திங்கள், 12 செப்டம்பர், 2011

பனமலை
பல்லவர்களின் கட்டடக்கலைக்கு பல உதாரணங்கள் இருந்தபோதும் செஞ்சியை அடுத்த பனமலையில் அமைந்துள்ள பனமலைநாதர் (தாளகிரீசுவரர்) திருக்கோயில் தனி சிறப்புகள் பெற்றது. குடைவரைக்கோயில்களையே கட்டிவந்த பல்லவ்ர்கள் மலைமீது கட்டிய முதல் கற்றளி (கற்களைக்கொண்டு எழுப்பிய கோயில்) இது.

செஞ்சியிலிருந்து சுமார் 22 கி.மீ தூரத்தில் உள்ள இக்கோயில் இராசசிம்மனால் இயற்கை எழில்கொஞ்சும் மலைமீது கட்டப்பட்டுள்ளது. இவனே காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயிலையும் கட்டியவன் ஆவான். அக்கோயில் கட்டுவதற்கு முன்னோட்டம் போல அமைந்த இக்கோயிலில் இம்மன்னன் காலத்து சிறப்பு வாய்ந்த ஓவியம் ஆயிரம் ஆண்டுகளுக்குப்பின் இன்றும் காணக்கிடைக்கிறது.

சிவனது தாண்டவத்தைக் கண்டு தன்னை மறந்து ஆட்டத்தில் ஆழ்ந்து நிற்கும் பார்வதியின் உருவம் மட்டும் ஓவியமாக இன்று இக்கோயிலில் எஞ்சி நிற்கிறது. தொங்கல்கள் நிறைந்த விளிம்புகளைக் கொண்ட அழகான வண்ணக் குடையின் கீழே ஒரு காலை மடித்துச் சுவரில் வைத்து மற்றொரு காலைத் தரையில் ஊன்றிப் பார்வதி நிற்கிறாள். வேலைப்பாடு மிக்க மகுடம் அணிந்த தலை வலப்புறம் சாய்ந்துள்ளது. ஆட்டத்தில் ஆழ்ந்து போன நீண்ட கண்கள், வில்போன்ற புருவங்கள், கழுத்திலணிந்த ஆபரணங்கள், பூவேலை மிக்க இடையாடை ஆகியவை பார்வதியின் எழிற் கோலத்தை எடுப்பாகக் காட்டுகின்றன. பல்லவர் காலத்து அரச மகளிரின் எழிற்கோலத்தை இவ்வோவியம் காட்டுகிறது. எதிர் சுவரில் சிவன் பரிவாரங்களுடன் பார்வையிடுவது போல உள்ள ஓவியம் இன்று அழிந்த நிலையில் உள்ளது.

இந்த ஒவியதை தாண்டி பச்சைக்கல்லில் அமைந்த அம்மன் உருவம், மலைமீது அமைந்த அழகிய குளங்கள், எல்லாவற்றையும் தாண்டிய மனதிற்கினிய இயற்கை சூழல் என பேச நிறைய உள்ளன. இன்றும் இக்கோயில் ஆரியர் வசப்படாது மரபுவழி தமிழ் பூசாரிகளால் வழிபாடு நடத்தப்பெறுகின்றது என்பது கூடுதல் தகவல்.

இக்கோயிலுக்கு புதிய நண்பர்களுக்கு சுற்றிக்காட்டச் சில ஆண்டுகளுக்கு முன் சென்றபோது அந்த நண்பர் எடுத்த படம் அண்மையில் எனக்கு கிடைத்தது. அதை காணொளியாக இங்கே தருகிறேன்....
கருத்துகள் இல்லை: