளச் சிரமப்பட்டனர். எனவே அவற்றைத்
தொகுத்து விளக்கமளிக்க முயன்றுள்ளனர். அதிலும் குறிப்பாகப் பெர்சிவல்
சென்றவிடமெல்லாம் பழமொழியைத் திரட்ட முயன்றுள்ளார். சிலர் இவரின்
இந்தத் தேடலுக்கும் கல்கத்தா பயணம்தான் காரணமாக அமைந்தது என்கின்றனர். (சி.இளங்கோ,2003, ப.31)
தன் வாழ்வின் இறுதிவரை பழமொழிகளைத் திரட்டுவதையே தம்
வேலையாக வைத்துக் கொண்டார் இவர். தெலுங்கு பழமொழிகளைத் திரட்ட
முற்பட்ட இவர் மேஜர் கேர் (Major Caar)
அப்பணியை முன்னமே செய்வதறிந்து அவரிடமே தமது தெலுங்கு பழமொழித் திரட்டை
ஒப்படைக்கிறார். அப்படியே எட்டாண்டுகளாகத் தமிழ்ப் பழமொழிகளைத் தொகுத்த
புனிதர் ஜிஃப்ரேயர் தமது ஐயாயிரம் பழமொழி தொகுப்பைப் பெர்சிவலிடம் ஒப்படைக்கிறார்.
பெர்சிவல் தமது தொகுப்புகளுடன் ஒப்பிட்டு, புதிய
100 பழமொழிகளைக் கண்டுபிடித்துச் சேர்த்துக் கொண்டார். (முனைவர் கா. மீனாட்சிசுந்தரம், 2003,ப218) தமது தினவர்த்தமானி பத்திரிகையில் ஆங்கில மொழிபெயர்ப்புகளுடன்
வெளியிட்டுள்ளார். இதுபோலப் புதியன கண்டறிந்து உதவவும் தமது இதழிலேயே
வாசகர்களிடம் அவ்வப்போது வேண்டியுள்ளார்.
இதன் பயனாக அவரது 1842இல் வெளியிட்ட
பழமொழி தொகுப்பில் 1873ஆக இருந்த பழமொழிகளின் எண்ணிக்கை,
1874இல் வெளியிட்ட திருத்திய பதிப்பில் 6156 ஆக
உயர்ந்துள்ளது.
1872ஆம் ஆண்டில் பெர்சிவல் 15000 பழமொழிகள் தொகுத்து வைத்திருப்பதாகவும்,
அவற்றில் மீண்டும் மீண்டும் வந்தவற்றையும், ஔவையாரின்
வாசகங்களையும், சமஸ்கிருதப் பழமொழிகளாக இருந்தவற்றையும் நீக்கிவிட்டதாகவும்
கூறுகின்றார். இப்பழமொழி தொகுப்புகளை அகர வரிசையில் அமைத்துள்ள,
பெர்சிவல் இவை பொருண்மை அடிப்படையில் தொகுக்கப்பட வேண்டும் எனவும் விரும்பியுள்ளார்.
அதே போலப் பழமொழிகளை மொழி பெயர்ப்பில் அதே வேகமும் இனிமையுடனும் அமைக்கமுடியவில்லை
எனவும் வருத்தப்பட்டுள்ளார். (முனைவர் கா. மீனாட்சிசுந்தரம்,2003,ப.215)
இவரது பழமொழித்
தொகுப்புகளைக் கீழ்க்கண்டவாறு மதிப்பிடலாம்.
- - திருக்குறள் அடிகள் சில பழமொழிபோல் கையாளப்பட்டுள்ளன.
- - சில பழமொழிகள் முழுமையும் அமையாமல் ஓரிரு வரிகள் விடுபட்டுள்ளன.
- - அறிவியல் நிகழ்வுகள் சில பழமொழிபோல் கொடுக்கப்பட்டுள்ளன.
- - செய்திகள் பழமொழியாகக் குறிக்கப்பட்டுள்ளன.
- - பல சங்கேதக் குறிப்புகள், உவமைகள், துணுக்குகள் எல்லாம் பழமொழி என்ற பெயரில் தொகுக்கப்பட்டுள்ளன. (சி.இளங்கோ;பக்.46-47)
இவையன்றிச்
சில பழமொழிகள் தவறாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு
’அடியாத மாடு
படியாது’ என்ற பழமொழி, ’அடியாத நாடு படியாது’ (பெர்சிவல், 1843,ப.11) எனப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆங்கில மொழிபெயர்ப்பும்
அப்படியே அமைந்துள்ளது.
அதேபோல, சில பழமொழிகளைப் புரிந்து
கொள்ளமுடியாமல் தவறாக மொழிபெயர்த்துள்ளார். சான்றாக,
82. அற்பசிக்குங் கார்த்திகைக்கும் மழையில்லா விட்டால்
அண்ணனுக்குஞ்சரி தம்பிக்குஞ்சரி
(பெர்சிவல்,1983,ப.12)
என்ற பழமொழி உணர்த்தும் தொனிக் குறிப்பை
உணர்ந்து கொள்ளாமல்,
If
no rain falls in October
and November the elder and younger brother are on an equality.
என மொழிபெயர்க்கிறார். (அண்ணனுக்குஞ்சரி தம்பிக்குஞ்சரி என்பது குறிப்பால் பஞ்சத்தின் காரணமாகச் சண்டை
வரும் என்பதே பழமொழி உணர்த்தும் கருத்து.)
இவை
போல - பழமொழிகளை ஐரோப்பியர் புரிந்து கொண்டமையும்,
மொழிபெயர்த்தமையும் சுவையான உரையாடலுக்குரியதாய் அமையக்கூடியன.
எனினும், பெர்சிவலின் இந்தத் தொகுப்பு முயற்சி
பிற்காலத்தில் பல்வேறு பழமொழித் தொகுப்புகள் உருவாக வழிவகுத்தன. இவைதான் - இந்தியப் பண்பாட்டை உணர்ந்து கொள்ளவும்,
சொற்பொழிவுகளைச் சுவையாக அமைத்துக் கொள்ளவும் அவருக்கு உதவியுள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக