சனி, 18 பிப்ரவரி, 2012

செந்தில்பாலாவின் கவிதைகள்


கணக்கு

எல்லாவற்றிற்கும்
ஏன்
எல்லோருக்குள்ளும் கூட
ஒரு கணக்கு இருக்கிறது

மவுனத்துக்குள்ளும்
முணுமுணுப்புக்குள்ளும்
புலம்பலுக்குள்ளும்
ஏன்
வேடிக்கைப்பார்ப்போருக்குள்ளும் கூட
ஒருகணக்கு இருக்கிறது.

அவரவருக்குள்ளும் ஒரு கணக்கு
ஒடிக் கொண்டே இருக்கிறது

எல்லாவற்றிற்கும் கணக்கு பார்க்க முடியாது,
கூடாது
என்பதிலும் ஒரு கணக்கு இருக்கிறது

உள்ளுக்குள் ஒடிக் கொண்டிருக்கும் கணக்கிற்கும்
வெளியில் பேசும் கணக்கிற்கும்
சம்பந்தமே இருக்காது
ஆனால் இருக்கும்.

ஒரு கட்டத்தில் எல்லா கணக்குகளும்
பொய்த்துப் போகின்றன

அனாயாசமாக
கணக்கு 
அது ஒரு கணக்கை போட்டுவிட்டு
மிக இயல்பாக போய்கொண்டே இருக்கிறது.
#



சேகரித்தல்

பிரமாண்டமாக நினைக்க வேண்டும்

என்பதற்காக என்னை நான் சேகரிக்கிறேன்.

இசை பித்தனாக்கிக் கொள்கிறேன்
ஓவியனாக காட்டிக் கொள்கிறேன்
தேர்ந்த பேச்சாளனைப் போல பேசி பழகுகிறேன்
எழுதுகிறேன்
என்னைப் பற்றிவரும் செய்தித்தாள் துணுக்குகளை
வெட்டிக்கொள்கிறேன்
வாய்ப்பு கிட்டுகையில்
பிரபலங்களுடன் புகைப்படங்களாகிறேன்
இதையெல்லாம் செய்து பிரமிப்பூட்டவேண்டுமென்று
எதையெதையேர் படிக்கிறேன்.

என்றாவது ஒரு நாள்
அவள் அம்மா சொல்லப்போகும்
அவதூறுகளை மறுத்துப் பேசும்
என் மகளுக்காகவேதான்
இன்றும்
என்னை நான் சேகரிக்கிறேன்.
#



கவனம்

கேட்பாரற்று கிடப்பது பற்றி எழுதி
யாரிடமாவது படித்துக்காட்டும் பொருட்டு

கவிதை குறித்தும், 
கவிதை களம் குறித்தும்
பேசத் தொடங்கிவிடுகிறேன்

எதிரிலிருப்பவர்கள் கவனம் 
இங்கில்லை என்பதிலிருதுதான்
தெரிந்து கொள்கிறேன்
எனது கவிதையோடே
செத்துக் கொண்டிருக்கிறேன் என்று


#



கருத்துகள் இல்லை: