வெள்ளி, 25 ஜனவரி, 2013

மறன் பாப்பாவினம்


இலக்கணச் சான்றிலக்கியம்மறன் பாப்பாவினம்
----------------------------------------------------------------
பா.குப்புசமி
உதவிப்பேராசிரியர்
தமிழ்ப்பிரிவு
தொலைதூரக் கல்வி இயக்ககம்
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
 


தமிழ் இலக்கணத்தை ஐந்து பிரிவுகளாகப்பகுத்துள்ளனர். அவற்றுள் யாப்பிலக்கணமும் ஒன்று. பிற இலக்கணம் போன்று யாப்பிலக்கண நூல் தமிழில் அவ்வளவாகத் தோன்றவில்லை தொல்காப்பியர் செய்யுளியலில் தொடங்கிவைத்த யாப்பிலக்கணம் யாப்பருங்கலக்காரிகை, யாப்பருங்கல விருத்தி என்று தனி இலக்கண நூல்கலாக உருவானது. பின்னர் வந்த பாட்டியல் நூல்கள் சில யாப்பிலக்கணத்தைக் கூறியுள்ளன. அதன் பிறகு எந்த இலக்கணமும் யாப்புக்குத் தோன்றவில்லை. நீண்ட இடைவெளிக்குப்பின் 16 ஆம் நூற்றாண்டில் மாறன் பாப்பாவினம் என்ற நூல் தோன்றியது. இந்நூல் யாப்புக்குச் சான்றிலக்கியமாக அமைந்துள்ளது. இதை இயற்றியவர் திருக்குருகை பெருமாள் கவிராயராவார். திருக்குருகை பெருமாள் என்பது நம்மாழ்வாருடைய வேறு பெயர்களுள் ஒன்று அவர் மீதுள்ள பற்றினால் சடையன் என்ற தனது இயற்பெயரை திருக்குருகை பெருமாள் என்று மாற்றிக்கொண்டார்.

          அகப்பொருளுக்குத் தஞ்சைவாணன் கோவை போன்று யாப்புக்குமாறன் பாப்பாவினம்அமைந்துள்ளது. இலக்கணம் கூறாமல் அதற்கான சான்றிலக்கியங்கள் மட்டும் கோவையாகக் கூறப்பட்டுள்ளன. யாப்பிலக்கணம் கூறும் வரிசப்படி இப்பாடல்களின் வரிசைமுறை அமைந்துள்ளன. இந்நூலில் யாப்புக்கு மட்டுமின்றி அகம், புறம், அணியிலக்கணங்களும் சான்று பாடல்கள் ஆங்காங்கு கிடைக்கின்றன.
         
          140 செய்யுள்களைக்கொண்டுள்ள இந்நூல் தொல்காப்பியரது செய்யுளியலை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்டுள்ளது. யாப்பருங்கலம் யாப்பருங்கல விருத்தி குறிப்புகளையும் ஆங்காங்கு தருகிறர் ஆசிரியர். பரிபாடலுக்குத் தொல்காப்பியம் மட்டுமே இலக்கணம் கூறியுள்ள நிலையில் இந்நூலாசிரியர் பரிபாடலுக்கு 5 பாடல்கலைச் சான்றாகப் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


          இந்த நூல் ஒரு முழுமையான வைணவ இலக்கியம் எனவே பின் வந்த இலக்கணிகள் இந்நூல் பாடல்களையே மேற்கோளாக எடுத்தாண்டுள்ளனர். இந்நூலைப் பயின்ற சைவ சமயத்தினர், சைவத்திலும் இப்படியொரு சான்றிலக்கியம் வேண்டுமென எண்ணி குமர குருபரரின் துணை கொண்டு ‘சிதம்பரச் செய்யுட்கோவை’ என்ற நூலை உருவாக்கியுள்ளார். இதேபோல் தற்காலத்தில் இந்நூலை அடிப்படையாகக் கொண்டு வைணவ சமய கருத்துக்களை வெளிப்படுத்தும் விதமாக ‘அரங்கன் செய்யுள் அமுதம்’ என்ற நூலாக வெளியிட்டுள்ளார் கவிஞர் சக்தி சரணன் அவர்கள்.

நூல் பொருள்
          மறன் என்ற சொல் நம்மாழ்வாரைக் குறிக்கும் இந்த நூலில் திருமாலைப்பற்றியும் நம்மாழ்வாரைப்பற்றியும் பாடல்கள் அமைந்துள்ளன. நம்மாழ்வாரைப்பற்றிய படல்கள் மிகுதியாக அமைந்துள்ளதால் இந்நூல் ‘மாறன் பாப்பாவினம்’ என்று பெயர் பெற்றுள்ளது. முன்பு கூறியது போன்று இது யாப்பிலக்கணச் சான்றிலக்கியம்  என்பதால் நாண்குவகை பாக்களுக்கும் பாவினங்களுக்கும் சான்று கூறப்பட்டுள்ளது. இதனால் பாப்பாவினம் என்ற பெயரை வைத்துள்ளனர். இந்த நூலில் நம்மாழ்வாரது முதன்மைச் சீடரான மதுரகவியாழ்வாரைப் பற்றியும் இரண்டு பாடல்கள் பாடப்பட்டுள்ளன. இலக்கணச் சான்றிலக்கியமாக அமைந்த இந்நூல் சிறந்த பக்தி நூலாகவும் சிறந்த இலக்கியச் சுவை மிகுந்த நூலாகவும் அமைந்துள்ளது.

இலக்கணச் சான்று
          இந்த நூல் யாப்புக்குச் சான்றிலக்கியமாக இயற்றப்பட்டிருப்பினும் இதில் அமைந்துள்ள பாடல்கள் அகத்திணைக்கும், புறத்திணைக்கும், அணியிலக்கணத்துக்கும் கூட சான்றுகளாக அமைந்துள்ளன. இக்கூற்றினை நிறுவும் வகையில் இக்கட்டுரை அமைகிறது. இனி இந்த மூன்று இலக்கணங்களுக்கும் ஒவ்வொரு சான்று பாடல்களையும் அவை அவ்விலக்கணப்படி அமைந்துள்ள பாங்கினையும் ஆராயலாம்.

அகப்பொருள்
          இந்த நூலில் வரும் 42 ஆம் பாடல் அகத்திணை களவியலில் வரும் பகற்குறி தொடர்பானதாக அமைந்துள்ளது. துறை ‘வருத்தம் கூறி வரைவு கடாதல்’ என்பதாகும். பாடல் வருமாறு,

           காமரு பல்மரம் கஞலிய பொதும்பர்
                மாமரப் பணையின் மதுகரம் இழைத்த
                முதிர்நறுந் தேறல் நொதுமலர் முன்னுபு
                கொளத்தகு மரபின் குன்ற வான!
                வரைதலின் வரையாது ஒழுகலின் இருவிரும்
                மாறுபட்டு ஒழுகிய மதியினிர் ஆதலின்
                திருமகிழ் மாறன் திருவருட்கு இலக்காய்
                ஒழுகா மதியின் மறுகுவல் யானே.

இப்பாடல் நேரிசை ஆசிரியப்பாவுக்குச் சான்றிலக்கியமாகப் படைக்கப் பட்டுள்ளது. இப்பாடல் அகத்திணையில் அமைந்துள்ளது. தலைவனிடம் தலைவியை மணக்கும்படி தோழி கூறுவதாக அமைந்துள்ளது. தலைவியோடு பொருந்தாத மனம் கொண்டால் மட்டுமே திருமணத்தைத் தள்ளிப் போடமுடியும் எனவே அத்தகு மனத்தினை ஒரு உவமை மூலம் விளக்குகிறார் கவிஞர். மாறனது அருளுக்கு ஆட்படாத உள்ளத்தினை எடுத்துக் காட்டுகிறார். உள்ளுறை உவமமும் இப்பாடலில் பயின்று வந்துள்ளது. தேனீக்கள் தேடித் தொகுத்த தேனைப் பிறர் கவர்ந்து கொள்வது போல தலைவியை நீ மணக்காது விட்டுவிட்டால் அவளது தாய்தந்தையர் பிறருக்குத் திருமணம் செய்யக்கூடும் என்பதை உள்ளுறை உவமையாகக் குறிப்பிடுகின்றார்.

புறப்போருள்
          இந்நூலில் வரும் 18 ஆம் பாடல் புறத்திணையில் வஞ்சித்திணையைச் சார்ந்த பாடலாகும். துறை மாறாயம் பெற்ற நெடுமொழி ஆகும். பாடலடிகள் வருமாறு,

                நாராய ணாய நமஎன்றே நாவீறன்
                ஓரா யிரம்என்று உரைத்தகவிப் பாவமுதம்
                ஆராய் பவர்க்கடிமை ஆகினேன். வாரான்இங்கு
                என்பால் ஒருநாள் யமன்.

இப்பாடல் இன்னிசை வெண்பாவுக்குச் சான்றிலக்கியமாகப் படைக்கப் பட்டுள்ளது. இன்னிசை வெண்பா நான்கடியில் அமைந்து மூன்றாம் அடியில் தனிச்சொல் பெற்று வரவேண்டும் என்பது இலக்கணம். இந்த இலக்கணம் பொருந்தி இப்பாடல் அமைந்துள்ளது. இப்பாடல் புறத்திணைக்குரிய வஞ்சித்திணைக்கும் உதாரணப்பாடலாக அமைந்துள்ளது. இதனை ‘மாறாயம் பெற்ற நெடுமொழி’ என்ற துறையின் மூலமாக தொல்காப்பியம் விளக்குகிறது. இதற்குத் தக்க எடுத்துக்காட்டாக இப்பாடல் அமைந்துள்ளது. இப்பாடல் முழுமையும் திருமாலின் புகழைப் பாடக்கூடிய நெடுமொழிப் பாடலாக அமைந்து தொல்காப்பியர் சுட்டிய புறத்துறையோடு பொருந்துமாறு அமைந்துள்ளது. நாரயணாய நம என்று ஓராயிரம் முறை மாறன் பாடிய சொற்களை ஆராய்பவர்க்கு அடிமையானேன் அதனால் உயிரைக் கொள்ளக்கூடிய யமன் என்னிடத்தில் ஒருநாளும் வரமாட்டான் என்பது பொருள். திருமாலைப் பாடிய நம்மாழ்வாரது பாடல்களுக்கே அவ்வளவு வலிமை என்றால் திருமாலது வலிமையை உய்த்துணர முடியாது என்பதை விளக்குமாறு இப்பாடல் அமைந்துள்ளது. இதே போன்று காஞ்சித்திணையில் அமைந்த மற்றொரு புறத்திணைப்பாடல் வருமாறு,

                   பெருநூல் பிறபல கற்பதின் மாறன்
ஒருநூல் கற்பது ஊதியம் உயிர்க்கே

இப்பாடல் குறள் வெண்பாவுக்கு இனமான குறள்வெண்செந்துறைக்குச் சான்றாகப் படைக்கப்பட்டுள்ளது. குறள் வெண்பாவுக்குரிய இலக்கணம் பொருந்தி இரண்டு அடியும் நான்கு சீர்களாக வரவேண்டும் என்பது குறள் வெண்செந்துறைக்குரிய இலக்கணமாகும். அவ்விலக்கணம் இப்பாடலில் நன்கு பொருந்தியுள்ளது. காஞ்சித்திணையில் அமைந்த இப்பாடல் முதுமொழிக்காஞ்சி என்னும் துறையில் பொருந்துமாறு பாடப்பட்டுள்ளது. பெரிய பெரிய நூல்கள் பலவற்றைக் கற்பதைக் காட்டிலும் நம்மாழ்வார் அருளிய ஒருநூலைக் கற்பதே உயிருக்கு மேன்மைதருவது என்ற பொருள்பட இப்பாடல் பாடப்பட்டுள்ளது.

அணி
          இந்நூலில் வரும் 25 ஆம் பாடல் அணியிலக்கணம் பொருந்திய பாடலாகும். சொல்பின்வரு நிலையணியில் அமைந்த அப்பாடல் வருமாறு,

           மாதங்கம் மூலமெனும் வண்குருடர் மால்வரைஓர்
                மாதங்கம் அஞ்ச வருபோழ்துஇம் – மாதுஅங்கம்
                மாதங்குஅவ் வாகுவல யத்தணைத்து வல்விரைந்துஅம்
                மாதங்கம் வெண்றான்ஓர் மன்.

இப்பாடல் இருகுறள் நேரிசைவெண்பாவுக்குச் சான்றாகப் படைக்கப்பட்டுள்ளது. இரண்டு குறள் வெண்பாக்கள் ஒன்றன் பின் ஒன்று வருவதைப்போல இந்த யாப்பு அமைந்திருக்கும்; இடையில் தனிச்சொல் பெற்றுவரும் என்பது யாப்பிலக்கணம் கூறும் விளக்கம். இந்த விளக்கத்துக்கேற்ப இப்பாடல் அமையப்பெற்றுள்ளது. இதுமட்டுமின்றி அணியிலக்கணத்துக்குரிய எடுத்துக்காட்டாகவும் இப்பாடல் அமைந்துள்ளது. இதில் ‘மாதங்கம்’ என்ற சொல் மீண்டும் மீண்டும்  வெவ்வேறு பொருளில் வந்தமையால் இது சொல்பின்வரு நிலையணியாகும். இப்பாடலின் முதல் அடியில் திருமால் புகழ் பேசப்படுகிறது. அதாவது ‘கஜேந்திரன் ஆதிமூலமே என அழைத்த குருகூரில் வாழும் திருமாலினது மலையிலே’ என்ற பொருள்பட பாடல் அமைந்துள்ளது. அதன்பின் வரக்கூடிய அடிகளில் அகத்துறையில் வரும் பொருள் பிரிவு எனும் பகுதிக்குள் அடங்கக்கூடிய தலைவன் தலைவியை மணக்க பொருள் ஈட்டச் செல்லும் செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது.

முடிவு
          அகப்பொருளுக்குத் தஞ்சைவாணன் கோவை போன்று யாப்பிலக்கணத்துக்கு மாறன் பாப்பவினம் என்ற இந்த நூல் யாப்பிலக்கணச் சான்றிலக்கியமாக அமைந்துள்ளது. இந்த நூலின் சிறப்பு இதில் இயற்றப்பட்ட பாடல்கள் ஒவ்வொன்றிலும் வைணவம் சார்ந்த கருத்துக்களும்; திருமால், நம்மாழ்வாரது புகழும் பாடப்பட்டுள்ளமையாகும். பின்வந்த யாப்பு சான்றிலக்கிய  நூல்களுக்கெல்லாம் முன்னோடியாக இந்த நூல் அமைந்துள்ளது. இந்த நூலில் யாப்புக்குச் சான்றுகள் அமைந்துள்ளது மட்டுமின்றி அகப்பொருள், புறப்பொருள், அணியிலக்கணம் போன்றவற்றுக்கும் சான்றுகள் அடங்கியுள்ளன என்பதை இக்கட்டுரைவழி அறிய முடிகிறது.


கருத்துகள் இல்லை: