சனி, 7 ஜூலை, 2012

சொற்களால் நெய்யப்பட்ட சவுக்கு


அப்பனின் கைகளால் அடிப்பவன் :
சொற்களால் நெய்யப்பட்ட சவுக்கு
·###    
யாழன்  ஆதி

அதியனும் யாழன்ஆதியும்
               அதியனின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு இது. முதல் தொகுப்பில் காதல் கவிதைகளைத் தந்தவர் இந்தத் தொகுப்பில் எதார்த்த வாழ்வின் இருட்பிரதேசங்களில் தான் கண்ட உண்மைகளைக் கவிதைகளாக்கி உள்ளார்.

              இந்தகையக் கவிதைகள் சமூகத்தால் எப்படி எதிர்கொள்ளப்படுகின்றன என்பது  ஒரு கேள்வி. இந்தக் கேள்விக்கு இரண்டு தரப்பார் பதிலாற்ற வேண்டியுள்ளது. ஒன்று பொதுச் சமூகம் இந்தக் கேள்வியை எப்படி எதிர்கொள்கிறது என்பது. அதாவது பொதுப் புத்தி சமூகம் அல்லது சாதிய மேலாண்மைச் சமூகம் இந்தக் கவிதைகளை எப்படிப் பார்க்கிறது? சாதிய இந்து மனோநிலை உள்ள பிற எழுத்தாளர்கள் இத்தகைய கவிதைகளைக் குறித்து பேசுவதில்லை. அதன் காரணமும் மிக எளிது.  அவர்கள் இந்தக் கவிதைகளை வாசிப்பதில்லை. கணையாழியின் கடைசிபக்கங்களில் பேசப்படுவதற்கோ வெங்கட்சாமிநாதன் போன்றோரின் பார்வை இவற்றின் மேல் படுவதற்கோ  எந்த வாய்ப்பும் இல்லை. ஆனால் நவீனக் கவிதைகளின் தோற்றம் நிகழ்ந்த காலங்களில்  இவர்களின் இலக்கிய செயல்பாடு எப்படி இருந்தது. இப்போது ஏன் அவர்கள் அப்படி செயல்படவில்லை. ஒருவேளை வயது காரணமாக இருக்குமோ என்றால் அதுவும் இல்லைதான். இந்தக் கவிதைகள் ஒதுக்கப்படுவதற்கு சாதிய மனநிலைதான் காரணம். அத்தகு சாதிய மனநிலை அறிவுலகத்திலும் இருப்பதால் இந்த அறிவு ஒதுக்கல் நடைபெறுகிறது.

              இது அதியனுக்கு மட்டும் நிகழ்கிற ஒன்றுஅல்ல. அம்பேத்கருக்கே இதுதான் நிலை. மிகப்பெரிய சமூகவிடுதலைக் காரராக அவர் இருந்தாலும் அவரின் எழுத்துகள் எல்லாம் சமூகத்தின் எல்லா நிலைகளிலும் வைத்து ஆராயப்படவேண்டிய ஒன்று. பொருளாதாரத் துறையாகிலும் இலக்கிய துறையானாலும், அரசியல் துறையானாலும், சட்டமானாலும், சமூகவியலானாலும், மானுடவியலானாலும், சமயமானாலும் எந்தத் துறையெனினும் அம்பேத்கரின் பணிகளைக் குறித்த கொண்டாட்டம் யாரிடம் இருக்கிறது? எந்த உயர் சமூகத்தினராயினும் அவர்கள் அம்பேத்கரின் அறிவை ஏற்பதில்லை.  தன் வாழ்நாளில் ஒரு லட்சம் பக்கங்களை எழுதியவர் அம்பேத்கர். அறுபதாயிரம் பக்கங்களை எழுதியவர் காரல் மார்க்ஸ். இருவரும் மானுடவிடுதலைக்காகவே வாழ்ந்தனர். அவர் பொருளாதார அடிப்படையில் சமூகத்தைக் கண்ணோக்கினார். இவர் சமூக  அமைப்பின் அடிப்படையில் விடுதலையைக் குறித்துப் பேசினார். அவரவர் வாழ்வுச்சூழல் அப்படி. ஆனால் இருவருக்கும் ஒன்றுதான் குறிக்கோள், மக்கள் விடுதலை. ஆனால் ஒருவர் உலகத்தலைவர். இன்னொருவர் சேரித்தலைவர். ஊர் என்னும் அமைப்பில் இருக்கும் படித்தவர்கள் கூட  அம்பேத்கர் அவர்களின் பணிகளைக் குறித்த அங்கீகாரத்தை வழங்க தற்போதும் அவர்கள் தயாரில்லை.

            பொதுச் சமூகத்தின் மனசாட்சியை நோக்கி ஆதவன் தீட்சண்யாவின் குரலில் இப்படிக் கேட்க வேண்டியிருக்கிறது. சுவரின் இந்தப்பக்கம்நின்று கைகளை நீட்டி  கைகளைக் கொடுங்கள் என்று கேட்கிறேன். அந்தப் பக்கம் மனிதர்கள் யாரும் இல்லையா? மனிதர்கள் அற்ற ஒரு சமூக அமைப்பில்தான் விளிம்புநிலை மக்கள்  தங்கள் துயர்களை சொல்லி சொல்லி மாய்கிறார்களா? அதியனின் கவிதைகளும் அப்படித்தான் தன் குரலை உயர்த்துகிறதா?.

             அதியனின் தாத்தாவும் அவருடைய வாழ்வும் இந்தத் தொகுப்பில் தலித் வாழ்வின் பிரதிநிதிகளாகின்றனர். தலித்துகளின் எத்தகைய வாழ்வும் போராட்டத்திற்குரியதாகவும்  விடுதலைக்கானதாகவும் அல்லது எப்போதும் எதிர்ப்பதற்கானதாகவும்  மட்டுமே இருக்கிறது. வாழ்க்கை  வாழ்வதற்கே என்னும் கோட்பாட்டின்மீது இருக்கும் நம்பிக்கைகளைத் தகர்த்து விளிம்புநிலை மக்களுக்கு வாழ்க்கை போராடுவதற்கே என்று பதிகிறது இத்தொகுப்பு.

             இந்துத்துவ பெருந்தெய்வ வழிபாடு என்பது இன்னும் சாதிய அமைப்பைக் காக்கக் கூடியதாக இருக்கிறது. ஆனால் சாதி அமைப்பின் ஆணிவேராக இந்து மதம் கட்டமைக்கிற சடங்குகளைத் தாண்டியது சிறு தெய்வ வழிபாடு. திருப்பதியில் மாடு வெட்டி கூழ் ஊற்ற முடியுமா? சிவன் கோயிலில் கண்ணப்பன் கதையைத் தவிர வேறெதுவும் நடக்கமுடியுமா? எனவே பெரும்பான்மை இந்து ஆதிக்க மனநிலைக்கெதிராக தங்கள் வாழ்வைக் கட்டமைக்கிறார்கள் தலித்துகள். மாடு, பன்றி வெட்டி கூழுற்றி மாரியாத்தாவிற்கு படைத்து சாப்பிட்டு தன் கொண்டாட்டங்களை நாட்டார் வாழ்வியலாக மாற்றுகின்றனர். ஆனால் மாறாக இந்துத்துவம் மதுரைவீரனை, நந்தனை தன் சாதிய சடங்கிற்குள் அடக்கிக் கொள்ள கட்டுக்கதைகளை ஏவுகிறது. அதியன் தன் கதையை இங்கே பேசுகிறார்

சாராயம்/கருவாடு/சுருட்டு/
ஆடு/மாடு/பன்னி/கோழியென பலியிட்டு/
இன்று என்னைப் போலவே நீயும் வணங்குகிறாய்/
என் பாட்டன்களான /
மதுரைவீரன்/இருச்சி/காத்தவராயன்/நந்தன் என/
அன்று/ உன் பாட்டனுக்கெதிராய் /
அடங்க மறுத்து/அத்துமீறியதால்/பழிவாங்கப்பட்டவர்கள்/
இன்று/சாமிகளானார்கள்/

இன்று/கழுத்தறுந்தும்/மலம் தின்னும்/உன்னோடு சண்டையிடும்/
நாங்கள் யார் தெரியுமா? உன் பிள்ளைகளின் சாமிகள்.

போராட்டத்தின் வெற்றியை இப்படியும் சொல்லலாம்தான். ஆனால் கடந்த கால வரலாறுகளின்மேல் நின்று பார்க்கையில் இதுதான் உண்மையானதாகவும் இருக்கிறது.

              மூன்றுபேர் இருக்கை ஒன்று அய்ந்துபேர் இருக்கையாய் பயணத்தின் கடைசிவரை வாழ்ந்துவிட்டுப் போனது என்று ஒரு படிமக் கவிதை இத்தொகுப்பில் உண்டு. தனக்கான தாங்கும் சக்தியைத் தாண்டி அதிகமான பளுவையும் தன் வாழ்நாளில் சுமக்கும்  தலித்துகளின் குறியீடாக அந்தத் தொடர்வண்டியின் இருக்கை இருக்கிறது என்பது எத்தகைய எதார்த்தம்.

சேரிக்கு வெளியே/கோணல்/மாணலாய்/
சேரிக்குள் வரமறுத்த/கிராமத்துச் சாலைகள்  
இந்தக் கவிதை நவீனமயமாக்கலில் இருக்கும் சாதீயத்தை நோக்கி தன்  கல்லை எறிகிறது. அது மட்டுமல்ல நகரங்களில் இருக்கும் சாலைகள் நேர்நேராக இருக்க  கிராமத்தில் இருக்கும் சாலைகள் ஏன் கோணல் மாணலாய் இருக்கின்றன? கிராமங்கள் சாதியின் இருண்ட கூடங்கள் என்று புரட்சியாளர் அம்பேத்கர் கூறுகிறார். அப்படியானால் சாதி இந்துக்களின் நிலங்களில் ஊடாக  நேராக வரமுடியாத சாலைகள் சேரிக்குள் வருவதற்கு மிகவும் பிரயத்தனப்பட்டு வளைந்து வளைந்து வரவேண்டியிருக்கிறது.

                   போர்களற்ற உலகத்தினைதான்  ஒரு ஆக்கவாளி எப்போதும் எதிர்ப்பார்ப்பார். ஆனால் உலகில்  எந்த மூலையிலாவது போர் நடந்துகொண்டுதான்  இருக்கிறது. அது வான் வழியாகவும் இருக்கலாம், தரைவழியாகவும் இருக்கலாம், நீர் வழியாகவும் இருக்கலாம். இந்தப் போர்கள் ஒரு நேரத்தில் முடிந்துவிடலாம்.இவை எல்லாவற்றையும் விட முடியாத போராய் சாதிப்போர் இருக்கிறது அது சுடுகாட்டிற்கான வழிக்காக இருக்கிறது என்னும் கவிதை தலித் போரின் தீவிரத்தைக் காட்டுகிறது.

                    சில கவிதைகளில் அதியன்  காட்டுகின்ற கிராமத்து காட்சிகள் எல்லாம் மனதைக் கவ்வுகிற காட்சிகள். ஒரு தேர்ந்த திரைக்காரனுக்கு நிகரானக் காட்சிகள் அவை அவரின் வாழ்வின்மீதானப் பற்றினை அவர் கொண்டிருக்கும் அன்பினைக் காட்டுகிறது.

                    சென்னையில் இருக்கும் அவருக்கும் கிராமத்தில் இருக்கும் அவர் பையனுக்குமான உறவு நிலைகளை அவர்  கவிதைகளில் வாசிக்கிறபோது ஒரு  கவிதைக்காரன்  தன் குடும்பத்திற்காய் உழைக்கும்போது அவன்  உறவுகளை விடுத்து தூர இருக்கும்போது என்ன விதமான மனோநிலையை உருவாக்கும் என்பதை உணரமுடிகிறது.

                     குறிப்பால் சாதியை அறிதல் என்பது இப்போதைய  சூட்சுமம். அதை ஒரு கவிதையில்  போட்டு உடைப்பார் அதியன். மொழியின் சிக்கனத்தோடு  பெரும் வரலாற்றைச் சொல்ல அவருக்கு கவிதை கைக்கொடுத்திருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். அப்போ நீ என நீளும்/ அவன் ஆய்விற்கு முற்றுப்புள்ளியாய்/பறச்சேரி யென்றேன்/ என முடிக்கையில் அவன் ஆராய்ச்சி  எதைத் தேடுகிறது என்பதை உணர்ந்த ஒரு போர்க்குரல் கேட்கிறது. இதனோடு தொடர்புடைய இன்னொரு கவிதை நகர் சார்ந்த வாழ்க்கையில் ஒரு தலித்தின் அச்சம் பதிவாக்கப்பட்டுள்ளது. அண்டை வீட்டுக்காரர்கள் சரியாகப் பேசவில்லையெனில்  உடனே மனத்திற்குள் எழும் அச்சம் அது கண்டுபிடித்துவிட்டார்களோ என்பது. குடியிருப்புகளில் வாழும் தலித்துகள் மாட்டுக்கறி வாங்கி வந்து சுதந்திரமாய் சமைக்கமுடியாது. அதன் வாசம் வெளியே வந்துவிடும் என்பதால் கதவு ஜன்னல்களை எல்லாம் மூடிவிட்டு சமைப்பார்கள் சாப்பிடுவார்கள். இத்தகைய அச்ச வாழ்க்கை எப்படிப்பட்டதாய் இருக்கிறது?

                     உரிமைகளுக்காய் போரிட்ட தாத்தனும் மாமனும் சந்தித்துக்கொள்ளும் ஒரு கவிதை யில் இப்பல்லாம் நம்ம மக்க கொளத்துல இறங்குறாங்க ஆனா கொளத்துலதான் தண்ணியே இல்லையே என்று சொல்கிறபோது சிரிப்புடன் அழுகையும் சேர்ந்தேதான் வருகிறது.   இரட்டைக்குவளை முறையை ஒழித்தோம். இப்போது எல்லாரும் தேநீர் குடிக்க  ஒரேமுறை பயன்படுத்தும்  ஞெகிழிக் குடுவைகளைப் பயன்படுத்துகிறார்கள். நவீன தீண்டாமை.

                      இப்படி எல்லாக் கவிதைகளையும் வாழ்வின் அடையாளத்தையும், அரசியலையும் பேசக்கூடிய கவிதைகளாகக் கொண்டு அதியனின் தொகுப்பு மிளிர்கிறது. கடந்த ஆண்டுகளில் தலித் இலக்கியம் தேவையில்லை எனப் பேசுபவர்களின் பட்டியல் நீள்கிறது. அதேபோல் தலித் இலக்கியம் தற்போது நீர்த்துப்போய்விட்டது எனவும் சொல்கிறார்கள். இதனால் பல தலித் எழுத்தாளர்கள் பொது அடையாளங்களை நோக்கி நகர்கிறார்கள். இச்சூழலில் நம்பிக்கைத் தரக்கூடிய ஒரு கீற்றாக  இன்னும்  எழுதப்படாத எத்தனையோ வாழ்க்கை அப்படியே இருக்கிறது  எனச் சாட்டையைச் சொடுக்கும் வீரியத்துடன் வந்திருக்கும் ஒரே தொகுப்பு  அதியனின் அப்பனின் கைக்களால் அடிப்பவன்.

# #
அப்பனின் கைகளால் அடிப்பவன் – கவிதைத்தொகுப்பு – அதியன் – வெளியீடு: நறுமுகை, 29/35 தேசூர் பாட்டை, செஞ்சி – 604 202. 94861 50013. – விலை: 60 – பக்.80.
அதியனின் அலைபேசி எண்: 99401 61184.

###

 ( இக்கட்டுரை குமுதம் தீராநதி - ஜூலை இதழில் வெளியாகியுள்ளது.பக்:49-50) 
நன்றி! தீராநதி.

கருத்துகள் இல்லை: