செவ்வாய், 27 செப்டம்பர், 2011

கவனகம் என்னும் நினைவாற்றல் கலை


அண்ணமங்கலம் சங்கமம் கல்லூரியில் இரா.எல்லப்பன் ( நடுவில்...)
Posted by Picasaகவனகம் , அவதானம் எனப்படும் நினைவாற்றல் கலை தமிழர்தம் பாரம்பரிய சொத்து. தமிழ் இலக்கிய, இலக்கணங்களும் வரலாறும் இவ்வரிய கலையினாலேயே பன்னெடுங்காலம் காப்பாற்றப்பட்டு வந்துள்ளன.

இவ்வரிய கலையும் தமிழர்தம் அலட்சியத்தால் அழிவின் விளிம்பில் உள்ளது. இச்சூழலில் இக்கலையில் கற்றுத்தேர்ந்து நிகழ்ச்சிகள் நிகழ்த்திக்காட்டுவோர் விரல்விட்டு எண்ணத்தகும் மிகச்சிலரே. அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் செங்கல்பட்டு திருக்குறள் கவனகர் இரா.எல்லப்பன்.

கவனகக்கலை

எட்டுவகையான நினைவாற்றல் வழிமுறைகள் செய்பவர்களை அஸ்டாவதானி (எண்கவனகர்) என்பர். பத்து வகை செய்வோர் தசாவதானி (பதின்கவனகர்). தமிழ்கத்தில் நூறு வகையான நினைவாற்றல் வித்தைகள் செய்யும் சதாவதானிகளும் இருந்துள்ளனர். அதையும் தாண்டி ஆயிரம் கவனகம் செய்யும் சகசரவதானிகளும் இருந்ததாக சொல்லப்படுகிறது.

ஒரே நேரத்தில் தன்னைச்சுற்றி நடக்கக் கூடிய பல்வேறு நிகழ்வுகளை நினைவில் நிறுத்தி முடிவில் தொகுத்துக் கூறுவதாகிய இக்கவனக்கலை நினைவாற்றலின் ஓர் உயர்ந்த வடிவம் ஆகும். அரசர்களை மகிழ்விக்கும் நிகழ்த்துகலையாக உருவெடுத்து பிற்காலத்தில் மக்கள் கலையான இக்கலையில் குறிப்பிட தக்கவர்களாக கீழ்க்காணுபவகளைக் குறிப்பிடலாம்.
1.    செய்கு அரங்கநாதக்கவிராயர்
2.    அப்துல்காதர்
3.    அரங்கசாமி அய்யங்கார்
4.    சரவணக் கவிராயர்.
5.    தம்பிப் பாவலர்
6.    சிறிய சரவணக்கவிராயர்
7.    தே.போ. கிருட்டிணசாமி பாவலர்
8.    நா.கதிர்வேல் பிள்ளை
9.    அஷ்டாவதானியார்
10. அச்சுத உபாத்தியாயர்
11. பதின்கவனகர் கோவில்பட்டி இராமையா
12.   பூவை கல்யாணசுந்தர முதலியார்

கவனகக்கலையைத் தமிழகம் மட்டுமல்லாது கடல் கடந்து உலகம் முழுவதும் கொண்டு சென்ற பெருமை பதின்கவனகர் (தசாவதானி) இராமையா அவர்களுடைய புதல்வர் பதினாறுகவனகர் திருக்குறள் கனகசுப்புரெத்தினம் அவர்களையே சாரும்.

இன்றைக்கும் இக்கலை வல்லார்கள் சிலர் நிகழ்ச்சிகள் செய்துவருகின்றனர். அவர்களுள்
       1. செங்கல்பட்டு திருக்குறள் இரா.எல்லப்பன்
       2. கலைச்செழியன்
       3. கோ.சி.பிரதீபா
       4. திருமூலநாதன்
       5. க.பிரதிபா
ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

( தடாகம் அரசு பள்ளியில் இரா.எல்லப்பன் )


திருக்குறள் இரா.எல்லப்பன்

சென்னை, சிந்தாதிரிபேட்டையில்  12.06.1964இல் பிறந்த இவர் தற்போது செங்கல்பட்டில் வசித்துவருகிறார். இவர் பத்தாண்டுகளுக்கும் மேலாக கவனக கலை நிகழ்ச்சிகள் செய்துகாட்டுவதையே தமது முழுநேர பணியாக செய்துவருகிறார்.

ஆனந்தவிகடன், குங்குமம், கலைமகள், அமுதசுரபி, அமெரிக்கவாழ் தமிழர்களின் தி தமிழ் டைம்ஸ் போன்ற இதழ்களால் பாராட்டப்பெற்ற இவரது நிகழ்ச்சியும், நேர்காணல்களும் சன் டி.வி, ஜெயா டி.வி, பொதிகை, மக்கள் தொலைக்காட்சி, இணையவழி தொலைக்காட்சியான  தாய் தொலைக்காட்சி ஆகியவற்றிலும் ஒலிபரப்பப்பாகியுள்ளன.

திருக்குறளிலேயே முப்பது வழிமுறைகளில் கவனக நிகழ்ச்சி செய்யக்கூடிய இவர், தமிழகம் எங்கிலும் சென்று 800 க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள்  நிகழ்த்திக்காட்டியுள்ளார். திருக்குறள் முழுமைக்கும் உரைவரைந்து திருக்குறள் விளக்கம் என்ற பெயரில் ஒலிப்பேழை வெளியிட்டுள்ளார்.

எட்டாவது வரையே படித்துள்ள இவர் பள்ளி, கல்லூரி என சென்று நிகழ்வுகள் செய்துக்காட்டி  தமது நினைவாற்றலின் அதிசயத்தை காட்சிபொருளாக்கிவருகிறார். நகைச்சுவை உணர்வோடும், எதிரில் இருப்பவர்களுக்கு தக்கவாறும், சிந்தனையை தூண்டும் வகையிலூம் மணிக்கணக்கில் நிகழ்வை செய்துகாட்டும் தனது ஆற்றலால் மனிதகணினியோ என அதிசயிக்கவைக்கிறார்.

இவரது 743வது நிகழ்வு எங்கள் கல்லூரியில் முத்தமிழ் விழாவாக 02.02.2010 அன்று நடைபெற்றது. நீண்ட இடைவெளிக்கு பிறகு 14.09.2011 அன்று தடாகம் அரசு பள்ளிக்கு தோழர் ஏ.பொன்னுசாமி அழைத்திருப்பது அறிந்தேன். அங்கு நிகழ்வு மாலைதான் என்பதால் மீண்டும் எங்கள் கல்லூரிக்கு அழைத்துசென்றேன். செந்திபாலா எங்கள் பள்ளிக்கும் வரவேண்டும் என்று அழைத்துசென்றார். ஆக அன்று கலை 8.00 மணிக்கு வந்த அவர் அண்ணமங்கலம் அரசு பள்ளிக்கு சென்று நிகழ்ச்சி செய்துகாட்டிவிட்டு எங்கள் கல்லூரிக்கு 11.00 மணிக்கு வந்தார். பிற்பகல் 1.00 மணிக்கு பிறகு செஞ்சியிலிருந்து 25 கி.மீ தொலைவில் உள்ள தடாகம் பள்ளிக்கு போய் நிகழ்ச்சி முடித்து மாலை 6.00 மணிக்கு செஞ்சி திரும்பினார். 100, 200 கி.மீ தொலைவு 7,8 மணி நேர தொடர்நிகழ்சிகள் எல்லாம் கடந்து அப்போதும் புத்துணர்வோடு இருந்த அவரை பார்த்தபோது எனக்கு பாவேந்தரின் இந்த வரிகள்தான் நினைவுக்கு வந்தன...
          
           மூடிய வாய்தி றந்து
                   உளமார முன்னா ளெல்லாம்
           தேடிய தமிழு ணர்வைத்
                   தின்னவே பலர்க்கும் தந்தும்
           வாடாத புலவர் போலே
                   அரும்பிப்பின் மலர்ந்த பூக்கள்
           வாடாது தேன்கொ டுக்கும்
                   வண்டுகள் அதைக் குடிக்கும்!  
                                          ( பாவேந்தர்: அழகின் சிரிப்பு)

880க்கும் மேற்பட்ட நிகழ்வுகள் நடத்தியுள்ள திருக்குறள் எல்லப்பனார் ஒவ்வொரு நிகவுக்கும் ஒவ்வொரு நினைவற்றலின் உச்சத்தை எட்டிவருவதை இந்த நிகழ்வின் போது அறிந்துகொண்டேன். விரைவில் அவருக்கு வாய்ப்பும் சூழலும் அமைந்தால் நினைவாற்றலின் உச்சமான 100 நிகழ்வுகளை நினைவில் வைத்துக்கொள்ளும் சதாவதானத்தையும் செய்துகாட்டுவார் என நம்பலாம்.

அவரது முகவரி...
திருக்குறள் இரா.எல்லப்பன்,
14, சுந்தர விநாயகர் கோயில் தெரு,
சின்னநத்தம், செங்கல்பட்டு  -       603 002.
செல் பேசி: 98426 52545.

( அவசியம் உங்கள் பள்ளிக்கோ, கல்லூரிக்கோ, உங்கள் பகுதி இலக்கிய நிகழ்வுகளுக்கோ இவரை அழைத்து பயன்பெறவேண்டும். அதுதான் இதுபோன்ற அழிந்துவரும் தொல்கலைகளுக்கு நம்மாலான பங்களிப்பாக இருக்கமுடியும்.)

கருத்துகள் இல்லை: