வெள்ளி, 25 ஜனவரி, 2013

சிறார் பாடல்கள்


சிறார் பாடல்கள்:
தமிழ் யாப்பிலக்கணங்களை முன்வைத்து...
-----------------------------------------
-   ஜெ.இராதா கிருஷ்ணன்



அறிவியல் தொழில்நுட்பங்களின் வளர்ச்சிகள் எவ்வளவுக்கு எவ்வளவு வளர்ந்ததோ, அவ்வளவுக்கவ்வளவு உலகமும் சுருங்கிப் போய்விட்டது. தொடர்புகள், அறிவுப்பாய்ச்சல், மிகச் சுலபமாகிவிட்டது. ஆனால், அதற்கு எதிரடியாக மனிதன் அருகிலிருக்கும் சகமனிதனிடமிருந்து அன்னியமாகி, குடும்ப உறுப்பினர்களிடமிருந்து அன்னியமாகி, தனித்தனியே எந்திரங்களில் தன்னைத் தொலைத்து, தனக்குத்  தானே அன்னியமாகி வருகிறான்.
இத்தகு பெரும் கவலைக்கிடமான சூழலில்தான் கரிசனத்திற்குள்ளாகிறார்கள் சிறார்கள். வணிகமயமான உலகம் இவர்களைப் பயன்படுத்தி  முன்பைவிட மிகத்தீவிரமாக பெருமளவில் தம்கடையை விரிக்கும் இதே சூழலில்தான் அவர்களின் ஆன்மாவையும், அறிவையும் வளர்த்தெடுக்கும் வாசிப்புப்பழக்கம், படைப்பாக்கத்திறன், மொழி ஆளுமை என்னும் பலதளங்களில் செயல்படும் சிறார் இலக்கிய முயற்சிகள் பெரிதும் கவனப்படுத்தப்படாமலும், கையகப்படுத்தப்படாமலும் இருக்கிறது.
சிறார் இலக்கியம் பற்றி நாம் நிறைய யோசிக்க வேண்டும். செயல்பட வேண்டும் என்பதுடன், ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சிகளை அவற்றுக்குரிய வரலாற்றுப் பின்னணியில் வைத்து மதிப்பீடு செய்ய வேண்டும். அவற்றின் நுணுக்கங்களை மேலும் ஆராய வேண்டும்” என்கிறார் வ.கீதா ( தமிழ்ப் புத்தக உலகம் )
குழந்தைகளின் மொழி, கற்பனை வளர்ச்சி ஆகியவற்றில் குழந்தை இலக்கியத்தின் பங்கைத் தமிழர்கள் உணர்ந்திருந்தால் தமிழில் குழந்தை இலக்கியம் செழித்து வளர்ந்திருக்கும். அதன்வழி, நல்ல அறிவார்ந்த மொழிவளம் மிக்க தலைமுறைகள் உருவாகியிருக்கும். இந்த நிலைமை மலையாளம் போன்ற மொழிகளோடு ஒப்பிடும்போது அங்கு செழித்திருக்கும் குழந்தை இலக்கியம், இதழ்கள் போன்றவை தமிழில் இல்லாமல் இருப்பதின் அறிவு வறுமை வரலாற்று அவமானமாக இன்னும் நிலைபெற்று நிற்பது கண்டு நாம் வெட்கிதான் தலைகுனிய வேண்டும் என்கிறார் முனைவர் கி.நாச்சிமுத்து( புதிய புத்தகம் பேசுது )
தமிழில் சிறார் இலக்கியம்
மிக நீண்ட தமிழ் இலக்கிய பாரம்பரியத்தில் சிறார்கள் மிகவும் கொண்டாடப்பட்டிருக்கிறார்கள். தொடர்ந்து கவனப்படுத்தப்பட்டு வந்திருக்கிறார்கள். ஆனாலும், தமிழில் பிற்கால ஔவையாரின் ஆத்திச்சூடி முதலாகவே சிறார் இலக்கியம் முகிழ்க்கிறது. அதற்கு முன்பு - தமிழ் இலக்கியங்களில் சிறார்கள் இருக்கிறார்கள். ஆனால், சிறார்களுக்கான இலக்கியம் இல்லை. ஔவையாரின் சிறார் இலக்கியமாக கருதப்பெறும் ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன் முதலியனவும் வாய்ப்பாடுகள் போல ஓர் அறிவுரைத்தல், நேரடி கற்றல்-கற்பித்தல் செயல்பாடாகவே அமைந்திருக்கிறது. ஆட்டம், பாட்டம், கற்பனை என்னும் குழந்தை உள்ளத்தைத் தொடும் இலக்கியமாக இல்லை.
ஆனால், அதே சமயம் தமிழில் நாட்டார் வழக்காற்றில், வாய்மொழி மரபில் சிறார்களின் இடம் மிகப்பெரியதாக இருந்து வந்துள்ளது.
Ø  குழந்தையைப் பாடுவது
Ø  குழந்தைக்காகப் பாடுவது
Ø   குழந்தைகளே பாடுவது
என சிறார் பாடல்கள், கதைகள், விளையாட்டுக்கள் பலநிலைகளில் பதிவாகியுள்ளன.
மற்ற பாடல்கள், கதை மரபுகள் போல இவை ஏன் ஏட்டிலக்கியங்களில் பதிவாகவில்லை. எனில், அக்கால கற்கை மரபு, எழுதுபொருள், கருவிகளின் குறைபாடுகள் காரணமாக இருக்கலாம்.
எனவேதான், 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நடந்த அச்சுவூடக வரவு, புதிய கல்வி பரவல் முதலியவற்றால் உருவான புதிய வாசிப்பு மரபு என்பது  பல்வேறு நாட்டார் வழக்காறுகளில் இருந்து கதைகள், பழமொழிகள், விடுகதைகள், பாடல்கள் என்பவற்றின் தொகுப்புகளின் பதிவு மூலம் புதிய சிறார் இலக்கியத் தோற்றத்திற்கு ஏட்டிலக்கிய வடிவம் கிடைக்கிறது.
எனினும், 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் கவிமணி, பாரதி ஆகியோரின் மூலம் சிறார் பாடல்கள் என்ற ஏட்டிலக்கிய வகைமை தோற்றமுறுகிறது.
1915 - பாரதி - பாப்பா பாட்டு
1938 - கவிமணி - மலரும் மாலையும்
1939 - மு.வ - குழந்தைப் பாட்டுகள்
1943 - பாவேந்தர் - இசையமுது
1949 - தமிழண்ணல் -  குழந்தை இலக்கியம்
1950 - அழ. வள்ளியப்பா - மலரும் உள்ளம்
தொடர்ந்து இலக்கிய வகைமைகளில் மிக முக்கியமானதும், கவனத்துடன் எழுதப்படவேண்டியதுமான சிறார் இலக்கியத்தின் அவசியம் உணர்ந்து பேராசிரியர்களும், கி.வா.ஜ, அ.கி. பரந்தாமானார், கிருஷ்ணன் நம்பி, பெரியசாமித் தூரன் முதலான படைப்பாளிகளும் இத்துறையில் ஈடுபட்டுள்ளனர். அழ.வள்ளியப்பா, பூவண்ணன் முதலான சிலர் சிறார் இலக்கியத்திற்கெனவே தங்களை வடிவமைத்துக் கொண்டனர்.
சக்தி வை.கோவிந்தன், அழ.வள்ளியப்பா முதலானோர் 1950ல் குழந்தை எழுத்தாளர் சங்கம் தொடங்குகின்றனர். ’அணில்’, ’முயல்’, ’டமாரம்’ , ’பாலர் மலர்’, ’பூஞ்சோலை’ முதலான பல்வேறு சிறார் இதழ்கள் தோன்றியுள்ளன. பிறமொழி ஆக்கங்கள் மொழிபெயர்க்கப்படுகின்றன. 1957 முதல் இந்தியாவில் குழந்தைதினம் கொண்டாடப்பட தொடங்கியது. வானொலி முதலான ஊடகங்களில் சிறப்புப் பகுதிகள் ஒதுக்கப்பட்டன. அரசு சிறார் இலக்கியத்தை ஊக்குவிக்க தொடங்கியது; 1979 குழந்தைகள் ஆண்டாக கொண்டாடியது. இக்காரணிகளால் 1950 முதல் 1980 வரையிலான காலக்கட்டங்களில் தமிழில் சிறார் இலக்கியம் செழித்து வளர்ந்தது.
நமச்சிவாய முதலியார், மணிதிருநாவுக்கரசு, மயிலை சிவமுத்து, பெ.நா.அப்புசுவாமி முதலானோர் தமிழ் பாடநூல்களின் வழியாக சிறார் இலக்கியத்தை வளர்த்தனர். இவ்வாறாக, 80கள் வரை செழித்த மரபில் நூற்றுக்கும் குறையாத படைப்பாளிகள் பங்காற்றியுள்ளனர்.
எண்பதுகளுக்குப் பிறகு தொய்வடைந்த இம்மரபு 2000க்கு பிறகு புதிய திசையில் பயனிக்கத் தொடங்கியுள்ளது. உளவியல் மற்றும் அறிவியல் அடிப்படையிலான ஆக்கபூர்வமான தேவையுணர்ந்து மீண்டும் கையிலெடுக்கபட்டு வருகின்றன. அவ்வகையில் இரா.நடராஜன், யூமா.வாசுகி, கம்பீரன், எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன், கீரனூர் ஜாகிர் ராஜா, வேலு.சரவணன் முதலானோரின் ஆக்கங்கள் மொழிபெயர்ப்புகள் குறிப்பிடத்தக்கன. பாரதி புத்தகாலயம், தாரா, துலிக்கா முதலான பதிப்பகங்கள் சிறார் இலக்கியங்களை முன்னெடுத்து வருகின்றன.
இவ்வளவு வளர்ச்சிகள் இருந்த போதும் இவை தமிழ்ச் சமூகத்தில் முறையான சிறார் வாசிப்புப் பழக்கத்தை உருவாக்கியுள்ளனவா என்பது ஐயத்திற்குரியது. காரணம் இங்கு கவனப்படுத்துவதும், மரபின் நீட்சியாக நவீனத்தை உணர்ந்து இரு தரப்பின் கனத்தையும் உணர்ந்து மதிப்பிட்டு பொருட்படுத்தும் மரபு அருகியுள்ளது. மதிப்பீடும், மதிப்பீட்டின் வழி புதிய பாதைகளை அமைப்பதும் இல்லை. மேலும் தமிழகத்தின் இந்த நிலைக்கு வேறுசில அரசியல் காரணங்களும் உள்ளன.
ஒரு நூற்றாண்டு கால தமிழ்ச் சிறார்  இலக்கிய மரபு கல்விப் புலங்களில் எவ்வாறு சலனப்படுத்தப்படுகிறது என்பதற்கு தக்க உதாரணம் தமிழ் இலக்கிய வரலாற்று நூல்கள். தமிழில் மறுமலர்ச்சி கால இலக்கியங்களான உரைநடை, புதினம், சிறுகதை, புதுக்கவிதை என வகைபிரித்து வரலாறு பேசும் இலக்கிய வரலாற்று நூல்கள் சிறார் இலக்கியத்தை  ஒரு தனி வகையாக வகைப்படுத்தியதே மிக அரிது. மேலும், இத்துறையில் நிகழ்த்தப்பட்ட முனைவர் பட்ட ஆய்வுகளும் மிகக் குறைவு. செம்மொழி மத்திய நிறுவனம் வெளியிட்ட தமிழ் முனைவர்பட்ட ஆய்வேடுகளின் பட்டியலில் உள்ள ஆயிரம் தலைப்புகளில் இத்துறையில் நாட்டார் வழக்காற்றியலுடன் தொடர்புடைய ஆய்வுகளையும் சேர்த்து வெறும் 13 ஆய்வுகளே நிகழ்த்தப்பட்டுள்ளன.

மறுமலர்ச்சியில் யாப்பிலக்கண மரபு
அச்சுவூடக வரவும், புதிய கல்வி பரவலும் 19ஆம் நூற்றாண்டில் தமிழ்ச் சமூகத்தில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டுவந்து பழைய இலக்கண, இலக்கியங்கள் அச்சானது மட்டுமின்றி, அவற்றின் பரப்புகள் மீது புதிய வீச்சும், வாசிப்பும் நிகழ்த்தப்பட்டன. புதிய கல்வி திட்டங்களுக்கு தக பாடநூல்களுக்கு எளிய இலக்கண வினா - விடை, அறிமுக நூல்கள், உரைநடை நூல்கள் தோன்றின.
இவற்றின் தொடர்ச்சியாக, எளிமைப் படுத்தியும், புதிய மாற்றங்களைச் சேர்த்தும் தரும் புதிய யாப்பிலக்கண நூல்கள் தோன்றின. அவ்வகையில் 19ஆம் நூற்றாண்டில் சுவாமிநாதம்,முத்துவீரியம், அறுவகைஇலக்கணம் முதலான ஐந்திலக்கண நூல்களும், வண்ணத்தியல்பு, கட்டளைக் கலித்துறை, விருத்தப்பாவியல்,செய்யுளிலக்கணம் முதலான தனி யாப்பிலக்கண நூல்களும் குறிப்பிடத்தக்கன.
20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உரைநடை இலக்கிய வகைகளான புதினம், சிறுகதை, கடித இலக்கியம் முதலியனவும், இவற்றின் செல்வாக்கில் தோன்றிய புதுக்கவிதையும் கோலோச்சின. இதனை புதுக்கவிதைக்கு மாற்றாகவும், தமிழ் மரபுக்கவிதையைக் காக்கவும், எளிமைப்படுத்தி உரைக்கும் நோக்கமும் 1950 களுக்குப் பிறகு பல்வேறு யாப்பிலக்கண நூல்கள் தோன்றியுள்ளன.
அவற்றில் கீழ்க்காணும் பத்து நூல்கள் குறிப்பிடத்தக்கன.
1.   யாப்பொளி - ஆர்.சீனிவாச ராகவாச்சாரிய -1957
2.   யாப்பதிகாரம் - புலவர் குழந்தை -1959
3.   இலக்கண விளக்கம்: யாப்பியல் - கே.ராஜகோபாலாச்சாரியார் - 1963
4.   கவிஞராக - அ.கி. பரரந்தாமனார் - 1964
5.   கவிபாடலாம் - கி.வா.ஜகந்நாதன் -1966
6.   யாப்புநூல்  த.சரவணத்தமிழன் - 1981
7.   எளிதாகப்பாடலாம் - இராமு.இளங்குமரன் -1989
8.   தென்னூல்: இலக்கியப்படலம் - ச.பாலசுந்தரம் -1991
9.   பாவலர் பண்ணை - இரா.திருமுருகன் - 1997
10. யாப்பறிந்து பாபுனைய - மருதூர் அரங்கராசன் – 2005

இவற்றில் ’யாப்பொளி’ தவிர்த்த மற்ற நூல்கள் காரிகைக்குப் பிந்தைய பா வடிவங்களின் ஆட்சியைக் கண்டறிந்து கும்மி, கீர்த்தனை, கண்ணி, சிந்து, வண்ணம், சிந்துப்பா முதலியவற்றுக்கும் இலக்கணம் கூறுகின்றன.
80களுக்குப் பிறகு உருவான யாப்பிலக்கண நூல்களில் யாப்புநூல், தென்னூல், யாப்பறிந்து பாபுனைய ஆகிய நூல்கள் புதுக்கவிதைக்கும் , ஹைக்கூவுக்கும் கூட இலக்கணம் உரைக்கின்றன. இது, புதுக்கவிதைகளுக்கு எதிராக செயல்பட்ட மரபு இலக்கணிகளின் மனமாற்றத்தையும் அவர்களின் புதியன ஏற்கும் பண்பையும் உணர்த்துகின்றன. இன்னொரு வகையில் புதுக்கவிதையின் நிலைபேற்றை உணர்த்துகின்றது.
இப்படி, யாப்பு நிலையோடு முரண்பட்ட புதுக்கவிதையையும் கவனப்படுத்திய இலக்கணிகள் 1950களிலேயே தனித்த யாப்பியல் மரபுகளைப் பெற்றுவிட்ட சிறார்பாடல்களையும் ஒருவகையாக இலக்கணம் கூறவோ, அதன் யாப்பியல் மரபை ஆராயவோ முற்படவில்லை. மேற்படி, பத்து இலக்கணிகளில் அ.கி.பரந்தாமனார் ‘எங்கள் தோட்டம்’ என்ற சிறார் பாடல்கள் தொகுப்பு தந்தவர். கி.வா.ஜ சிறார் பாடல்களுடன் தொடர்புடைய நாட்டார் பாடல்கள் குறித்து பலப்பட ஆராய்ந்தவர்; தொகுத்தவர். எனினும், சிறார் பாடல்களின் தனித்த  யாப்பியல்புகளை உணர்ந்து சுட்டவில்லை. ஆனால், த.சரவணத்தமிழனார் முதன் முதலில் தமது ‘யாப்புநூலில்’ சிறார்பாடல்களுக்குச் ‘மகப்பா’ என தனி இலக்கணம் படைக்கிறார். இவரைப் பின்பற்றி மருதூர் அரங்கராசனும் தமது நூலில் ‘குழந்தைப்பா’விற்கு இலக்கணம் உரைக்கிறார்.
இதன்மூலம் நவீனத்தின் நீட்சியாக மரபையும், மரபின் நீட்சியாக நவீனத்தையும் ஆக்கத்துடித்த த.சரவணத்தமிழனாரின் ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும், சிறார்பாடல்களின் அவசியம் உணர்ந்து வெளிப்படுத்தியமையையும் உணரத் தக்கது.

சிறார் பாடல்களில் யாப்பு
வாய்மொழி இசை மரபுகளிலிருந்து செம்மைப்பட்ட ஏட்டுமரபாகும் பாடல்களுக்கு இலக்கணிகள் உரிய வடிவ இலக்கணம் தந்துள்ளனர். அந்தவகையில் பா, பாவினங்களுக்கு பிறகான பல்வேறு புதிய பாவடிவங்களுக்கும் தமிழ் யாப்பிலக்கணிகள் இலக்கணம் படைத்துள்ளனர். அந்தவகையில்தான், நாட்டார் பாடல்மரபை தழுவி சிறார்களுக்குப் படைக்கப்பட்ட பாடல்களின் இயல்புகளை, யாப்பமைதிகளை ஆராய்ந்து அதன் தனித்தன்மையை உணர்த்துவதின் மூலம் நல்ல சிறார் பாடல்களுக்கான கட்டமைப்பை உணர்ந்து கொள்ள முடியும்.
அந்த வகையில், ‘குழந்தைப் பாடல்களின் பாடுபொருளும் பாடுநெறியும்’ குறித்து முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்ட முனைவர் வெ.தனலெக்குமி சிறார் பாடல்களில் வெளிப்படும் வடிவங்களாகக் கீழ்க்கண்டவற்றைக் குறிப்பிடுகிறார் (1980; பக்.294)
1.   மரபு வழிப்பட்டன
(அ) வெண்பா
(ஆ) குறட்டாழிசை
(இ)கலித்தாழிசை
(ஈ)வஞ்சித் தரவு
(இருசீர் அடி, முச்சீரடி மட்டும் அடிவரையறை இன்றி வருவது)

2.   புதியன
(அ) வஞ்சிக்கண்ணி
(ஆ) தாளநயப் பாடல்கள்

இவையன்றியும் வெளிப்பாட்டு முறையால்,
1.வருணனைப் போக்கு
2.விளித்தல் முறை
3.உரையாடல்
4.வினா விடை என(பக்.305) பலவகைப்படுதலை ஆராய்ந்துள்ளார்.

இவற்றின் தொகுப்பாக,
-     இருசீர்,முச்சீரடிகள் பயில்வும்
-     தொடை நயமும், குறிப்பாக இயைபுத் தொடையின் மிகுதி
-     எளிய சந்த மெட்டுகளில் பாடல் அமைத்தலும் வெளிப்படுத்தப்படுகின்றன.

யாப்புநூல்
      “பருப்பொருள் கூறும் கருத்துடைத் தாக
வழக்கிடைப் பயிலும்சொற்கள் கொண்டே
எளிய சந்தம் ஏற்றிடல் மருப்பா”  (யாப் .148)
      “பருப்பொருள்களை எடுத்துக் கூறும் கருத்துக்கள் கொண்டதாக, வழக்கத்தில் பயிலும் சொற்களை உடைத்தாக எளிய சந்தம் ஏற்றி உரைத்தல் குழந்தைப் பாக்களாகும்” என உரை செய்கிறார் த.சரவணத்தமிழன்.
வாய்மொழி சிறார் பாடல்களையும் உதாரணமாககாட்டி, இதன் வடிவம் பலவிதமாக அமையலாம். ஆனால், இருசீரடி, முச்சீரடிகளில் பாடல் அமைவது நல்லது எனக் குறிப்பிடுகிறார். இதுவே, குழந்தைகள் எளிமையாக புரிந்துகொள்ளவும், இளிமையாக பாடவும் உதவும்.
”வடிவம் பலவும் வளிரினும் ஈரசை
முச்சீர் அடிகள் மிக்கு வரலே” (யாப்.149)
சிறார் பாடல்களுக்கு சிறந்த உதாரணங்களையும் அவரே நூற்பா வடிவில் தருகிறார்.
     “வள்ளி யப்பா வளஞ்செய் தாலும்
இலெமென் பாக்களே இயற்கை யாகும்”  (யாப். 150)
சிறார் பாடல்கள் இயற்றுவதில் அழ.வள்ளியப்பா பெரிதும் அறியப்பட்டாலும், ’கொக்கரக்கோ’, ‘சிப்பாய் வரார்’ போன்ற தொகுப்புகளை வெளியிட்ட ‘இலக்குமணனே’ இயற்கையான ஓசையோடு சிறார் பாடல்கள் படைத்துள்ளதாக விமர்சனம் செய்துள்ளார். மேலும், தமது தமிழியக்க உணர்வோடு பாவேந்தரின் ‘இளைஞர் இலக்கியத்தை’யும், பெருஞ்சித்தரனாரின் ‘பள்ளிப் பறவைகளை’யும்  பரிந்துரைக்கிறார்.
     “இளைஞர் இலக்கியம் பள்ளிப் பறவைகள்
இரண்டு தொகுப்பும் தமிழறி வூட்டும்”  (யாப்.151)
இவையாவும், த. சரவணத் தமிழனாரின் புலமையையும், தக்கதுணர்ந்துரைக்கும் திறத்தையும்வெளிப்படுத்துகின்றன.

யாப்பறிந்து பா புனைய
மருதூர் அரங்கராசன் எளிமையாக பல்வேறு தமிழ் பா வடிவங்களை உணர்த்துவதாக உரைநடையில் ஆய்வு முறைமையில் உருவாக்கிய நூலே ‘யாப்பறிந்து பா புனைய’. இந்நூலில் தமிழ் இலக்கியங்களில் பயின்றுவந்துள்ள பல்வேறு பாவடிவங்களையும் தொகுத்து வழங்க முயன்றுள்ளார்.
அவ்வகையில் சிறார் பாடல்களையும் கண்டுணர்ந்து ‘குழந்தைப்பா’ என்ற தலைப்பில் (பக். 258 - 270)விரிவாக ஆராய்ந்துள்ளார்.
குழந்தைப்பாவின் பாடுபொருள், இலக்கணம், வளம்சேர்த்தவர்கள், முன்னோடிகள், இலக்கணம் கூறும் யாப்புநூல், வேண்டுகோள் என்னும் தலைப்புகளில் பேசுகிறார்.
இவர் சிறார் பாடல்களின் யாப்பிலக்கணமாக கீழ்கண்டவற்றைச் சுட்டுகிறார்.
1.   எளிமை, இனிமை, சந்தம், ஒலிநயம்
2.   பழகு தமிழ்ச் சொற்கள்,சிறுசிறுசொற்கள்
3.   நினைவில் வைத்துக்கொள்ள எதுகை, மோனை, இயைபு
4.   தொடர், சொற்கள் மீண்டும் மீண்டும் இடம் பெறுதல்
5.   குறளடி, சிந்தடி, அளவடிகளில் மட்டும் அமைதல்
6.   விடுகதை, புதிர்தன்மை
7.   கருத்து அமைத்தல்
       “1972இல் குழந்தை எழுத்தாளர் சங்கம் வெளியிட்ட ‘குழந்தை எழுத்தாளர் யார்? எவர்?’ என்ற நூலில் 370 குழந்தை எழுத்தாளர்கள் பற்றிய விவரங்கள் அடங்கியுள்ளன” என்கிறார்.(பக்.264)
Ø   3 - 6 வயது வரை - மழலைப் பாடல்கள்
Ø  6 - 9 வயது வரை - குழந்தைப் பாடல்கள்
Ø  9 - 12 வயது வரை - சிறுவர் பாடல்கள்
என பகுக்கும்  குழ.கதிரேசனின் (பக்.270) கருத்தை வெளிப்படுத்துகிறார். இறுதியாக, இவ்வகை இலக்கியம் படைக்க படைப்பாளர்களை அழைக்கிறார்; வேண்டுகிறார்.
இவை - தமிழ் மரபிலக்கணிகள் சம கால இலக்கிய தேவையை உணர்ந்து செயல்பட்டமையை உணர்த்துகின்றன. இதிலிருந்து சிறார் பாடல்களின் வளர்த்தெடுப்பும், சிறார்கள் வாசிப்பு வழக்கத்திற்கு கொண்டுவரப்படுதலும், அவர்களே படைத்தலும் ஆகிய அடுத்த நிலை நகர்வையும் கோரி நிற்கின்றன.
···
படையல்!
தனித்தமிழறிஞர் த.சரவணத்தமிழனாருக்கு...

ஆய்வுக்கு உதவிய ஆக்கங்கள்:
1. வெ.தனலக்குமி, குழந்தைப் பாடல்களில் பாடுபொருளும் பாடுநெறியும், மங்கை வெளியீடு, சென்னை, முதற்பதிப்பு, 1990.
2. ச.சரவணத்தமிழன், யாப்பு நூல், இயற்றமிழ்ப் பயிற்றகம், திருவாரூர், முதற்பதிப்பு, 1981.
3. ய.மணிகண்டன், தமிழில் யாப்பிலக்கண வளர்ச்சி, விழிகள் பதிப்பகம், சென்னை, முதற்பதிப்பு, 2001.
4.மருதூர் அரங்கராசன், யாப்பறிந்து பாபுனைய... , ஐந்திணைப் பதிப்பகம், சென்னை, முதற்பதிப்பு, 2005.
5. தமிழ்ப் புத்தக உலகம், புதிய புத்தகம் பேசுது, சென்னை, முதற்பதிப்பு, 2009
6. அம்புயம் யுவச்சந்திரா, குழந்தை இலக்கியத்திற்கு குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பாவின் பங்களிப்புகள், சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வேடு, 1982.
7. அ.அமல அருள் அரசி,  சிறுவர் புதினம்: ஆய்வியல் நோக்கு , சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வேடு, 1998.

  
பின்னிணைப்பு
சிறார் வழக்காறுகள் / சிறார் இலக்கியம் குறித்த முனைவர் பட்ட ஆய்வேடுகள் பட்டியல்
வ.எ
ஆய்வாளர் பெயர்
ஆய்வுத்தலைப்பு
ஆண்டு
நெறியாளர்
பல்கலைக் கழகம்
1
அம்புஜம் யுவன்சந்திர இரம்யா 
குழந்தை இலக்கியத்திற்கு அழ. வள்ளியப்பாவின் கொடை 
1982
சுந்தரம். எம் முனைவர் 
சென்னை 
2
அமலா அருள் அரசி 
சிறுவர் புதினம்,ஆய்வியல் நோக்கு 
2001
ஞானபுஷ்பம். ஆர் முனைவர் 
சென்னை 
3
எத்தில்மேரி பாய். ஜெ 
சிறுவர் உளவியல் நோக்கில் கிருத்துவச் சிறுகதைகள் 
2003
குருநாதன். ஆர் முனைவர் 
சென்னை 
4
கருணாநிதி. எம் 
தமிழக நாட்டார் வழக்காற்றிய சிறார் வழக்காறுகள் (நடுநாடு
2002
அரசு. வீ முனைவர் 
சென்னை 
5
சுந்தர்ராஜன். எஸ் 
பள்ளி சிறுவர்களுக்கான அறநெறிக் கல்வி 
2006
முத்துராமலிங்க ஆண்டவர். வி.எம் முனைவர் 
சென்னை 
6
ஞானசிங்காரம். ஞா 
பூவண்ணனின் சிறுவர் நாவல்கள் ஓர் ஆய்வு 
1995
சுப்பிரமணியன். கி முனைவர் 
பாரதியார் 
7
தனலெட்சுமி. வி 
குழந்தைப் பாடல்களில் பாடுபொருளும் பாடு நெறியும் 
1987
லீலாவதி. தி முனைவர் 
சென்னை 
8
புனிதாசலம் ஜீவி. ஆர் 
குழந்தை மருத்துவம்-குமரி மாவட்டம் 
2004
ரோஸ்லட் டானி பாய் முனைவர் 
மனோன்மணீயம் சுந்தரனார் 
9
மரியசூசை.  
தமிழக நாட்டார் வழக்காற்றியல் சிறார் வழக்காறுகள் கதைகள் வேலூர் மாவட்டம் 
2002
அரசு. வீ முனைவர் 
சென்னை 
10
மீனாட்சிசுந்தரம். யூ 
கன்னியாகுமரி மாவட்ட நாட்டுப்புறப்பாடல்களில் குழந்தைகள் 
1987
நடராஜன். டி முனைவர் 
மதுரை காமராசர் 
11
மேரி கிளோரி செலின். எஸ் 
விவிலியத்தில் குழந்தைகள் 
2006
ஸ்ரீகுமார். எஸ் முனைவர் 
மனோன்மணீயம் சுந்தரனார் 
12
வேலு. கே 
சிறுவர் மொழிகளில் காட்டும் சமுதாயச் சிந்தனைகள் 
2004
தங்கதுரை. எஸ் முனைவர் 
சென்னை 
13
ஜெகதீஸ்வரி.  
சிறுவர்களின் நீதிநூல்கள் 
1980
நவனீதகிருஷ்ணன். எம் முனைவர் 
மதுரை காமராசர் 

# இப்பட்டியல் செம்மொழி தமிழ் மத்திய நிறுவனம் வெளியிட்ட தமிழ் முனைவர்பட்ட ஆய்வேடுகள் பட்டியலை அடிப்படையாக்கொண்டு உருவாக்கப்பட்டது. 

கருத்துகள் இல்லை: